பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC, Other Backward Class) இட ஒதுக்கீட்டில், கிரீமிலேயர் என்றால் என்ன?

கிரீமிலேயர் என்றால் என்ன?இட ஒதுக்கீட்டில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (OBC, Other Backward Class) ஒரு பகுதியினரை (வசதியானவர்களை) இவ்வாறு அழைக்கின்றனர்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உயர்பதவிகளில் இருப்பவர்கள், அதிக வருவாய் ஈட்டுபவர்கள் ஆகியோரை வளமானவர்கள், அதாவது கேக்கின் மீது இருக்கும் கிரீமைப் போன்றவர்கள் என்று பிரித்து அவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதில்லை.
இதற்கு எதிர்பதம், நான்-கிரீமிலேயர் (Non - Creamy layer). இந்த வகையை சேர்ந்த OBC-யினர் இட ஒதுக்கீட்டிக்கிற்கு தகுதியானவர்கள்.
கிரீமிலேயர் உருவான வரலாறு பற்றி...
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கிரீமிலேயர் என்ற ஒன்று இல்லை. ஆனால், 1990-ம் ஆண்டில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க அப்போதைய பிரதமர் வி.பி.சிங் ஆணையிட்டார். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை திருப்திப்படுத்தும் நோக்குடன் உருவாக்கிய ஏற்பாடுதான் கிரீமிலேயர் ஆகும். 16.11.1992 இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கினார்கள்.
அதாவது, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கி இருக்கிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உயர்பதவிகளில் இருப்பவர்கள், அதிக வருவாய் ஈட்டுபவர்கள் ஆகியோரை வளமானவர்கள், அதாவது கேக்கின் மீது இருக்கும் கிரீமைப் போன்றவர்கள் என்று கருதி அவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்பது தான் 9 பேர் கொண்ட அமர்வில் இடம் பெற்றிருந்த பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் பொருள் ஆகும்.
குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் உள்ள குரூப் 1, 2 ஆகிய அந்தஸ்துடைய அதிகாரிகள், பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் ஆகியோரும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் கூடுதலாக இருப்பவர்களும் கிரீமிலேயர் என்று அழைக்கப்படுவர். அவர்களின் குழந்தைகளுக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கிடைக்காது.
மண்டல் கமிஷன் வழக்கில் 1992ஆம் ஆண்டு தீர்ப்பளித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தது. ஆனால், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது எனக் கூறி ‘கிரீமிலேயர்’ என்ற பொருளாதார அளவுகோலை உருவாக்கியது. அதனடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வரம்பு உயர்த்தப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. அவ்வாறு உரிய காலத்தில் அந்த வரம்பு உயர்த்தப்படவில்லை.
2008ஆம் ஆண்டு 4.5 லட்சம் என ஐக்கிய முன்னணி அரசு அந்த வருமான வரம்பை உயர்த்தியது. அதன்பின்னர் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அந்த வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்துமாறு கடிதம் அளித்து வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் 2013 மே மாதத்தில் கிரீமிலேயர் வரம்பை ரூ.6 லட்சமாக மட்டும் உயர்த்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டது. அது 2017ஆம் ஆண்டு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.
கிரீமிலேயர் வரம்பை இந்த ஆண்டு சீராய்வு செய்யவேண்டிய நிலையில் அதனை ரூ.16 லட்சமாக உயர்த்தவேண்டும் என இப்போது மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதற்கு எந்த பதிலையும் சொல்லாத மத்திய அரச, கிரீமிலேயரைக் கணக்கிடும்போது பெற்றோரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தையும் சேர்த்து அரசு திருத்தம் கொண்டுவருகிறது. இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இட ஒதுக்கீடு பெற முடியாமல் ஆக்கப்படுவர்.
எதிர்ப்பு
கிரீமிலேயர் வரம்பைக் கணக்கிடுவதில் ஓபிசி பிரிவினரின் ஊதியத்தையும் வருவாய்க் கணக்கில் சேர்ப்பது சமூக அநீதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை ஒழிப்பதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
''பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக தேசிய அளவிலும், மாநில அளவிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது போராடி பெற்ற உரிமை ஆகும். இந்த உரிமையை பறிக்கவும், அதை சம்பந்தப்பட்ட மக்கள் அனுபவிப்பதை தடுக்கவும் சதிகள் நடக்கின்றன. ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லை. எனவே, அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
ஓபிசி வகுப்பினரில் கிரீமிலேயர் (Creamy-layer) கணக்கீட்டிற்கு சம்பளத்தை அளவீடாக நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (OBC) கிரீமிலேயரை வகைப்படுத்த வருவாய் ஆய்வு வரம்பில் சம்பளத்தைச் சேர்ப்பதைக் கைவிட வேண்டும் என்றும் கிரிமிலேயர் குறித்து பி.பி.சர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டு உரிமையை முற்றாக ஒழிப்பதற்கான சதியாகும். இந்த சமூக அநீதியை மத்திய அரசு உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Latest update 15-3-2023
இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை: கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு இன்று மத்திய அரசு பதில்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை நீக்கும் திட்டம் இல்லை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் திமுக எம்.பியான கனிமொழி என்.வி.என்.சோமு, ‘இதர பிற்பட்டோர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது தற்போது கடைபிடிக்கப்படும் கிரீமிலேயர் நடைமுறையால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த நடைமுறை நீக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் நாராயணசாமி அளித்த பதில்: "இதர பிற்பட்டோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தற்போது வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது, அதே பிரிவினரில் பொருளாதார ரீதியாக முன்னேறியதாக கண்டறியப்படும் நபர்களுக்கு அந்த இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்படுவதில்லை. இந்த நடைமுறையையை மாற்றும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை.
ஆனாலும், இதர பிற்பட்டோர் பிரிவினரை சமூக பொருளாதார ரீதியாக முன்னேற்ற பல திட்டங்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசுப் பணிகளில் நேரடி நியமனங்கள் நடக்கும்போதும்; மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயில வரும்போதும் இதர பிற்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அத்துடன், இதர பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை; கல்விக் கடன் மற்றும் வெளிநாட்டு படிப்புக்கென பெறும் கடன் தொகைக்கான வட்டியில் சலுகை; இப்பிரிவு மாணவ மாணவிகளுக்கு தனி தங்கும் விடுதிகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் முன்னுரிமை; தொழில் தொடங்கும் நேரத்தில் முதலீட்டுக்கான உதவி; தொழில் தொடங்க குறைந்த வடியில்கடனுதவி என பல சலுகை மற்றும் உதவிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த பற்பல ஆண்டுகளாக இதர பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட வேண்டிய மத்திய அரசுப் பணி இடங்கள் கணிசமாக உயர்ந்திருந்தது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் மூலமாக அந்த இடங்களின் எண்ணிக்கை சரியாக கணக்கிடப்பட்டு 2016-2021 கால கட்டத்தில் 95,563 பணியிடங்கள் இந்தப் பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது" என்று மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி