பத்தாவது படித்தாலே அஞ்சல்துறையில் வெல்லலாம்!

செல்வஜோதி,              சாந்தி,               ஆனந்த்
அஞ்சல்துறையில் ஆண்டுதோறும் எட்டுப் பிரிவுகளில் தலா ஓர் ஊழியரைச் சிறந்த பணித்திறன் அடிப்படையில் தேர்வுசெய்து, `தாக் சேவா விருது’ வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் `சிறந்த அஞ்சல் அதிகாரி' விருது வென்றார் செல்வஜோதி.

``மதுரை மாவட்டம் வயலூர் அஞ்சல் நிலையத்துக்கு, 2014-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது கால்நடைகளைப் பராமரிக்கும் இடமாகத் தான் இருந்தது அந்த அஞ்சல் நிலையம். அதனால், அஞ்சல் நிலைய சேவைகள் பற்றி, தொடர்ந்து ஒவ்வொரு வீட்டுக்கும் போய் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். கிராமப்புறப் பெண் குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படும் `செல்வமகள்’ திட்டத்துல புதுக்கணக்கைத் தொடங்க, அப்போது டெபாசிட் தொகையாக 1,000 ரூபாயைக் கட்டணும். அந்தத் தொகையை மக்களால் கட்ட முடியலை. உயரதிகாரிகளின் உதவியுடன் நிதி திரட்டி, கிராமத்தில் பெண் குழந்தைகள் உள்ள எல்லா வீட்டினரும் செல்வமகள் திட்டத்துல கணக்கு தொடங்க ஏற்பாடு செய்தேன்” என்கிற செல்வஜோதி, கிராம அளவிலான அஞ்சல் நிலைய சேவைகள் அனைத்தையும் எல்லா வீட்டினரையும் பயன்படுத்தவைத்து, `சம்பூர்ணா கிராமம்’ என்ற பாராட்டையும் வயலூர் கிராமத்துக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.


`சிறந்த பெண் பணியாளர்’ விருதை வென்றிருக்கும் சாந்தி, ``1999-ம் பணியில் சேர்ந்த நான், அஞ்சல் நிலையத்துல பல்துறைகளுக்கான விண்ணப்ப விநியோகம் மற்றும் கொரியர் அனுப்பும் பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றினேன். சென்னை நகர மண்டல அஞ்சல்துறைத் தலைவரின் உதவியாளராகவும் செயல்பட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.


``அஞ்சல்துறையில் இந்திய அளவில் 19 சதவிகிதம், தமிழக அளவில் 33 சதவிகிதம், சென்னை நகர மண்டலத்தில் 36 சதவிகிதம் என்கிற அளவில் பெண்கள் பணியாற்றுகிறார்கள். குறிப்பாக, கிராம அஞ்சல் அதிகாரிகளில் 43 சதவிகிதம் பெண்கள்தாம். ஆண்டுதோறும் எங்கள் துறையில் நடத்தப்படும் ஜி.டி.எஸ் (Gramin Dak Sevak) முதல் ஐ.பி (Inspector Post) வரை ஐந்து நிலைகளுக்கான போட்டித்தேர்வுகளிலும் பெண்களே அதிகம் தேர்வாகிறார்கள். தமிழகத்திலுள்ள 45 பிராந்தியங்களில், ஒவ்வொரு பிராந்தியத்திலும் முழுக்க முழுக்க பெண் பணியாளர்களைக்கொண்ட ஓர் அஞ்சல் நிலையம் படிப்படியாக அமைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் பத்தாவது படித்தவர்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் அஞ்சல்துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்” என்கிறார் சென்னை நகர மண்டல் அஞ்சல்துறைத் தலைவர் ஆனந்த்.


அவள் விகடன் (10/12/2019) இதழில்!


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி