சிவில் சர்வீஸ் என்னென்ன புத்தகங்களை எல்லாம் படிக்கலாம்?

சிவில் சர்வீஸ் என்னென்ன புத்தகங்களை எல்லாம் படிக்கலாம்?

நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. தொடக்கத்தில் என்.சி.ஆர்.டி பள்ளிப் பாடப்புத்தகங்களைப் படிக்க வேண்டும். பள்ளிப் பாடப்புத்தகங்களைச் சிறப்பாகப் படித்தால் சிவில் சர்வீஸஸ் தேர்வு எளிது. சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து யூ.பி.எஸ்.சி `A well Educated person can attend this examination without any special preparation' என்றுதான் சொல்கிறது. அதாவது, `நல்ல கல்வி பெற்ற ஒருவரால், எந்தவிதமான சிறப்புப் பயிற்சியும் தயாரிப்பும் இல்லாமல் வெற்றியடைய முடியும்' எனச் சொல்கிறார்கள். யார் ஒருவர் பள்ளிக் கல்வியை உள்வாங்கி படித்தும், அரசியல் சமூக மாற்றங்களை முழுமையாக அறிந்தும் இருக்கிறாரோ அவர் எளிதில் தேர்ச்சிபெறலாம். ஆகவே, பள்ளிப் பாடங்களைத் திரும்பப் படிக்கவேண்டியது அவசியம். ஐ.ஏ.எஸ் தேர்வை மத்திய அரசு தேர்வாணையம் நடத்துவதால், மத்திய அரசின் பாடத்திட்டங்களைக்கொண்ட பாடப்புத்தகங்களைப் படிப்பது சிறப்பு.

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராவதற்கு எவ்வளவு நாள் ஆகும்?

பொதுவான கருத்தின்படி, ஓராண்டு முழுமையாகத் தயார் ஆகவேண்டும். ஒருசிலர் முதல் முயற்சியிலேயெ வெற்றி பெறுவர். நான்கைந்துமுறை முயற்சிசெய்து வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஆக, தேர்வு எழுதுபவர்களின் திறன் சார்ந்துதான் வெற்றி இருக்கிறது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எந்தப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது?

நான் ஒன்றிரண்டு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கிறேன். தமிழக அரசு நடத்தும் குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் சேர்ந்து 
படிக்கலாம். ஆனால், இதைவிட மற்ற பயிற்சி மையம் சிறப்பாக இருக்கிறதே எனச் சொன்னால், அது குறித்து நீங்களே முடிவெடுத்துக்கொள்ளலாம். 
பயிற்சி மையம் செல்வது என்பது, உங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளலாம். பொதுவாக, பயிற்சி மையங்கள் உங்களின் வெற்றிக்கு 10 முதல் 15 சதவிகிதம் உதவுகின்றன. மீதி 85 சதவிகிதம் உங்களுடைய சொந்த முயற்சியால் மட்டுமே வெற்றிபெற முடியும். பயிற்சி மையங்கள் உங்களுக்கு வழிகாட்டும். ஆனால், வெற்றிபெறுவது உங்களின் கையில்தான் உள்ளது.

சிவில் சர்வீஸ் டெல்லியில் படிக்கலாமா... சென்னையில் படிக்கலாமா?

இதுவும் அவரவர் முடிவுதான். எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீட்டில் இருந்தபடியே படிக்கலாம். டெல்லியில் கிடைக்கும் விஷயங்கள் தற்போது ஸ்மார்ட்போனிலேயே கிடைக்கின்றன என்பதால், எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். இதற்கென, பல்வேறு இணையதளங்கள் நல்ல வழிகாட்டுகின்றன.

சிவில் சர்வீஸ் முதலில் முதன்மைத் தேர்வுக்குப் படிப்பதா அல்லது முதல்நிலை தேர்வுக்குப் படிப்பதா?

முதன்மைத் தேர்வுக்கும், முதல்நிலை தேர்வுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. முதல்நிலை தேர்வு Objective தேர்வு. முதன்மைத் தேர்வு Descriptive தேர்வு. அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தயாராவது நல்லது. முதல்நிலைத் தேர்வு நெருங்கும்போது அதற்கு ஏற்றார் போல் Objective type தேர்வு சார்ந்து அதிக நேரத்தை ஒதுக்கி படிக்கவேண்டும். முதன்மைத் தேர்வுக்கு ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் கட்டுரைகள் மற்றும் தலையங்கங்களை அதிகம் படிக்க வேண்டும்.

சிவில் சர்வீஸ்க்கு என்னென்ன நாளிதழ்களைப் படிக்க வேண்டும்?

நாட்டுநடப்புகள் முதன்மையாக இருப்பதால், நாளிதழ்களைப் படிப்பது அவசியம். இதில், அரசியல், பொருளாதார நிகழ்வுகளுக்கும், வெளிநாட்டு விவகாரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாளிதழ்களைப் படிக்க வேண்டும். அரசியல் என்பது, கட்சி அரசியல் கிடையாது. நாட்டின் வளர்ச்சிகுறித்தும் சமூக அரசியல் விவாதங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இதில் ஆங்கிலச் செய்தித்தாள்களையும், தமிழ் செய்தித்தாள்களையும் படிக்க வேண்டும்.

சிவில் சர்வீஸ்க்கு எவ்வளவு மணி நேரம் படிக்க வேண்டும்?

நிறையப்பேர் காலையிலிருந்து இரவு படுக்கச் சொல்லும் முன்பு வரை படிப்பார்கள். எவ்வளவு கிரகிக்கக்கூடிய சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நேரத்தை ஒதுக்கிப் படித்தால் மட்டும் போதுமானது. ஆரம்பநிலையில் இரண்டு, மூன்று மணி நேரம் படித்தால் சோர்வு வந்துவிடும். அந்தச் சோர்வைப் போக்கும் வகையில் சிறிய இடைவெளி கொடுத்துவிட்டுப் படிக்க வேண்டும். பொதுவாக, ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை படிக்கலாம். அதன் பிறகு உங்களுடைய சக்திக்குத் தகுந்தாற்போல் நேரத்தைக் கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எப்படிப் படிப்பது?

ஒருசிலருக்கு, குறிப்பெடுத்துப் படிப்பது நன்றாக இருக்கும். இன்னும் சிலருக்கு, அடிக்கோடிட்டு படிப்பது பிடிக்கும். ஆக, யாருக்கு எப்படிப் படிக்கப் பிடிக்குமோ அப்படியே படிக்கலாம். குறிப்பெடுத்து படிப்பவர்கள் திரும்ப நினைவூட்டலுக்குக் குறிப்புகளைப் பயன்படுத்துவார்கள். Mind Maps என்ற மன வரைபடம் வரையும் வழியையும் பின்பற்றலாம்.

எத்தனை முறை படித்தாலும் மறந்துவிடுகிறதே என்ன செய்வது?

எந்த ஒரு விஷயத்தையும் இஷ்டப்பட்டுப் படித்தால் கஷ்டமாகத் தெரியாது. பானிபட்டு போர் எப்போது நடந்தது என்றால், நினைவில் வர மாட்டேன் என்கிறதே எனச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வருடங்கள் குறித்து கேள்விகள் நேரடியாக கேட்கப்படுவதில்லை. தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மட்டுமே கேட்கிறார்கள். வரலாறு சார்ந்த விவரங்களை காலவரிசையில் (Chronological Order) நினைவில் கொள்ளவேண்டும். 
படித்தது மறந்துவிடுவதற்குக் காரணம், மீண்டும் படிக்காமல் (revision) இருப்பதுதான். உளவியல் வல்லுநர்கள், இயல்பான மனப்பாங்கில் படிக்கும்போது 24 மணி நேரத்தில் 70 சதவிகிதப் பகுதி மறந்துவிடும் என்றும், ஒரு வாரத்தில் மீதம் உள்ள 50 சதவிகிதமும் மறந்துவிடும் என்றும், ஒரு மாதத்தில் 10 முதல் 15 சதவிகிதம் மட்டுமே நினைவில் இருக்கும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆக, ஒரு நாளில் படித்ததை அன்றே திரும்பிப் பார்க்க (revision) வேண்டும். ஒரு வாரத்தின் இறுதியிலும், மாதத்தின் முடிவிலும், மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள திருப்பி பார்க்க வேண்டும். 
பத்து மணி நேரம் படிப்பதை, இரண்டு மணி நேரத்தில் திரும்பிப் பார்க்கலாம். திரும்பிப் பார்த்தலை இரண்டு வகையில் மேற்கொள்ளலாம். ஒன்று, படித்த குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் திரும்பிப் படிப்பது. இரண்டாவது, கேள்விகளுக்குப் பதிலளித்துப் பார்ப்பது. இந்த இரண்டு முறைகளையும் மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஞாபகத்தைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

சிவில் சர்வீஸ்க்கு ஆங்கில அறிவு அவசியமா?

தமிழிலேயே தேர்வு எழுதலாம் என்றாலும், ஆங்கில அறிவும் அவசியம். ஆங்கிலப் புலமைப் பெற்றிருக்கவேண்டிய அவசியமில்லை. வினாக்கள் ஆங்கிலத்தில்தான் வரும். ஆகையால், ஆங்கில வினாக்களைப் புரிந்துக்கொண்டால் மட்டுமே சரியாக விடையளிக்க முடியும். ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வது அவ்வளவு கடினம் அல்ல.

சிவில் சர்வீஸ் தேர்வை தமிழில் எழுதலாமா?

ஆர்வம் இருந்தால், தமிழில் தேர்வு எழுதலாம். நம் தாய் மொழியில் தேர்வு எழுதும்போது நமது உணர்வுகளையும் கருத்துகளையும் அழகான முறையில் பிரதிபலிக்க உதவியாக இருக்கும்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வினாக்கள் தமிழில் இருக்குமா?

இதுவரை வினாக்கள் தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ள வினாக்களைப் படித்துப் பார்த்து புரிந்துக்கொண்டுதான் தமிழில் பதிலளிக்க வேண்டும்.

சிவில் சர்வீஸ்க்குத் தமிழில் நூல்கள் இருக்கின்றனவா?

தமிழ்நாடுப் பாடநூல் கழகம் நிறைய நூல்களை வெளியிட்டிருந்தது. அவை காலப்போக்கில் பதிப்பு செய்யவில்லை என்பதால், தேடி கண்டுப்பிடிக்கவேண்டிய அளவில் இருந்தன. தற்போது, ஏற்கெனவே வெளியீட்டில் உள்ள புத்தகங்களை மறுபதிப்பு செய்யும் பணியில் இறங்கியிருக்கிறது. தனியார் நிறுவனங்களிலும் நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. அதையும் வாங்கிப் படிக்கலாம்.

தமிழில் கலைச்சொற்கள் இருக்கின்றவா?

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவருகிறது. இதற்கு இணையான கலைச்சொற்கள் இல்லாமலிருந்தாலும், தமிழ்நாடு இணைய பல்கலைக்கழகம் 1.25 லட்சம் கலைச்சொற்களை வெளியிட்டிருக்கிறது. இது இணையதளத்திலேயே இருக்கிறது. பொதுவாக, புழக்கத்தில் உள்ள சொற்களை அப்படியே எழுதலாம். ராக்கெட் என்பதை அப்படியே எழுதலாம். புரியாத வித்ததில் மொழியாக்கம் செய்யக்கூடாது. எந்தச்சொல் மக்களால் பெரு வழக்கில் பயன்படுத்தப்படுகிறதோ அதை அப்படியே பயன்படுத்தலாம்.

கட்டுரை வடிவிலான (Essay) தேர்வுக்கு எப்படித் தயாராவது?

இதற்கு என, சிறப்பான தயாரிப்புகள் எதுவும் கிடையாது. நீங்கள் சிறந்த கட்டுரைகளைப் படிக்க வேண்டும். அதை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். கட்டுரையாளர் எப்படித் தனது கருத்துகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிறார், எவ்வாறு நடையைக் கையாள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல இதழ்களில் நல்ல கட்டுரைகளைத் தேடிப் படியுங்கள். பழைய வினாத்தாள்களில் உள்ள கட்டுரைகளையும் எழுதிப் பாருங்கள்.

Ethics (அறவியல்) என்ற தாளுக்கு, எவ்வாறு தயாராவது?

`Ethics என்ற தாளுக்கு எதுவும் படிக்கத் தேவையில்லை' என யூ.பி.எஸ்.சி சொல்கிறது. நீங்கள் அறநெறியையும், ஒழுக்கநெறியையும் பின்பற்ற வேண்டும். இதன் அடிப்படையில் வாழ்வியலை அமைத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் இதன் நோக்கம். ஆகையால், இந்தத் தேர்வுக்குப் படித்து மனப்பாடம் செய்வதற்கு ஒன்றுமில்லை.

மற்றவர்களின் குறிப்பேடுகளை (Notes) வாங்கிப் படிக்கலாமா?

என்னிடமே `சார், நீங்கள் எடுத்துப் படித்த நோட்ஸ்களை எல்லாம் கொடுங்கள்' என்று கேட்கிறார்கள். என்னுடைய குறிப்பேடுகள் எனக்கு மட்டுமே புரியும் வகையில் குறிப்புகளை எடுத்திருப்பேன். இதை எப்படி மற்றவர்கள் புரிந்துகொள்வர் எனத் தெரியவில்லை. மற்றவர்களின் குறிப்பேடுகள் பெரிய அளவில் உதவாது. உங்களுடைய குறிப்புகளை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்.

தனியாகப் படிக்க வேண்டுமா அல்லது குழுவில் இணைந்து படிக்கலாமா?

கூட்டாகச் சேர்ந்து படிப்பது பல நேரங்களில் பயன்படும். புரியாத பாடங்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது குழுவில் இருக்கும் இன்னொரு நண்பர் நமக்கு உதவுவார். சில நேரம் ஆர்வம் குறைந்திருக்கும்போது குழுவில் உள்ளவர்கள் சேர்ந்து படிக்கலாம் என அழைத்து ஆர்வம் கொடுப்பார்கள். ஆக, கூட்டுமுயற்சி என்பது, பெருமளவில் பலன் தரும். சில வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்யலாம். இதுபோல் செய்யும்போது பளு குறையும். தனியாகப் படிப்பதுதும் ஒருசில நேரங்கள் பயன் தரும்.

பணியாற்றிக்கொண்டே படித்திருக்கிறீர்கள். உங்களுடைய நேர மேலாண்மை குறித்துச் சொல்லுங்கள்?

பணியாற்றிக்கொண்டே படிக்கும்போது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். காலையிலும் மாலையிலும் இதற்காக நேரத்தை ஒதுக்கிப் படித்தால் பலன் தரும். வேலைபளு கூடுதலாக இருக்கும்போது கொஞ்சம் சிரமம் எடுத்துப் படிக்கவேண்டியிருக்கும். தேர்வு நெருங்கும்போது விடுமுறை எடுத்துப் படிக்கலாம்.

சிவில் சர்வீஸ் இன்டர்வியூ தமிழில் செய்யலாமா?

நேர்முகத்தேர்வில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பார்கள். ஆகையால், இன்டர்வியூவை தமிழில் எதிர்கொள்ளலாம். நீங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டு ஆங்கிலத்திலும் பதிலளிக்கலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வில் “Personality test” என்ற நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள, சில டிப்ஸ் சொல்லுங்கள்.

நேர்முகத்தேர்வில் ஆக்கபூர்வமான ஆளுமைப் பண்புகள் உள்ளனவா என்று கவனிக்கிறார்கள். இதை 5C+2H என்று சுருக்கமாக கூறலாம். 5C என்பது, Confidence, coolness, common sense, communication, charm and cheer என்பார்கள். அதாவது, தன்னம்பிக்கை உடையவரா, விஷயத்தைப் பதற்றமில்லாமல் எதிர்கொள்பவரா, பொது அறிவு உடையவரா, தகவல் தொடர்புதிறன் நன்றாக இருக்கிறதா, பதில் தெரியவில்லை என்றாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறாரா என்ற பண்புகளைக் கவனிக்கிறார்கள். நேர்மையாக (Honesty)பதில் சொல்ல வேண்டும். தெரியா பதிலுக்குத் தெரிந்த மாதிரி நடித்து பதிலளிக்கக் கூடாது. தெரிந்தால் பதிலையும், தெரியவில்லை என்றால் `தெரியவில்லை' என்றும் சொல்ல வேண்டும். பணிவாக (Humility) இருக்க வேண்டும். தலைக்கனம் கூடாது.

போட்டித்தேர்வுக்கான நூல்கள் எங்கு கிடைக்கும்?

எல்லா கிளை நூலகங்களிலும் `போட்டித்தேர்வு' என்ற பிரிவில் இதற்கான நூல்கள் உள்ளன. ஆகையால், கொஞ்சம் தேடிப் பாருங்கள். உங்களுக்குத் தேவையான நூல்கள் என நூலகருக்குத் தெரிவித்தால், அவர்கள் அந்த நூல்களை வாங்கிவைக்க நடவடிக்கை எடுப்பார்கள். மாவட்ட மைய நூலகங்களிலும் போட்டித்தேர்வு எனத் தனிப்பிரிவே வைத்திருக்கிறார்கள். ஆகையால், அங்கு படிக்கலாம். ``போட்டித்தேர்வு எழுதுபவர்கள், நூலகத்துக்குச் செல்லாமல் தேர்வில் வெற்றியைச் சுவைக்க முடியாது. இதற்கு என்னையே உதாரணமாக சொல்வேன். பட்டுக்கோட்டையில் உள்ள நூலகத்திலேயே முழு நேரத்தையும் செலவழித்திருப்பத்தால்தான் இந்த வெற்றியை பெற்றிருக்கிறேன். நான் நூலகத்தில் படித்தபோது என்னுடன் நூலகத்தில் படித்த 39 பேர், பல்வேறு பணியில் இருக்கிறார்கள் என்பது நூலகத்துக்குக் கிடைத்த பெருமை. நூலகங்கள், அறிவை வளர்க்கும் நாற்றங்காலாக விளங்குகின்றன.
தற்பொழுது நூல்கள் ஆன்லைனில் நிறையவே கிடைக்கின்றன. இதில் எது தேவையானது என்பதைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். இதற்கு சிறிது காலமாகும். இதற்கு பயிற்சி வகுப்பு படிப்பவர்கள் பல நூல்களைப் பரிந்துரை செய்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள், பல புத்தகங்களைப் பரிந்துரை செய்வார்கள். அதில் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். ஆரம்பத்தில் அடிப்படையான பாடப்புத்தகத்தையும், அதன்பிறகு குறிப்புதவி நூல்களையும்(Reference Books) படிக்கலாம். வழிகாட்டி நூல்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டாம்.

இன்டர்வியூவில் opinion அடிப்படையில் நிறையக் கேள்விகள் கேட்கிறார்கள். இதை எவ்வாறு எதிர்க்கொள்வது? ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்குமே?

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கும். மற்றவர்களின் கருத்துகளிலிருந்து வேறுபடும் என்பது உண்மைதான். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கருத்துகள் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், உங்களுடைய கருத்துகள் நல்ல புரிதலில் அடிப்படையில் அமைந்தது என்றால் ஏற்றுக்கொள்வார்கள். என்னுடைய கருத்தை என்னுடைய மனதில் தோன்றுகிறது. எனவே, அதைச் சொல்கிறேன் என்ற அடிப்படையில் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உதாரணத்துக்கு, ‘சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ஒரு திட்டத்தை ஆரம்பிக்கலாமா... வேண்டாமா?' எனக் கேட்டால், இந்த விஷயத்தால் சுற்றுச்சூழல் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே, இந்தத் திட்டத்தின் மீது கவனமாக நடவடிகை எடுக்க வேண்டும் எனச் சொல்லலாம். உங்களுடைய கருத்துக்கு வலு சேர்க்கும்விதமாக. `ஒன்றிரண்டு இடங்களில் இந்தத் திட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகையால், இந்தத் திட்டத்தைத் தவிர்க்கலாம்' உதாரணதோடு சொல்லாம். ஒரு கருத்து சரியா தவறா என்று குழப்பம் ஏற்பட்டால், இந்திய அரசியலமைப்பின் முகப்புரை வகுத்தளித்துள்ள உயர்ந்த நோக்கங்களை உரைகல்லாக பயன்படுத்தி சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய சமநிலை சார்ந்த பண்பை வெளிப்படுத்தி, ஒரு சார்பு நிலை உள்ளே வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.

சிவில் சர்வீஸ் தேர்வை தமிழில் தேர்வு எழுதும்போது குறைத்து மதிப்பீடுவார்களா?

அப்படிக் குறைத்து மதிப்பிடு செய்ய வாய்ப்பு இல்லை. கடந்த கால தேர்வு முடிவுகளைப் பார்க்கும்போது தமிழில் எழுதுபவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. தமிழில் தேர்வு எழுதும்போது கட்டுரைத் தாள் தேர்வில் சிறப்பாக எழுதிவிட முடியும். தமிழ் தாய்மொழி என்பதால், நல்ல முறையில் கருத்துகளை வெளியிட முடியும்.

தமிழில் தேர்வு எழுதும்போது ஆங்கில கலைச்சொற்களை எவ்வாறு பயன்படுத்துவது? தமிழ் கலைச்சொல் அருகே ஆங்கிலத்திலும் அதன் மூலச்சொல்லை எழுதவேண்டுமா?

தமிழில் தேர்வு எழுதும்போது, பெருவழக்கில் உள்ள தமிழ் கலைச்சொற்களுக்கு ஆங்கில கலைச்சொற்கள் எழுதவேண்டிய அவசியமில்லை. உதாரணத்துக்கு, metabolism என்ற சொல்லுக்கு, `வளர்சிதை மாற்றம்' என்று தமிழில் கலைச்சொல் பெருவழக்கில் உள்ளது.. வளர்சிதைமாற்றம் என்று எழுதும்போது ஒவ்வொரு முறையும் அடைப்புக்குறியில் metabolism என்று எழுதத் தேவையில்லை. ஆனால், ரெஸ்டிரிக்ஷன் எண்டோ நியூகிலியேஸ் (restriction endonuclease) என்ற நொதியின் மூலமாக DNA-க்கள் துண்டாக்கப்பட்டு, அதன் பிறகு DNA லிகேஸ் என்ற நொதியின் மூலம் DNA-க்கள் இணைக்கப்படுகின்றன என்பதை தமிழில் மேற்கண்டவாறு எழுதிவிடலாம். ஏதேனும் ஓர் இடத்தில் ஆங்கில கலைச்சொற்களை அடைப்புக் குறிக்குள் பயன்படுத்தலாம். எல்லா இடங்களிலும் ஆங்கில கலைச்சொற்களைப் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை. சிலர் வாக்கியத்தை, தமிழ்-ஆங்கிலம் கலந்து எழுதுகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.

Ethics (அறவியல்) பாடத்தைத் தமிழில் எழுதும்போது கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. தமிழில் திறக்குறள், புறநானூறு போன்ற இலக்கியங்களில் உள்ள அறக்கருத்துக்களை மேற்கோள் காட்டலாமா ?

அறம் சார்ந்த தமிழ் இலக்கியங்களை நீங்கள் மேற்கோள்காட்டி எழுதலாம். அப்படி எழுதியவர்களுக்கு இதுவரை மதிப்பெண் குறைந்ததாக யாரும் கருத்துச் சொல்லவில்லை. எனவே, தாராளமாக எழுதலாம். அந்தத் தேர்வு அறவியல் தேர்வா அல்லது தமிழ் இலக்கியத் தேர்வா என்று குழப்பமடையும் வகையில் எழுதிவிடக் கூடாது. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் கவனிக்க வேண்டும்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எந்த விருப்பப் பாடத்தைத் (Optional Subject) தேர்ந்தெடுப்பது?

கலை பாடங்களான வரலாறு, புவியியல், சமூகவியல், மானுடவியல் போன்ற பாடங்களும், அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவையும் இன்ஜினீயரிங் பாடங்களான சிவில் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் என இன்ஜினீயரிங் பாடங்களும், தமிழ் இலக்கியம் என ஏகப்பட்ட பாடங்கள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்துதான். எந்த விருப்பப் பாடத்தை எடுத்தால் ஆர்வத்துடன் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் எனப் பாருங்கள்.

விருப்பப் பாடங்கள் தேர்ந்தெடுக்கும்போது போது நான்கு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, குறிப்பிட்ட பாடத்தில் படிப்பவருக்கு விருப்பம் இருக்க வேண்டும். இரண்டாவது, விருப்பப் பாடம் குறித்த வழிகாட்டுவதற்கு வாய்ப்புகள். உதாரணமாக, தமிழ் இலக்கியம் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது தமிழ் இலக்கியம் சார்ந்த வழிகாட்டிகள் இருக்க வேண்டும். மூன்றாவது, விருப்பப் பாடத்துக்கான புத்தகங்களும், இதர நூல்களும் நீங்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். நான்காவது, சில விருப்பப் பாடங்கள் கடந்த ஆண்டுகளில் பல வெற்றியாளர்களை உருவாக்கியிருக்கும். அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்

இப்போது பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவர்கள் எந்தப் படிப்பை எடுத்தால், ஐ.ஏ.எஸ் ஆவது எளிது?

உங்களுக்குப் பிடித்த பாடத்தில் சேர்ந்து படிக்கலாம். இதற்காக, குறிப்பிட்ட பாடத்தை எடுத்துப் படிப்பது எல்லாம் சரியாக இருக்காது. ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத தேவை, ஒரு பட்டப்படிப்பு தேவை. கலைப் பாடத்தையோ, அறிவியல் பாடத்தையோ, பொறியியல் பாடத்தையோ படிக்கலாம். உங்களுக்கு எந்தப் பாடத்தில் விருப்பம் இருக்கிறதோ, அந்தப் பாடத்தைப் படியுங்கள்.

கல்லூரியில் படிக்கும்போது சிவில் சர்வீஸாஸ் தேர்வுக்கு எப்படித் தயாராவது?

படிக்கும்போது சிவில் சர்வீஸஸ் தேர்வுக்குப் படிக்கலாம். தவறாமல் செய்தித்தாள்களைப் படியுங்கள். முதலில் சுற்றுப்புறத்தில் என்னென்ன அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் நடக்கின்றன என்பதை கவனியுங்கள். இது குறித்த நல்ல விவாதங்களை நண்பர்களுடன் மேற்கொள்ளுங்கள். இம்மாற்றங்கள் குறித்து ஒரு தெளிவான கருத்துருவாக்கம் செய்து வாருங்கள். இவை தேர்வின்போது பெரிய அளவில் பயன்படும்.

பயனுள்ள இணையதளங்கள்.

தகவல் தொழில் நுட்பம் யு.பி.எஸ்.சி தேர்வு பயிற்சியில் ஜனநாயக தன்மையைக் கொண்டு வந்துள்ளது. ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் எங்கிருந்தாலும் தேர்வுக்குத் தயாராகலாம் என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளன. சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் பயன்படும் சில இணைய தளங்கள்:

இந்த இணையதளத்தில் Answer writing challenge, Current affairs, insights into editorials, AIR & Rajya Sabah TV Debates summaries ஆகியவை பயனுள்ள பகுதிகள். இந்த இணைய தளத்தில் நீங்கள் விடைகளை எழுதிப் பழகலாம். இது பல தகவல்களை உள்ளடக்கிய ஒரு தகவல் சுரங்கம்.

இது Mrunal Patel என்பவரால் தொடங்கப்பட்ட பிளாக். இந்த இணைய தளத்தில் நகைச்சுவை இழையோட தேர்வுப் படங்களைப் புகட்டுகிறார்கள். ஆங்காங்கே ஹிந்தியில் கமெண்ட் செய்வார். தேர்வு வினாக்களை பகுத்து ஆராய்வதில் இந்த இணைய தளம் சிறந்து விளங்குகிறது. Current affairs, Economy policy analysis ஆகிய பகுதிகளுக்கு இந்த இணையதளம் உதவும்.

Unacademy ரோமன் சைனி என்ற 2014 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அலுவலரால் தொடங்கப்பட்ட யுட்யூப் சானல். தனது ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமா செய்துவிட்டு இந்த யுட்யூப் சானல் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார். சிவில் சர்வீசஸ் படாதிட்டப்படி பல விடியோக்கள் பதிவேற்றம் செய்யதுள்ளார். எளிமையாக படிப்பதற்கான டிப்ஸ் பலவற்றைச் சொல்கிறார்.

🏋️‍♀️ UPSC MAINS General Studies புத்தகங்கள் 🏋️‍♀️

அரசியல் அமைப்புகள் (அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா,ஜப்பான், ஆஸ்திரேலியா)

-----------------------------------------------
இந்திய அரசியல் அமைப்பு 13


-----------------------------------------------
அரசாங்க நிதியியல்


-----------------------------------------------
இந்தியப் பொருளியல் Part I


-----------------------------------------------
இந்தியப் பொருளாதாரம் (இரண்டாம் பகுதி) INDIA ECONOMICS (PART II) த.வெ.க.வ-51

-----------------------------------------------
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி


-----------------------------------------------

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி-II (THE ECONOMIC DEVELOPMENT OF INDIA-II) த.வெ.க.வ-84


-----------------------------------------------
இந்திய ஆட்சி அமைப்பு முறை வளர்ச்சி I


-----------------------------------------------
அரசியலமைப்புச் சட்ட ஆய்வுக்கு ஒர் அறிமுகம்-I. த.வெ.க.வ.-186

-----------------------------------------------
அரசியலமைப்புச் சட்ட ஆய்வுக்கு ஒர் அறிமுகம்-II. த.வெ.க.வ.-187

-----------------------------------------------
அரசியலமைப்புச் சட்ட ஆய்வுக்கு ஒர் அறிமுகம்-III. த.வெ.க.வ.-188


-----------------------------------------------
இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகள் ( முதல் பகுதி) (பட்டப்படிப்பிற்குரியது)


-----------------------------------------------
இந்திய அரசும் ஆட்சியும்


-----------------------------------------------
புகுமுக வகுப்புப் புவியியல்


-----------------------------------------------
ஒப்புமை அரசாங்கங்கள்

-----------------------------------------------
கலைச் சொற்கள் அரசியல்


-----------------------------------------------

இந்தியாவின் புவியியல்


-----------------------------------------------
இந்திய வணிகப் புவியியல் (பட்டப்படிப்பிற்குரியது)


-----------------------------------------------
புகுமுக வகுப்பு உலக வரலாறு ( கி.பி. 15ஆம் நூற்றாண்டிலிருந்து )


-----------------------------------------------

குறிப்பு " தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத்தின் 800 க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் இந்த http://www.tamildigitallibrary.in/book-search நூலகத்தில் உள்ளன.

இந்த நூலகத்தில் UPSC தேர்வர்கள் யுபிஎஸ்சி பழைய வினாத்தாள்களை ஆய்வு செய்து எதை படிக்க வேண்டுமோ அதை மட்டும் படிபெறவும்ன் பெறவும்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி