வரலாற்று சிறப்புமிக்க வால்பாறை போஸ்ட் ஆபிஸ் - ஒரு சிறப்பு பார்வை

வரலாற்று சிறப்புமிக்க வால்பாறை போஸ்ட் ஆபிஸ் - ஒரு சிறப்பு பார்வை


கோவையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது வால்பாறை. சிறப்பான சீதோஷ்ண நிலை காரணமாக 1800-களின் இறுதியிலேயே இங்கு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. தேயிலை உற்பத்திக்கு நீலகிரி மாவட்டத்தை மட்டுமே நம் பியிருந்த ஆங்கிலேயர்களுக்கு, வால்பாறை புதுமையான அனு பவத்தைத் தந்தது. அதனால் பல பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்களை அழைத்து வந்து, வால்பாறையில் தேயிலை உற்பத்தி விரிவாக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களின் வசதிக்காக வும், எஸ்டேட் தொழிலுக்காகவும் வால்பாறையைத் தேடி வந்த மக்களுக்காகவும் 1916, அக்.20-ம் தேதி வால்பாறை அஞ்சலகம் கட்டித் திறக்கப்பட்டது. அவ்வளவு எளிதில் பயணித்துவிட முடியாத வனாந்திரப் பகுதிக்குள் அமைக்கப் பட்ட முதல் மத்திய அரசு அலுவலகமாக, தனது பணியைத் தொடங்கிய இந்த அஞ்சலகம், தற்போது 100 வயதை எட்டியுள்ளது. எனவே இந்த அஞ்சலகத்தைப் பாரம்பரிய கட்டிடமாக அறிவித்து மக்களிடையே மீண்டும் அறிமுகப் படுத்துவது அவசியம் என்கின்றனர் தபால் ஆர்வலர்கள்.
தேசிய விருது பெற்ற முன்னாள் தபால் அதிகாரி நா.ஹரிஹரன் கூறியதாவது: வால்பாறை கண்டு பிடித்து உருவாக்கப்பட்ட ஒரு நகரம். தொடக்கத்தில் பிரிட்டிஷ்காரர் களுக்கும், தேயிலைத் தொழிலா ளர்களுக்கும் பயன்படும் வகையில் கிளை அஞ்சலகம் ஒன்று வாடகைக் கட்டிடத்தில் இயங்கியுள்ளது. ‘மெயில் ரன்னர்ஸ்’ என்ற பெயரில் நடந்து சென்று தபால் விநியோகிக்கும் ஊழியர்கள் மூலம் அஞ்சலகப் பணிகள் நடைபெற்றன.
ஆனைமலை வரை குதிரையில் செல்லலாம். அதற்கு மேலே காடு, மலை தாண்டி, நடந்து சென்றே தபால்களைக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே 1903-ல் மேத்யூ லும்போ என்பவரால் 40 கொண்டைஊசி வளைவுகள் கொண்ட சாலை அமைக்கப்பட்டு பணிகள் ஓரளவுக்கு எளிமையா யின. பின்னர் 1913-ல் இலாகா அஞ்சலகமாக தரம் உயர்த்தப்பட்ட அந்த அஞ்சலகத்துக்கு 1916, அக்.20-ல் சொந்தக் கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. கருங்கல்லால் கட் டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது நூறு வயதைத் தொட்டுள்ளது.
பழமையான இந்த அஞ்சலகம் ஆச்சரியப்படும் பல சேவைகளை வழங்கி இருக்கிறது. தேயிலை பறிக்கப் பயன்படுவது போன்ற பைகள் தபால் சேவைக்கு பயன் படுத்தப்பட்டுள்ளன. ‘பிளாண்டர்ஸ் பேக்’ என்ற இந்த வசதி மூலம், தொழிலாளர்கள் தங்களது தபால் களை எளிதில் எடுக்கவும், அனுப்ப வும் முடியும். பாதுகாப்புக்காக எஸ்டேட் அலுவலகத்திலும், அஞ் சலகத்திலும் தனித்தனி சாவிகள் இருக்கும். வனவிலங்கு பிரச் சினை, சீதோஷ்ண நிலையைக் கருத்தில்கொண்டு இந்த பாதுகாப்பு நடைமுறை இருந்ததாகக் கூறப் படுகிறது. தனியாரும் அரசும் இணைந்த அஞ்சல் சேவைத் திட்டம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கிறது.
மேலும் 24 மணி நேர தந்தி சேவையையும் இந்த அஞ்சலகம் வழங்கி வந்திருக்கிறது. பின்னர் சில காலம் பேருந்து மூலம் மெயில் சர்வீஸ் செயல்பாட்டில் இருந்தது. சுமார் 6,500 பேரைக் கொண்ட சிறிய நகராக இருந்த வால்பாறையில், போஸ்ட் மாஸ்டர் முக்கியமான நபராகக் கருதப்பட்டுள்ளார். 64 சதுர கிலோமீட்டர் சுற்றளவில், அடர்ந்த காடுகளுக்கு நடுவே கொடுங்குளிரில் தங்கியிருந்த மக்கள், தங்கள் குடும்பங்களுடன் பேசவும், நலம் விசாரிக்கவும் இந்த அஞ்சலகமே ஆதாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நீலகிரி, நாகை உள்ளிட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த 34 அஞ்சலகக் கட்டிடங்கள் பாரம்பரிய கட்டிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசை யில், நூற்றாண்டை எட்டியுள்ள வால் பாறை அஞ்சலகக் கட்டிடத்தையும், பாரம்பரிய கட்டிடமாக அறிவிக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் வால்பாறைக்குச் சுற்றுலா வருவோருக்கு, தபால் சேவையின் சிறப்பை உணர்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
பழமையான அஞ்சலகக் கட்டிடத்தின் மூலம் வால்பாறை வரலாற்றையும் கொண்டு செல்ல முடியும் எனவும், அதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த முடியும் எனவும் வால்பாறை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி