சிவகங்கை தபால்காரரின் 35 ஆண்டு சேவை மறக்க முடியாத பட்டுவாடா பணிசிவகங்கை தபால்காரரின் 35 ஆண்டு சேவை மறக்க முடியாத பட்டுவாடா பணி
சிவகங்கை: வேலையில் ஆர்வம் இருந்தால் மட்டுமே, சிறப்பாக செய்ய முடியும். அதற்கு முதலில் வேலையை நேசிக்க வேண்டும். செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். இதற்கு உதாரணம் சுந்தரம்,58. தபால்துறையில் 35 ஆண்டுகளாக உற்சாகத்துடன் பணியாற்றி வரும் இவர், இன்றைக்கும் இளைஞர் போல் தினமும் 10 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு தனது வயதை ஒத்த சைக்கிளில் தபால் பட்டுவாடா செய்து,சக தபால்காரர்களுக்கு 'ரோல் மாடல்' ஆக திகழ்கிறார்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணாத்தெரு தபால் அலுவலகத்தில்,1982ல் புறநிலை ஊழியராக பணியை துவக்கிய இவரது தபால் சேவை 1996 வரை, 14 வருடங்கள் அதே தபால் அலுவலகத்தில் நீடித்தது. துறை ரீதியான தேர்வில் வெற்றி பெற்று சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தபால்காரராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார்.

இந்த புத்தாண்டில் 35வது ஆண்டாக பணியில் தொடர உள்ள சுந்தரம்,பணி காலத்தில் மணியார்டர் பணத்தை தவற விட்டதாகவோ, தாமதமாக வழங்கியதாகவோ எந்த தவறும் இழைக்கவில்லை. சிவகங்கை மாவட்ட மூத்த தபால்காரரான இவர், தற்போது மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் வசித்து வருகிறார்.தினமும் சிவகங்கை வந்து விட்டு மதுரை திரும்பும் சுந்தரத்திற்கு மனைவி,2 மகள்கள் உள்ளனர்.அவர் கூறியதாவது: எனது இளமை காலத்தில் இவ்வளவு சாலை வசதி இல்லை. சைக்கிளில் கிராமம்,கிராமமாக செல்லும்போது சில நேரம் 'டியூப் பஞ்சர்' ஆகிவிடும். 3 அல்லது 4 கி.மீ., துாரம் சைக்கிளை உருட்டியபடி பக்கத்து கிராமத்திற்கு சென்று சைக்கிள் கடையை தேடி பஞ்சர் ஒட்டி விட்டு, பணியை தொடர்ந்துள்ளேன்.

அப்படிப்பட்ட நேரத்தில் சுமந்து சென்ற மதிய சாப்பாட்டை கூட சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு தொடர்ந்து 35 ஆண்டு சைக்கிள் ஓட்டியதால் என்னமோ எனக்கு இன்று வரை சர்க்கரை வியாதியோ, ரத்தக்கொதிப்போ ஏற்படவில்லை. என்னுடன் பணியில் சேர்ந்த 12 பேர் இன்றைக்கு அலைய முடியாமல் ஓய்வு பெற்று விட்டனர். எனது சீருடையை சொத்தாக கருதுகிறேன். அதை அணியும்போது பணியில் சேர்ந்த முதல் நாள் ஏற்பட்ட மகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது.

முன்பெல்லாம் 6 மாதங்களுக்கு ஒரு முறை சிறந்த தபால்காரர்களை தேர்வு செய்து கவுரவப்படுத்துவார்கள்.1998ல் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நெல்லை, துாத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சிறந்த தபால்காரராக தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டேன். 2013ல் விரைவு தபால்களை (ஸ்பீடு போஸ்ட்) 100 சதவீதம் உரியவர்களுக்கு செலுத்தியதற்காக சிவகங்கை தபால் நிலையத்திற்கு கிடைத்த பெருமையை எண்ணி இன்றும் மகிழ்ச்சி அடைகிறேன்,என்றார். தபால்காரர் சுந்தரம் மேலும் கூறியதாவது: கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகப்பகுதியில் உள்ள மருதுபாண்டியர் நகர் 'பி' பிளாக்கில் வசித்த ஒரு கல்லுாரி மாணவர் பல்வேறு அரசு பணிகளுக்கு போட்டி தேர்வு எழுதி வந்தார். அவருக்கு பலமுறை தேர்வுகளுக்கான 'ஹால் டிக்கெட்'டை நானே நேரில் சென்று கொடுத்துள்ளேன்.

ஒருமுறை அவரது முகவரிக்கு வந்த தபாலை கொடுக்க சென்றபோது வீடு பூட்டிக்கிடந்தது. விசாரித்தபோது அவரது குடும்பம் வீட்டை காலி செய்து விட்டு மதுரையில் குடியேறி இருப்பது தெரிய வந்தது. விடுமுறையில் மதுரைக்கு பொருட்கள் வாங்க சென்றபோது தற்செயலாக அந்த வாலிபரை பஸ் நிறுத்தத்தில் பார்க்க நேர்ந்தது. உடனே பஸ்சில் இருந்து இறங்கி, அவர் பெயருக்கு வந்துள்ள தபால் குறித்து தெரிவித்தேன்.


மறுநாள் அவர் சிவகங்கை வந்து அந்த தபாலை வாங்கி பிரித்து பார்த்தார். அதில் ரயில்வே துறையில் வேலையில் சேருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. அந்த தபாலை பட்டுவாடா செய்ய இன்னும் ஒரு நாள் தாமதமாகி இருந்தால், அவர் அந்த பணியில் சேர்ந்திருக்க முடியாது. இன்றைக்கும் அவர் என்னை பார்க்கும்போது அந்த சம்பவத்தை நினைவு கூறும்போது ஏதோ இனம்புரியாத மகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது,என்றார்.


Source : http://www.dinamalar.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி