தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் தமிழ்நாட்டில் 3,167 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 16 ஆகும்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது வரமபு 18 -40க்குள் இருக்க வேண்டும்.
பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள் (10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு முறை: எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்ச்சி மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்.
ஊதியம் மற்றும் படிகள்: கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM - BranchPostmaster BPM) பதவிக்கு - ரூ. 12,000 முதல் 29,380 வரை ஊதியம் வழங்கப்படும். உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster - ABPM /Dak Sevak) - ரூ. 10,000 முதல் 24,470/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? இப்பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகப்புப் பக்கத்தில், Registration- ஐ கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண், இதர தொடர்பான விவரங்கள் மற்றும் தகவல்களை அளிக்க வேண்டும். இறுதியாக, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும்.
பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.