ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்!! இவரின் முழு பின்னணி தெரியுமா உங்களுக்கு?

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்!!
இவரின் முழு பின்னணி தெரியுமா உங்களுக்கு?


சுகாதார செயலராக திரு. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ராதாகிருஷ்ணன் நடவடிக்கைகள் மூலம் சென்னை மாநகரம் விரைவில் கொரோனா இல்லாத நகராக மாறும் என பலரும் சமூக வலைதளங்களில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அவர் யார் அவருடைய கடந்த கால பணிகள் என்ன, அவரின் சிறப்புகள் என்ன என்பது பற்றியெல்லாம் இங்கே பார்க்கலாம்.

பெங்களூருவில் பள்ளி

ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர் என்றாலும் பள்ளி பருவத்திலேயே பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்திருக்கிறார். காரணம் அவரது தந்தை பாதுகாப்பு படையில் (Defence) பணி புரிந்தது. தந்தையின் பணியிடமாற்றம் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த அவர் தனது பள்ளிப்படிப்பின் முக்கிய வகுப்புகளை பெங்களூரில் பயின்றார். பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு கால்நடைகள் மீது இருந்த ஆர்வம் காரணமாக (வெட்னரி சயின்ஸ்) கால்நடை மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

மருத்துவர் டூ ஐ ஏ எஸ்

கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த அவருக்குள் ஐ ஏ எஸ் ஆக வேண்டும் என்ற தீப்பொறி எழுந்ததை அடுத்து அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு, தான் நினைத்தபடியே ஐ ஏ எஸ் அதிகாரியாகினார். இளம் வயது முதலே பல மாநில மக்களுடன் இணைந்து வாழ்ந்த அனுபவம் இருந்ததால் மக்களை அணுகும் விதத்தில் ஒரு புதுமையை கொண்டுவந்தார். அதிகாரிகளுக்கே உரிய மிடுக்கை தூக்கி வீசிவிட்டு மக்களுடன் மக்களாக அவர்களுக்கு பணி செய்யத் தொடங்கினார்.

பழைய தொடர்புகள்

சேலம், தஞ்சை, நாகை என பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய இவர் இன்றும் அந்த மாவட்டங்களில் உள்ள பல கிராம மக்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அவர்களும் பணிநிமித்தமாக சென்னைக்கு வர நேர்ந்தால் பழைய பாசத்துடன் கலெக்டர் சார் உங்களை பார்க்க வருகிறேன் எனக் கூறிவிட்டு ராதாகிருஷ்ணனை சந்திக்காமல் செல்வதில்லை. இந்தளவிற்கு அடித்தட்டு மக்களுடனான தொடர்பை தொடர்ந்து பேணி வருகிறார்.

பள்ளி தீ விபத்து

2004-ம் ஆண்டு தஞ்சை மாவட்ட ஆட்சியராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பணியாற்றிய போது தான், ஜூலை 16-ம் தேதி கும்பகோனம் பள்ளி தீ விபத்து ஏற்பட்டு 90 குழந்தைகள் தீயில் மாண்ட சோக நிகழ்வு நடந்தது. ஒட்டுமொத்த இந்திய தேசத்தையே உலுக்கிய அந்த நிகழ்வை மிக நிதானமாக கையாண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பாராட்டை பெறுகிறார் இவர். அதுவரை பத்தோடு பதினொன்றாக இருந்த ராதாகிருஷ்ணன் அந்த நிகழ்வுக்கு பிறகு லைம்லட்டுக்கு வரத் தொடங்குகிறார்.

தஞ்சை டூ நாகை

அதே 2004-ம் ஆண்டு எழுந்த சுனாமி பேரலையால் நாகை மாவட்டமே சிதைந்து போனது. உருகுலைந்த நாகையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் பொறுப்பை இவரிடமே ஒப்படைக்கிறார் ஜெயலலிதா. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நாகையை சுனாமி தாக்கிய நிலையில் அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த வீரசண்முகமணி அன்றைய தினம் வெளியூரில் இருக்கிறார். இதனால் அருகாமை மாவட்டமான தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன் களத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான சடலங்களை சற்றும் சளைக்காமல் மீட்டு உடனடியாக தொற்றுநோய் தடுப்பு பணிகளை முடுக்கிவிடுகிறார்.

பில் கிளிண்டன் பாராட்டு

ராதாகிருஷ்ணனின் இந்த துரித நடவடிக்கைகளை பார்த்து ஜெயலலிதா அவரை பாராட்டியதுடன் நாகை மாவட்ட ஆட்சியராக உடனடியாக இடமாற்றம் செய்தார். வருவாய்துறை ஊழியர்களே நடந்து செல்ல யோசித்த தருணத்தில் வாகனங்களை தவிர்த்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நடந்தே சென்று ஆய்வு செய்து அது குறித்த தகவல்களை மின்னல் வேகத்தில் அரசுக்கு அனுப்பி வைத்தார். இதுமட்டுமல்லாமல் நிவாரண பணிகளிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் ராதாகிருஷ்ணன் காட்டிய வேகத்தை பார்த்து அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனே இவரை பாராட்டினார்.

இளம் அதிகாரி

அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் பாராட்டு ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை உலக அளவில் புகழடையச் செய்தது. இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வேகம் என்ற தலைப்பில் சர்வதேச பத்திரிகைகள் கூட அப்போது அவரை பற்றி சிலாகித்து எழுதியது. இவரின் நிர்வாகத்திறமைக்கு கிடைத்த பரிசாக, ஐ.நா.சபையின் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண தலைவர் பதவி கிடைத்தது. இதையடுத்து டெல்லிக்கு சென்ற அவர் மீண்டும் 2012-ல் தமிழக பணிக்கு சுகாதாரத்துறை செயலாளராக திரும்பினார்.

திரும்ப அழைப்பார்

சுமார் 8 ஆண்டுகளாக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், டெங்கு, பன்றிக்காய்ச்சல், உள்ளிட்ட பல நெருக்கடி நிலைகளை சாதுர்யமாக கையாண்டுள்ளார். இந்தக்காலத்தில் முன்பின் தெரியாத எண்ணாக இருந்தால் ஒரு பிடிஓ (வட்டார வளர்ச்சி அலுவலர்) கூட அழைப்பை ஏற்க யோசிக்கும் நிலையில், தன்னை அழைப்பவர்களிடம் பாந்தமாக பதிலளிக்கக் கூடிய பண்பை கடைபிடிக்கிறார் ராதாகிருஷ்ணன். மீட்டிங், ஆய்வு என்று இருந்தாலும் கூட அதை முடித்துவிட்டு தனது அலைபேசியில் இருக்கும் மிஸ்டுகாலை பார்த்து திரும்ப அழைத்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

எளிமை

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ராதாகிருஷ்ணனை எப்போதும் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எளிமையாக அணுக முடியும் என்பதால், இப்போது கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக அவர் நியமனம் செய்யப்பட்டதற்கு பாராட்டும், வரவேற்பும் கிடைத்துள்ளது.

முக்கிய குறிப்பு:-
முன்னாள் குடியரசு தலைவர் வெங்கட்ராமன் அவர்களின் பேரன் என்பதுவே...!!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி