பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம் மே 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் வி.ரைமன்ட் உத்தரியராஜ் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மே 30-ம் தேதிக் குள் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன*. *இந்தக் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் மொத்தமுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பொது கலந்தாய்வை தமி ழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பொறியியல் படிப்பில் சேர கடந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது. இந்நிலையில், 2018-19-ம் கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 3-ல் தொடங்கி அந்த மாதம் 30-ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆன்லைன் பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.annauniv. edu/tnea2018 என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் எந்த இடத்தில் இருந்தும் பதிவு செய்யலாம். இணையவசதி இல்லாத மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழகம் முழுவதும் 42 இடங்களில் அமைக்கப்பட்ட சேர்க்கை உதவி மையங்களுக்குச்சென்று இலவசமாக பதிவு செய்யலாம். இந்த மையங்களின் பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஆன்லைன் பதிவு குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் கூறியதா வது: ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 என்ற இணையதளத்தை பயன்படுத்தி அதில் கேட்கப்படும் அடிப்படை விவரங்களை குறிப்பிட்டு முதலில் தங்களுக்கென ஒரு யூசர் ஐடி, பாஸ்வேர்டு-ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி ஆன்லைன் பதிவை தொடங்கி தேவையான விவரங்களை குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு முன்பாக செல்போன் எண், இ-மெயில் முகவரி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பிளஸ் 2 ஹால் டிக்கெட் (பதிவு எண்ணுக்காக) 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியின் விவரங்கள், சாதிச் சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம், பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் விவரம் ஆகிய விவரங்களை தயாராக . வைத்திருப்பது நல்லது. மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி வரை காத்திருக்கத் தேவையில்லை. அவர்களின் பிளஸ் 2 பதிவு எண்ணை வைத்து அண்ணா பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகள் வெளியானதும் மதிப்பெண் விவரங்களை ஆன்லைனில் எடுத்துக்கொள்ளும். பதிவுக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. ஒவ்வொரு சிறப்பு ஒதுக்கீட்டுக்கும் கூடுதலாக ரூ.100 செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் முலம் ஆன்லைனில் செலுத்தலாம். சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டும் அவர்களின் தேர்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அவர்களும் முன்கூட்டியே மற்ற அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்துவிடலாம். தேர்வு முடிவு வந்ததும் மதிப்பெண் விவரங்களை குறிப்பிட்டு பதிவை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். மாணவர்கள் ஆன்லைன் பதிவை முடித்ததும் விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை முன்பு போல அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பத் தேவையில்லை. அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக உதவி மையங்களுக்கு அழைக்கப்படும்போது, தாங்கள் வைத்திருக்கும் ஆன் லைன் பிரின்ட் அவுட் விண்ணப்பத்தில் போட்டோ ஒட்டி, கையெழுத்து அங்கேயே சமர்ப்பித்து விடலாம். பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மே 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு ரைமன்ட் உத்தரியராஜ் கூறினார். இலவச தொலைபேசி எண்கள் பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை www.tnea.ac.in, www.annauniv.eduஆகிய இணையதள முகவரிகளில் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். மேலும் ஆன் லைன் கலந்தாய்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால் 044-22359901-20 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் மாணவர்கள் தொடர்புகொள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் ஏற் பாடு செய்துள்ளது.*