வேளாண்மை (Agriculture) படிப்பை படிக்க விரும்புவர்களுக்கு
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது என்று திருவள்ளுவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். பொருட்பாலில் உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்த 1031 வது குறள் முதல் 1040 குறள் வரை 10 பாடல்களை எழுதியுள்ளார். வகுப்பறைகளில் உங்கள் எதிர்கால கனவு என்ன என்று கேட்கும் போது பெரும்பாலும் மருத்துவர், மாவட்ட ஆட்சியர், ஆசிரியர், போலீஸ், ராணுவம், பொறியாளர், கணினி வல்லுநர் போன்ற பதில்கள் தான் தொடர்ச்சியாக எதிரொலித்தாலும் வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவை உற்பத்தி செய்யும் விவசாயியாக மாறுவேன் என்ற பதிலை நான் கேட்டதில்லை. அப்படி கூறுபவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு.


12 ஆம் வகுப்பு முடித்து என்ன படிக்கலாம் என்று பெரும்பாலும் முடிவு செய்திருப்பீர்கள். MBBS, BE,B.Tech, B.Arc, B.des, B.Com, BBA, BA, B.Sc என படிப்பதற்கு ஏராளமான பிரிவிகள் இருக்கின்றன். எந்த துறையை எடுத்து படித்தாலும் அதில் சிறப்பாக செயல்பட்டால் நல்ல எதிர்காலம் அமையும் என்பதில் சந்தேகமில்லை. நிஜமாகவே இயற்கையின் மீது ஆர்வமுள்ளவர்களுக்கும், விவசாயத்தை நேசிப்பவர்களுக்கும் படிப்பதற்கு விவசாயப் படிப்புக்கள் (Agriculture) பல இருக்கின்றன.

1906 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு நிறுவனம் தான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். உலகத்தரம் வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு விதமான வேளாண் கல்வி வழங்கப்படுகிறது.

சிறந்த முறையில் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த உயர்கல்வி படிப்புகளை வழங்குவது, வேளாண்மை ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மேலும், இந்திய மற்றும் உலக அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுடனும் ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் இணைந்து தரமிக்க கல்வி வழங்குவது இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வேளாண்மை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை இந்த பல்கலைக் கழகம் பெறுகிறது. இப்பல்கலைக்கழகம் வாயிலாக 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி இப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகள் மூலம் கீழ்க்காணும் 10 பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

பட்டப்படிப்புகள்:

1. இளமறிவியல் (ஹானர்ஸ்) வேளாண்மை (B.Sc Agriculture)

2. இளமறிவியல் (ஹானர்ஸ்) தோட்டக்கலை (B.Sc Horticulture)

3. இளமறிவியல் (ஹானர்ஸ்) வனவியல். (B.Sc Forestry)

4. இளமறிவியல் (ஹானர்ஸ்) உணவு, ஊட்டச்சத்தியல் மற்றும் உணவு முறையியல் (B.Sc Food technology)

5. இளம் தொழில் நுட்பம் (ஹானர்ஸ்) பட்டுவளர்ப்பு ( B.Sc Sericulture )

6. இளம் தொழில் நுட்பம் (உயிர்த் தொழில் நுட்பவியல்) (B.Tech Bio technology)

7. இளம் தொழில் நுட்பம் (வேளாண்மைப் பொறியியல்) ( B.Tech Agricultural engineering)

8. இளம் தொழில் நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்). (B.Tech Food technology)

9. இளம் தொழில் நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்) (B.Tech in energy and environmental engineering)

இந்த 9 படிப்புக்களும் விவசாயம் சம்மந்தமான அடிப்படை அறிவு மற்றும் ஆராய்ச்சி செய்யும் அணுகுமுறைகளையும் கொடுக்கிறது. அனைத்து பாடங்களுக்கும் கோவையில் இருக்கும் தமிழ்நாடு மாநில வேளாண்மை பல்கலை கழகத்தில் விண்ணப்பித்தால் மட்டுமே போதுமானது. மண்ணில் கலந்திருக்கும் பொருட்கள், எவையெல்லாம் மண்ணுக்கு வளத்தைக் கொடுக்கிறது, இழந்த வளத்தை மண்ணுக்குள் எவ்வாறு கொண்டுவரலாம் என்பது தொடங்கி விவசாயத்தின் நவீன தொழில்நுட்பங்கள் வரை கற்றுக்கொள்ளலாம். ஆராய்ச்சி செய்ய விருப்பமுள்ள மாணவர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கும் ஒரு துறை இது.

பொறியியல் படித்து விட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் விவசாயம் படித்து சொந்தமாக வேலை செய்யலாம். வேலையும் கொடுக்கலாம். அரசு வேலை வாய்ப்பும் இருக்கிறது. பிறரிடம் வேலை பார்க்கச் செல்வதை விட பிறருக்கு வேலை கொடுக்கும் நபராக மாறினால் வாழ்க்கையை நாம் விரும்பும் வகையில் மாற்றியமைக்கலாம். விவசாயப் படிப்பு நீங்கள் பிறருக்கு வேலை கொடுக்கும் வகையில் உங்களை மாற்றம் செய்யும் படிப்பு.

உணவு மற்றும் மருந்து இவை இரண்டின் தேவைகள் கூடுமே தவிர குறையாது. விவசாயம் உணவை உற்பத்திச் செய்யும் படிப்பு. அதன் தேவை நிச்சயமாக குறைய வாய்ப்பு இல்லை. என்வே ஆர்வமுடைய மாணவர்கள் மேலே சொன்ன விவசாய பாடங்களை படிக்கலாம்.

இந்த பாடங்களை படிக்க 01.07.2019 அன்று 21 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.600 
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.300

கல்வித்தகுதி:
அடிப்படை கல்வித்தகுதியாக, 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் / கணினி அறிவியல் / மனையியல் போன்ற பாடப்பிரிவுகளில் பயின்று, தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், http://www.tnau.ac.in/ugadmission.html - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 08.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.06.2019
விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய வேண்டிய நாட்கள்: 10.06.2019 முதல் 12.06.2019
சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள்: 11.06.2019 முதல் 13.06.2019 
தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 20.06.2019

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, http://tnau.ac.in/…/…/Admission_Press_Note_2019-20_Tamil.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி