தமிழகத்தில் தற்போதுள்ள 32 மாவட்டங்களுடன் கூடுதலாக செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ராணிப்பேட்டை புதிய மாவட்டங்களாக அறிவிப்பு

தமிழகத்தில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், இந்த மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் இடம்பெறும் என்றும் எல்லைகளும் வரையறுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், தர்மபுரி, கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என 32 மாவட்டங்களாக இருந்தது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டமாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டமும் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமாக பிரிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தின உரையில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார். புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், இன்னும் இந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகள் (எல்லைகள்) இணைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டங்களில் எந்தெந்த கோட்டங்கள் மற்றும் தாலுகாக்கள் இடம்பெறும் என்று எல்லைகளும் வரையறுக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக வருவாய் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது:

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய மூன்று கோட்டங்களும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர் ஆகிய 8 தாலுகாக்கள் இணைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், பெரும்புதூர் ஆகிய 2 கோட்டங்களும், காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர், வாலாஜாபேட், குன்றத்தூர் ஆகிய 5 தாலுகாக்கள் காஞ்சிபுரம் மாவட்டத்துடன் செயல்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய வருவாய் கோட்டங்கள் இடம் பெறுகிறது. தென்காசி புதிய மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் ஆகிய 8 தாலுகாக்கள் இணைக்கப்பட்டுள்ளன. தென்காசி வருவாய் கோட்டம் 5 தாலுகாக்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் 154 வருவாய் கிராமங்கள் இடம் பெறுகின்றன. அதாவது செங்கோட்டை தாலுகாவில் 19 கிராமங்கள், தென்காசியில் 45 கிராமங்கள், கடையநல்லூரில் 31 கிராமங்கள், வீரகேரளம்புதூர் தாலுகாவில் 24 கிராமங்கள் மற்றும் ஆலங்குளம் தாலுகாவில் 35 கிராமங்கள் இதில் அடங்கும்.

தென்காசி தாலுகா 4 குறு வட்டங்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது தென்காசி, கல்லூரணி, கடையம், ஆழ்வார்குறிச்சி ஆகிய 4 குறுவட்டங்கள் இருக்கும். தென்காசி குறுவட்டத்தில் 11 கிராமங்களும், கல்லூரணியில் 9 கிராமங்களும், கடையத்தில் 12 கிராமங்களும், ஆழ்வார்குறிச்சியில் 13 கிராமங்களும் என மொத்தம் 45 வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுபோல் சங்கரன்கோவில் தாலுகா 5 குறு வட்டங்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் குறுவட்டத்தில் 6 கிராமங்களும், குருக்கள்பட்டியில் 9 கிராமங்களும், சேர்ந்தமங்கலத்தில் 5 கிராமங்களும், கரிவலம்வந்தநல்லூரில் 9 கிராமங்களும், வீரசிகாமணியில் 6 கிராமங்களும் என மொத்தம் 35 வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, சேரன்மகாதேவி, திசையன்விளை ஆகிய 8 தாலுகாக்கள் இடம் பெற்றிருக்கும். பிரிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மகாதேவி ஆகிய இரு வருவாய் கோட்டங்கள் இடம் பெறும்.

* அடுத்து வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும், வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய 6 தாலுகாக்கள் இடம்பெறும். புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் ராணிப்பேட்டை, அரக்கோணம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், வாலாஜாபாத், ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய தாலுக்காக்களும் இடம்பெறும். மற்றொரு புதிய மாவட்டமான திருப்பத்தூரில் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும், திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி, ஆம்பூர் ஆகிய 4 தாலுக்காகளும் இடம்பெறும்.

* விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கள்வராயன்மலை ஆகிய 6 தாலுகாக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டும். அதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும், விழுப்புரம், விக்கிரவாண்டி,வானூர், திருவெண்ணைநல்லூர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், கண்டாச்சிபுரம் ஆகிய9 தாலுகாக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி