நாடு முழுவதும் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 10,430 எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களை நிரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களை நிரப்ப ‘நீட்’ எனும் தேசிய தகுதித்திறன் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. இந்த நீட் தேர்வு முடிவுகள் மூலம் மாணவர்களுக்கு, நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 64,000 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட இருந்தன. ஆனால், தற்போது அதில் 10,430 இடங்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை நிரப்ப 82 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய மருத்துவ நல அமைச்சகம் தடை விதித்துள்ளது. கடந்த வருடம் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) சார்பில் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சோதனை நடைபெற்றது. இதில் அரசுக்கு எம்சிஐ அளித்த பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய மருத்துவ நல அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த சில வருடங்களாக பல மருத்துவக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் பயில முடியாமல் சிரமப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்திருந்தன. அதன் அடிப்படையில் சோதனை செய்து அறிக்கை அளிக்கும்படி அமைச்சகம் எம்சிஐயிடம் கேட்டுக் கொண்டது. அதன் மீது தற்போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித் தன. மருத்துவ இடங்கள் குறைக்கப்பட்ட 82-கல்லூரிகளில், 70 தனியார் கல்லூரிகள் ஆகும். அரசு கல்லூரிகள் உ.பி.யில் 4, பிஹாரில் 3, ஜார்க்கண்டில் 2, சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் கேரளாவில் தலா ஒன்றும் இடம் பெற்றுள்ளன. இத்துடன் 68 புதிய மருத்துவக் கல்லூரிகளை அங்கீகரிக்கவும் மத்திய மருத்துவ நலத்துறை மறுத்துள்ளது. நிராகரிக்கப்பட்ட புதிய கல்லூரிகளில் பட்டியலில், தனியாருக்கானது 37-ம், அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் கல்லூரிகள் 31-ம் இடம் பெற்றுள்ளன. நாட்டின் அன்றாடம் அதிகரித்து வரும் மருத்துவர்களுக்கான தேவையை புதிய கல்லூரிகள் அமைத்து நிரப்புவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த பிப்ரவரியில் கூடிய மத்திய அமைச்சரவை, 2019 ஆம் ஆண்டிற்குள் மாவட்ட மருத்துவமனைகளுடன் 58 மருத்துவக்கல்லூரிகளை இணைப்பது எனவும், அரசு நிதிஉதவியுடன் செயல்படும் 24 புதிய கல்லூரிகளை வரும் 2021-22 ஆண்டுகளுக்குள் அமைப்பது என்றும் முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் 82 கல்லூரிகளில் 10,430 எம்பிபிஎஸ் இடங்கள் ரத்து செய்யப்பட்டது் சில தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், அடிப்படை வசதிகள் இன்றி உள்ள அக்கல்லூரிகள் மீது அரசு எடுத்த நடவடிக்கையை மற்றொரு பிரிவினர் பாராட்டியுள்ளனர்.