இந்திய தபால் துறை பற்றி ஒரு சாமானிய மனதனின் கட்டுரை

Message from a common man : இந்திய தபால் துறை :நான் மிகவும் மதிக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் இது. உலகிலேயே மிகச் சிறப்பான கட்டமைப்பும், அர்ப்பணிப்பும் கொண்ட நிறுவனம் இது என்று கூட நான் சொல்வேன். சின்ன வயசிலே நான் பல பரிசோதனைகளை செய்து பார்த்த அனுபவத்தில் இதை சொல்கிறேன். 

நினைவு 1 : 
அட்லஸ் எடுத்து வடக்கே ஒரு சின்ன ஊரின் பெயரைத் தேர்ந்தெடுப்பேன். 15 பைசாவுக்கு போஸ்ட் கார்டை வாங்கி அந்த ஊரில் ஒரு கற்பனைக் கேரக்டரை உருவாக்கி, உடைந்த ஆங்கிலத்தில் எங்க ஊர், கோவில் பற்றி, அன்றைக்கு மயில் பார்த்தது, வீட்டுப்பாடம் எழுதியது எல்லாம் டைரி போல எழுதி தபால் பெட்டியில் போடுவேன். நாட்கள் மிக மிக மெதுவாக நகர்ந்த காலம் அது. பல நாள் கழித்து அந்த தபால் கார்டு மேலே பற்பல முத்திரைகளை வாங்கி குடுகுடுப்பைக்காரனின் ஒட்டுப்போட்ட துணி போல எனக்கே திரும்ப வரும். addressee not found என முத்திரை தாங்கி.. நான் கொடுத்த 15 பைசாவுக்கு மதிப்புத் தந்து அந்த அட்டையை பல ஆயிரம் மைல்கள் பற்பல ஊழியர்கள், பல இடங்களுக்கு எடுத்துச் சென்று ஆளைத் தேடி கண்டு பிடிக்க முடியாமல், அதை வருத்தத்துடன் எனக்குச் சொல்லி மீண்டும் என்னிடமே சேர்க்கும் அதி அற்புதமான பொதுத்துறை நிறுவனம் அது. 

நினைவு..2
ஒருமுறை காஷ்மீர் பார்டருக்கு ராணுவ ஜெனரல், காஷ்மீர் பொத்தாம் பொதுவா விலாசம் எழுதி, எல்லையில் எச்சரிக்கையா இருங்க. குளிர் அதிகமா இருந்தால் நீலகிரி தைலத்தை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடிச்சால் சளி பிடிக்காது., எங்க அம்மா அப்படித்தான் என்னை செய்ய சொல்வாங்க என அறிவுரை எல்லாம் எழுதி அஞ்சல் அட்டையை அனுப்பினேன். பல வாரங்கள் கழித்து என் மனசுலே இருந்த பெயர் கொண்ட அந்த ராணுவ ஜெனரல் இங்கில்லை என்றும், ஆனாலும் இந்திய ராணுவ வீரர்களின் மீது நீங்களும், உங்க அம்மாவும் கொண்ட அக்கறைக்கு நன்றி என சொல்லி ஒரு மேஜர், பதில் கடிதமும், காஷ்மீர் பனிமலையின் புகைப்படமும் அனுப்பி வைத்ததும் நினைவில் இருக்கு. அதெல்லாம் அற்புதமான இளம்வயது நினைவுகள். 

நினைவு 3 :  
அப்பா இறந்த பல ஆண்டுகள் கழித்து எதையோ தேடியப்போது ரப்பர் பேண்ட் சுற்றப்பட்ட ஒரு பழைய கவர் கிடைத்தது. அதன் உள்ளே 60 களில் அப்பா வாங்கிய பல 50, 100 ரூபாய் தபால்துறை சேமிப்புப் பத்திரங்கள். பெரும்பாலும் செல்லரிச்சுப் போய் கிடந்தது. தலைமைத் தபால் நிலையத்தில் என் நண்பனோட அப்பாதான் முக்கிய அலுவலர். அவரிடம் கொண்டு போய் இது என்னன்னு பாருங்கப்பா என தந்துட்டு வந்துட்டேன். அவர் அதில் உள்ள எண்கள், முத்திரைத் தேதி ஆகியவைகளைக் கொண்டு பழைய லெட்ஜர் எல்லாம் தேடிப் பிடிச்சு அசல் பதிவை எடுத்து ஒரு மாதம் கழித்து என்னை அழைத்து ஒரு செக் தந்தார். அது 90,000/- ரூபாய்க்கானது. அப்போது அது பெரிய தொகை. அதைவிட தனது வாடிக்கையாளர் தன்னை நம்பி டெபாசிட் செய்த பணத்தை தெளிவற்ற ஆதாரங்களைக் கொண்டு தேடி எடுத்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வாரிசிடம் ஒப்படைத்த அந்த நேர்மைதான் எனக்கான புத்திக் கொள்முதல்.  

தபால்துறை ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் பெருமைப்படலாம்.
இதை எழுதியவர்.. திருவண்ணாமலை SKP Karuna

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி