மினிமம் பேலன்ஸ் 50 ரூபாய்தான்... - வங்கி சேவையில் கலக்கும் அஞ்சல் அலுவலகங்கள்!
டிதம்,  தந்தி கூடவே அஞ்சல் அலுவலகத்தை யும் மறந்துவிட்டோம். ஆனால், அஞ்சல் அலுவ லகங்கள்தான் மக்களை எப்போதும் மறப்பதில்லை. இப்போது புதிதாக உதயமாகியுள்ள ‘இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்’ என்னும் அஞ்சல் அலுவலக வங்கியின் மூலம் ஒரு புதிய திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. வெறும் 50 ரூபாயில் சேமிப்புக் கணக்கு தொடங்கி, ஏடிஎம் கார்டு பெறும் திட்டம்தான் அது. பொதுத் துறை வங்கிகளும் தனியார் துறை வங்கிகளும் தாங்கள் அளிக்கும் வங்கிச் சேவைகளுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருக்க, இந்தத் திட்டம் மக்களிடம் படுவேகமாக பிரபலமாகி வருகிறது. 

இந்த வங்கியில் ரூ.500 இருப்பு வைத்தாலே போதும், செக் புத்தகம் கிடைத்துவிடுகிறது. எனவே, இந்த வங்கியில் கணக்கைத் தொடங்க மக்கள் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வங்கியில் கணக்கைத் தொடங்குவது எப்படி?

டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை, ஆதார், பான் கார்டு - இவற்றில் ஏதாவது ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். ஆதார் எண் இருந்தால், இந்தக் கணக்கினை ஆரம்பிப்பது மிக சுலபம். விரைவில் அனைத்து வங்கிகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட உள்ளன என்பதால், நீங்களும் ஆதார் எண் தந்து இந்தக் கணக்கைத் தொடங்கலாம். 

இந்தக் கணக்கை ஆரம்பிக்கும் போது அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரங்களின் அசலைக் காட்டவேண்டி யிருக்கும். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்களும் இந்தக் கணக்கைத் தொடங்க முடியும். மைனர்களின் பெயரில் தொடங்கப் படும் கணக்குகளுக்கு  ஏடிஎம் கார்டு வழங்கப்பட மாட்டாது. ஒரு தபால் அலுவலகத்திலிருந்து மற்றொரு தபால் அலுவலகத்துக்குக் கணக்கை மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.    

அஞ்சல் அலுவலக ஏடிஎம் கார்டுகளை தபால் அலுவலக ஏடிஎம்-கள் மற்றும் வங்கிகளின் ஏடிஎம்-களில் எத்தனை முறைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கட்டணம் எதுமில்லை. ஆண்டுக் கட்டணம்கூட கிடையாது.

நாள் ஒன்றுக்கு அஞ்சல் அலுவலக ஏடிஎம்-களில் ரூ.25,000 வரை பணம் எடுக்கலாம். வங்கி களின் ஏடிஎம்-களில் அவற்றின் உச்ச வரம்புக்கேற்ப பணம் எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, எஸ்பிஐ ஏடிஎம்-ல் ஒரு நாளில் ரூ.40,000 வரை பணம் எடுக்க முடியும் எனில், அவ்வளவுக்கு பணத்தை எடுக்க முடியும். இந்தக் கணக்கைத் தொடங்குகிறவர்களுக்கு ‘ரூபே’ கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள சென்னை மண்டல அஞ்சல் அலுவலக இயக்குநர் கோவிந்தராஜனைச் சந்தித்தோம். 

‘‘பணமதிப்பு இழப்புத் திட்டம்தான் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்துக்கு ஆதரவை பெற்றுத் தந்துள்ளது. வங்கிகள் போலவே, அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் ‘கோர் பேங்கிங்’ வழியாக இணைக்கப்பட்டுள்ளன. 

உலகத்திலேயே நமது அஞ்சல்துறைதான் மிகப் பெரிது. இந்திய தபால்துறைக்கு சுமார் 1,55,000 கிளைகள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டு தொடக்கத்தில் 2.58 கோடி பேர் இந்தச் சேமிப்புக் கணக்கில் சேர்ந்திருந்தனர். தற்போது இது 2.73 கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 3 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் இணைந்து வருகின்றனர். 

இதில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஒருவர் ஒரு கோடி  ரூபாய்கூட அஞ்சல் அலுவலகங்களில் டெபாசிட் செய்யலாம். நாங்கள் கொடுக்கிற செக் புத்தகம், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது. எந்த வங்கிச் சேவைக்கும் அஞ்சல் அலுவலக செக்கைப் பயன்படுத்தலாம்.

தமிழ்நாட்டில் தற்போது 97 அஞ்சல் அலுவலக ஏடிஎம்-கள் உள்ளன. விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. மொபைல் பேங்கிங், பர்ச்சேஸிங் பிரிவுகளில் (ஸ்வைப் மெஷின்களில் பயன்படுத்துவது) அஞ்சல் அலுவலக ஏடிஎம்-களைப் பயன்படுத்தும் வசதி விரைவில் வரவிருக்கிறது. 

இதன் மூலம் நாங்கள் வழங்கும் விரைவான சேவையைப் பார்த்து, ஐ.டி ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேமிப்புக் கணக்கைத் தொடங்குகிறார்கள். நிறைய இளைஞர்கள் விரும்பி இந்தத் திட்டத்தில் சேர்கிறார்கள். சமூக இணையதளங்கள் வழியாகவும் எங்கள் திட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் பட்டி தொட்டிகள் எங்கும் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சேவையாக எங்கள் சேவை இருக்கும்’’ என்றார். 

இப்போது சிலபல சலுகைகளை அளித்துவிட்டு, பிற்பாடு அவை எல்லாம் இல்லை என்று  சொல்லாமல் இருந்தால் சரிதான்!

 படங்கள்: தே.அசோக்


Source : http://www.vikatan.com/nanayamvikatan/2017-mar-26/recent-news/129706-post-office-services.html


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி