வங்கியிலிருந்தோ அல்லது அஞ்சலகங்களிலிருந்தோ ரூ 2 இலட்சத்திற்கு மேல் ரொக்கமாக எடுப்பதற்கு கட்டுப்பாடுகளில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு 2017 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின்படி ரூ. 2 இலட்சத்திற்கு மேற்பட்ட ரொக்கத்தை வங்கிகளில் கையாள்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை பெறுபவர் மீது அபராதம் விதிக்கவும் அச் சட்டம் வழி செய்திருந்தது. தற்போது மத்திய நேரடி வருமான வரி வாரியம் வெளியிட்டுள்ள விளக்கம் ஒன்றில் இக்கட்டுப்பாடு கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்கள், வங்கிகள் ஆகியவற்றிலிருந்து ரொக்கம் எடுப்பதற்கு பொருந்தாது எனக் கூறியுள்ளது.
கறுப்புப் பணத்தின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் விதி ஒன்று ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தொகையை எந்தவொரு வழியிலும் தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ. 2000 ற்கும் அதிகமாக அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை வழங்கி அதன் மூலம் வரி பிடித்தம் பெறுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அறக்கட்டளைகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது