எங்க ஊர் தபால்காரர்…

எங்க ஊர் தபால்காரர்…


எங்க ஊர் தபால்காரார். இவர் எங்கள் ஊர் இல்லை. ஆனாலும் எங்கள் ஊரில் ஒருவராகிப் போனார் என்பதை விட குடும்பத்தில் ஒருவராகிப் போனார் என்பதே உண்மை.

தியாகி வள்ளியம்மையால் புகழ்பெற்ற எங்கள் தில்லையாடி கிராமத்துக்கு சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் தபால்காரராக வந்தார் நாப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்துள்ள நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த கு.பரமசிவம். நேற்று முன்தினம் இம்மண்ணின் தமயனாக துறையில் ஓய்வு பெற்றுச் சென்றார். ஊர் கூடி விழா எடுத்தது.

இன்றைய நவீன தொழில் நுட்பக் காலத்திலும் கூட இந்த ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும்- அஞ்சலகத்திற்கும் இடையே ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருந்து கொண்டிருக்கிறது என்றால் அது அவரால்தான் சாத்தியமானது.

இப்படிப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்ட காலத்தில் ஒரு தபால்காரர் ஒய்வுக்கு ஊர் கூடி விழா எடுத்ததும் இங்கேயாகத்தான் இருக்க முடியும். விழாவில் பாராட்டி பேசிய எவரிடமும் சம்பிரதாய பேச்சு இல்லவே இல்லை.

ஓர் அரசு ஊழியர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்ததோடு, ஒரு தனி மனிதன் பிறரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அணுக வேண்டும் என்பதற்கும் உதாரணமானவர். கையூட்டு என்பது அறவே இல்லை. தொடக்கக் காலத்தில் அவர் கொடுக்கும் மணி ஆர்டர் தொகைக்கு டிப்ஸ் கொடுக்க முன் வந்து நானம் கொண்டு கைகளை மடக்கிக் கொண்டோர் பலருண்டு. எவ்வளவு வெயில், மழையிலும் அந்த மிகப்பெரும் கிராமத்தை இப்போது வரை சைக்கிளில்தான் சுற்றி வந்தார்.

முதியோர், பெண்கள், விபரமறியாதோர் என எல்லா தரப்பினருக்கும் கேட்கும் உதவியை சிறிதும் அலுப்பில்லாமல் தமது பணியை தாண்டி முகம் கோணாமல் செய்தவர். உதவி கேட்பவருக்குத்தான் சற்று கூச்சமாக இருக்கும். பணம் செலுத்த பார்ம் பூர்த்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அவரிடம் பெறுவதற்கென்றே அஞ்சலக வாயிலில் யாரேனும் சிலர் காத்திருக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். அஞ்சலகத்திற்கு நாம் சென்று செய்ய வேண்டிய பணிகளையும் இயலாதோருக்கு அவரே சென்று முடித்து வீடுகளில் கொண்டு வந்து சேர்ப்பித்து விடுவார்.

முந்தையக் காலத்தில் அஞ்சலகம் நம்மிடையே பிரதான இடத்தைப் பெற்றிருந்தது. பின்னாளில் தொழில் நுட்ப மாற்றத்தால் நம்மை விட்டு அஞ்சலகம் வெகு தூரம் சென்று விட்டது. மீண்டும் அதனை மீட்டெடுக்க வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆனாலும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றியடையச் செய்ய வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு தபால்காரருடையது. பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்து அதனை செவ்வனே செய்தவர் திரு.பரமசிவம். நாம் இன்னும் கொஞ்சக் காலத்தில் ஓய்வு பெறப் போகிறோமே நாம் ஏன் இதையெல்லாம் சிரமப்பட்டு செய்ய வேண்டும் என்று ஒருநாளும் எண்ணியதில்லை. ஓய்வு நாள் வரை மிக சுறுசுறுப்பாகவே அவ்ற்றைச் செய்தார்.

புதிய அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து அவரே தாமாக வந்து சொல்வார். எவர் ஒருவருக்கும் அவர் சொல்லும் விதம் சலிப்பாகவும், வெறுப்பாகவும், அய்யய்யோ இன்சூரன்ஸ் பிடிக்க வந்துட்டாரே என்று இருந்ததே இல்லை.

சிறந்த அஞ்சலகருக்கான மத்திய அரசின் விருதும் பெற்றுள்ளார். அந்த விருது பெற்றமைக்காக தில்லையாடி அருணாசலக் கவிராயர் இயல் இசை நாடக மன்ற விழாவிலும் பராட்டி, கவுரவிக்கப்பட்டார்.

ஊரின் பொது நிகழ்வுகள் குறித்தும் அக்கறை உடையவர். கடந்த பிப்ரவரி மாதம் தியாகி வள்ளியம்மையின் நினைவு நாளையொட்டி அஞ்சல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட அஞ்சல் உறையை வெளியிடும் நிகழ்ச்சியை சிறப்பாக அமைக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டு செய்தவர்.

அவரின் சொந்த ஊரில் ஒரு சிறந்த இயற்கை விவசாயியாகவும் இருக்கிறார். விவசாய மேம்பாட்டுப் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் பணி நேரத்திற்கிடையே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒரு முறை வானொலி நிகழ்ச்சிக்காக அவர் ஊருக்கு விவசாயிகளை நேர்காணல் செய்ய சென்றபோது இதனை அறிந்து கொள்ள முடிந்தது. இப்போது முழு நேரமாக சமூகப் பணியில் ஈடுபட ஓய்வு காலத்தை பயன்படுத்திக் கொண்டு இன்னும் மேன்மையடைவார்…

(விழாவின் போது மொய் கவரை ஏற்க மறுத்து, பலரை "துண்டு" வாங்க ஜவுளி கடை நோக்கி ஓடச் செய்தார். ஆனாலும் சிலர் கவரை திணித்து விட்டே சென்றனர். எப்படியோ ஓய்வு பெறும் நாளிலாவது நாங்க அவரை பணம் வாங்க வச்சுட்டோம்..🤗)

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி