தமிழகத்திற்கு சிறப்பு சேர்க்கும் திண்டுக்கல்தமிழகத்திற்கு சிறப்பு சேர்க்கும் திண்டுக்கல் மாவட்டம் 32 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வரலாறு

ஆரம்ப கட்டத்தில் திண்டுக்கல் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திண்டுக்கல் பகுதிக்கு அதிகாரிகளால் தனி கவனம் செலுத்த முடியாதநிலை இருந்தது.

இதனால் திண்டுக்கல் தனி மாவட்ட கோரிக்கை எழுந்தது. 1985 செப்.,15 ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் திண்டுக்கல் தனி மாவட்டமானது. திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல், நத்தம், வேடசந்துார் ஆகிய 6 தாலுகாக்கள் இருந்தன. முதல் கலெக்டராக மாதவன் நம்பியார் இருந்தார். தற்போது 23 வது கலெக்டராக டி.ஜி.வினய் உள்ளார்.

துவக்கத்தில் அண்ணா மாவட்டமாக இருந்த திண்டுக்கல் 1986 மார்ச் 27 ல் காயிதேமில்லத் ஆகவும், 1996 ல் மன்னர் திருமலை ஆகவும் பெயர் மாற்றியது. 1997 ஜூலையில் இருந்து திண்டுக்கல் மாவட்டமாக அழைக்கப்படுகிறது.

அமைப்பு

திண்டுக்கல் கடல் மட்டத்தில் இருந்து 280.11 மீ உயரத்தில் உள்ளது. மொத்தம் 6,266.64 சதுர கி.மீ., பரப்பில் விவசாய நிலம் 2,47,619 எக்டேர். காடுகள் 1,28,923 எக்டேர். தரிசு நிலங்கள் 36,210 எக்டேர். மேய்ச்சல் நிலம் 6,946 எக்டேர். உள்ளது. மாவட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, உருது, சவுராஷ்டிரம், கன்னடம் பேசும் மக்களும் வசிக்கின்றனர்.

நிர்வாகம்:

1886 நவ.,1 ல் உதயமான திண்டுக்கல் நகராட்சி, 2014 பிப்.,19 முதல் மாநகராட்சியாக மாறியது. 1996 ஜன.,2 ல் பழநியில் இருந்து பிரிந்து ஒட்டன்சத்திரம் தனி தாலுகாவானது. 2007 அக்.,31 ல் திண்டுக்கல்லில் இருந்து பிரிந்து ஆத்துார் தனி தாலுகாவானது. 2014 பிப்.,12 ல் திண்டுக்கல் தாலுகா கிழக்கு, மேற்கு என, 2 ஆக பிரிக்கப்பட்டன. தற்போது 9 தாலுகாக்கள் உள்ளன.

நகராட்சிகள் (3): பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம்.

ஒன்றியங்கள் (14): திண்டுக்கல், சாணார்பட்டி, ஆத்துார், ரெட்டியார்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, குஜிலியம்பாறை, #ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வேடசந்துார், பழநி, வடமதுரை, கொடைக்கானல்.

பேரூராட்சிகள் (23): தாடிக்கொம்பு, அகரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை, சின்னாளப்பட்டி, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், நத்தம், அம்மையநாயக்கனுார், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகன்பட்டி, பண்ணைக்காடு, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, கீரனுார், வடமதுரை, அய்யலுார், வேடசந்துார், எரியோடு, பாளையம்.

எல்லைகள்

வடக்கில் கரூர், ஈரோடு மாவட்டங்கள், கிழக்கில் திருச்சி, மதுரை மாவட்டங்கள், தெற்கில் மதுரை, தேனி மாவட்டங்கள், மேற்கில் திருப்பூர் மாவட்டம், கேரள மாநிலத்தையும் எல்லையாக உள்ளன.
சிறப்புகள்: திண்டுக்கல் மலைக் கோட்டை, பழநி, கொடைக்கான, சிறுமலை ஆகியவைகள் சிறப்புகள் சேர்க்கின்றன.

பொருளாதாரம்:

மலை வாழை, கொய்யா, பேரிக்காய், காபி, கோகோ, சவ் சவ், கேரட், முட்டைக்கோஸ், மலைப்பூண்டு, எலுமிச்சை பலா உள்ளிட்ட பல்வகையான மலைப் பயிர்கள் விளையும் மாவட்டமாக திகழ்ந்த திண்டுக்கல். பூட்டுத் தயாரிப்பிற்கு பிரபலமாக விளங்குகிறது. ஆனால் அதற்கான சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதில் அரசின் உதவியில்லாததால் புராதன தொழில்வளர்ச்சி கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் சிறு-குறு தொழில்கள் மாவட்டத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் மூலம் நாட்டிலுள்ள 250 பின்தங்கிய மாவட்டங்களில் திண்டுக்கல்லும் இணைக்கப்பட்டு உதவிகள் பெறப்பட்டு வளர்ச்சிப்பணிகள் நடந்த வருகிறது.

விளையாட்டு:

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கல்லுாரி, பள்ளிகளில் கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், வாலிபால், அத்லெடிக், கபடி, டென்னிஸ், ரோலர் ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் திண்டுக்கல் மாவட்டம் சிறந்து விளங்குகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி