ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் (வயது 88) அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி

14-05-2020: ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் (வயது 88) அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளரும், இரண்டுமுறை தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்த ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவருமான பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்கொணா அதிர்ச்சி அடைந்தோம். தமிழகத்தில் ஆசிரியர் இயக்கங்கள் , அரசு ஊழியர் இயக்கங்கள் மட்டுமல்லாது திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் மத்தியிலும் நன்கு அறிமுக பலம் கொண்டவர்.
85 ஜாக்டி போராட்டம், 88 ஜாக்டி ஜியோ போராட்டம், 2003 ஜாக்டோ ஜியோ டெஸ்மா போராட்டங்களில் முன்னணியில் நின்று போராடி சிறையேகியவர். 2003 டெஸ்மா போராட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டவர். க.மீனாட்சிசுந்தரம் அவர்களும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளருமான மறைந்த ச.அப்துல் மஜீத் அவர்களும் புழல் சிறையில் இருந்தவர்கள். ஐபெட்டோ அகில இந்திய செயலாளரும் அவர்களுடன் புழல் சிறையில் இருந்தவர். சிறையில் இருந்த நாட்களில் கூட அன்றாடம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சியினை காலை-மாலை செய்து வந்தவர். அறிக்கைகள் என்றாலே மீனாட்சி சுந்தரமா? என்று கேட்பார்கள். 88 வயதிலும் ஆசிரியர் மன்ற துணைவன் பத்திரிகையினை அவருடைய நேரடிப் பார்வையிலேயே நடத்தி வந்தவர். தூய தமிழில் நாட்குறிப்பினை, நாட்காட்டியினை மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் தொடர்ந்து வெளியிட்டு வந்தவர். ஜாக்டோ-ஜியோ கூட்டங்களில் கூட தவறாமல் பங்கேற்று குறிப்புகளுடன் கருத்துக்களை பதிவு செய்பவர். அண்ணன் மீனாட்சிசுந்தரம் அவர்களின் மறைவு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு மட்டும் ஈடுசெய்ய முடியாத இழப்பல்ல ஒட்டுமொத்த ஆசிரியர் இயக்கங்கள், ஜாக்டோ-ஜியோவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி