எம்.பி.பி.எஸ். மட்டுமே மருத்துவப் படிப்பல்ல...!

எம்.பி.பி.எஸ். மட்டுமே மருத்துவப் படிப்பல்ல...!
பிளஸ் டூ முடித்த பின்பு எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவராக வேண்டும் என்பது பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவியர்களின் விருப்பமாகும். பல பெற்றோர்களும் இதையே விரும்புகின்றனர். இருப்பினும் கட்-ஆப் மதிப்பெண் உச்ச நிலையில் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
மருத்துவம் படிக்க அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் கிடைக்காமற் போவதும் ஒரு சில புள்ளி மதிப்பெண்களில்தான் என்பதே இன்றைய நிலையாகும். +2 இரண்டாமாண்டுப் பயிலும் போதே திட்டமிட்டுப் படித்தால், எந்தச் சிக்கலுக்கும் ஆட்படாமல் மனதை ஒருநிலைப்படுத்திப் படித்தால் அரசு மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீட்டில் எந்தப் பிரிவினராக இருந்தாலும் படிப்பதற்கு இடம் பெற்று விடலாம். ஒருவேளை எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால்?
மனம் தளர வேண்டியதில்லை. மருத்துவ படிப்புகளும், மருத்துவம் தொடர்பான படிப்புகளும் நிறைய உள்ளன:
பி.டி.எஸ் (Bachelor of Dental science):
பி.டி.எஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்பிற்கும் 17 வயது நிரம்பியவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். இப்படிப்பின் கால அளவு 5 ஆண்டுகளாகும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல் மருத்துவம் படிக்கக் கட்டணம் குறைவு. ஆனால் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இப்படிப்பை முடிக்க ஏறத்தாழ 12 இலட்ச ரூபாய் வரை செலவாகும். முன்பு மருத்துவம் சார்ந்த தேர்வுகளுக்கு நுழைவுத்தேர்வு இருந்தது. ஆனால் இப்போது அரசால் நடத்தப்படுவதில்லை. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களின் தேவைக்கு ஏற்ப நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்கின்றன.
5 ஆண்டுகள் படிப்பில் 4 ஆண்டுகள் வகுப்பறையிலும் ஓராண்டு பயிற்சியிலும் ஈடுபடவேண்டும். 15,000 மாணவர்கள் இப்படிப்பில் வருடந்தோறும் சேர்க்கப்படுகின்றனர்.
பி.எச்.எம்.எஸ் (Bachelor of Homeopathic medicine & surgery):
பி.எச்.எம்.எஸ். எனப்படும் ஹோமியோ மருத்துவம் மற்றும் சிகிச்சைப் படிப்பிற்கு 5.5 ஆண்டுகள் தேவைப்படும். இப்படிப்பிற்கு ஏறத்தாழ நான்கு இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.
பி.எச்.எம்.எஸ் படிப்பு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மாற்றுப்படிப்பாகத் திகழ்கிறது. எம்.பி.பி.எஸ் படிப்பில் இடம் கிடைக்காதோர் இப்படிப்பில் சேர்கிறார்கள். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருத்துவமுறை இதுவாகும். 5.5 ஆண்டு படிப்பில் ஒரு வருடம் பயிற்சிக்குரிய காலமாகும்.
பி.எ.எம்.எஸ் (Bachelor of Ayurvedic medicine and surgery):
பி.எ.எம்.எஸ் எனப்படும் ஆயுர்வேத மருத்துவம் பயில விரும்புவோர் 5.5 ஆண்டுகள் படிக்க வேண்டும். ஏறத்தாழ மூன்று இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.
இந்தப் படிப்பு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு மாற்றாக உள்ளது. இந்திய அரசின் மத்திய மருத்துவக் கவுன்சில் இப்படிப்பை கவனிக்கிறது. மூலிகைகள் தொடர்பான மருத்துவ முறையாகும். 5.5 ஆண்டுப் படிப்பில் ஓராண்டு பயிற்சி காலமாகும்.
பி.யு.எம்.எஸ் (Bachelor of unani medicine):
எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு இடம் கிடைக்காதோருக்கு மாற்று மருத்துவப் படிப்பாக பி.யு.எம்.எஸ் எனப்படும் யுனானி மருத்துவப் படிப்பு உள்ளது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளை இந்திய அரசின் மத்திய மருத்துவக்குழு கவனிக்கிறது.
வழக்கமான 10 ஆம் வகுப்பு, +2 கல்வித் தகுதி, முடித்திருக்க வேண்டும். உருது நுழைவுத் தேர்விலும், இந்தியில் 8ஆம் வகுப்பிற்குறிய சான்றிதழ் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பிற்குரியக் கால அளவு 5.5 ஆண்டுகளாகும்.
பி.என்.ஒய்.எஸ் (Bachelor of Naturopathy and yoga science):
பி.என்.ஒய்.எஸ் எனப்படும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவப் படிப்புக்கு கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 45 ஆயிரம் முதல் அமையும். நிறுவனங்களுக்கு ஏற்பக் கட்டண விகிதங்களும் மாறுபடும். இப்படிப்பிற்கு 5.5 ஆண்டுகள் தேவைப்படும்.
பி.வி.எஸ்சி & எ.எச் (Bachelor of veterinary science & animal Husbandry):
பி.வி.எஸ்சி எனப்படும் கால்நடை மருத்துவப் படிப்பு 5 ஆண்டுகளில் நிறைவடையும். நிறுவனத்தின் தன்மைக்கேற்ப கட்டணங்கள் மாறுபடும். மருத்துவக் கல்வியின் ஒரு பகுதியாக பி.வி.எஸ்சி & எ.எச் உள்ளது. இந்திய கால்நடை மருத்துவக் குழு இப்படிப்பை கண்காணிக்கிறது. கால்நடைகளின் உயிர்க்கூறுகள் குறித்துப் படிப்பது இக்கல்வியாகும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 30-80 இடங்கள் உள்ளன. இப்படிப்பைப் படித்தால் தனியார், அரசு கால்நடை மருத்துவமனைகளில் பணி புரியலாம்.
பி. எஸ்.எம்.எஸ் (Bachelor of Siddah medicine):
எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு இடம் கிடைக்காதோருக்கு மாற்று மருத்துவப் படிப்பாக பி. எஸ்.எம்.எஸ் எனப்படும் சித்தா மருத்துவப் படிப்பு உள்ளது.
ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளை இந்திய அரசின் மத்திய மருத்துவக்குழு கவனிக்கிறது.
நவீன உலகில் மனஅழுத்தம் அதிகமாகி வருவதும் வாழ்க்கை மாற்றமும் இப்படிப்பிற்கான தேவையை அதிகரித்துள்ளது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது, உணவு நடைமுறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உள்ளிட்டவை இப்படிப்பாகும். இதன் 5.5 ஆண்டு படிப்பில் ஓராண்டு பயிற்சிக் காலமாகும். பட்டயம், இளநிலை, முதுநிலை படிப்புகளை பல நிறுவனங்கள் வழங்குகின்றன. இப்படிப்பு இயற்கை உணவுமுறை குறித்து குறிப்பிடுகிறது. இப்படிப்பைப் படித்தால் தனியார், அரசு மருத்துவமனைகள் பணிபுரியலாம். வேறு சில நிறுவனங்களிலும் பணியாற்றலாம். இந்தியாவில் 10 கல்லூரிகள் இயற்கை மருத்துவம் கற்றுத் தருவதற்கு உள்ளன.
இந்தப் படிப்புகள் அனைத்துக்குமே கல்வித்தகுதி: 10, +2 படித்திருக்க வேண்டும்.
நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.
+2 படிப்பில் அறிவியல் பிரிவுப் பாடம் படித்திருக்க வேண்டும். உயிரியல், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
17 வயது நிரம்பியவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி என மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன.
இதேபோல 5 தனியார் சித்த மருத்துவ கல்லூரிகள், 3 தனியார் ஆயுர்வேத கல்லூரிகள், 8 தனியார் ஓமியோபதி கல்லூரிகள் 4 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் என மொத்தம் 20 தனியார் கல்லூரிகள் இருக்கிறது. 6 அரசு கல்லூரிகளில் 336 இடங்கள் மற்றும் 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் உள்ளன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி