விவசாய வருமானம், ஜன்தன் யோஜனா கணக்குகள் மீதும் கண்காணிப்பு ஒரே நாளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலும் சிக்கல் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்


புதுடெல்லி
ஒரே நாளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களின் விவரங்களையும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்குமாறு வங்கிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


புதிய விதிமுறை வெளியீடு
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அந்த செல்லாத நோட்டுகளை வங்கிகளில் செலுத்த டிசம்பர் 30–ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அங்கு செலுத்தி வருகிறார்கள்.

இதுவரை, ஒரு கணக்கில் ஒரு முழு ஆண்டில் மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களின் விவரங்களை மட்டுமே வருமான வரித்துறையிடம் வங்கிகள் தெரிவிக்க வேண்டி இருந்தது. ஆனால், மத்திய அரசு அளித்த கால அவகாசத்தை பயன்படுத்தி, நிறைய பேர் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்பதால், அந்த விதிமுறையை மத்திய நிதி அமைச்சகம் திருத்தி உள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளுடன் புதிய அறிவிக்கையை நேற்று வெளியிட்டது.

வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்

அதன்படி, ஒரு சேமிப்பு கணக்கில், ஒரே நாளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் மற்றும் நவம்பர் 9–ந் தேதி முதல் டிசம்பர் 30–ந் தேதி வரையிலான காலகட்டத்தில் தனித்தனியாக செலுத்தினாலும் மொத்தம் ரூ.2½ லட்சத்துக்கு மேல் செலுத்தியவர்கள் பற்றிய விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்குமாறு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதுபோல், மேற்கண்ட காலகட்டத்தில் ஒரு நபரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்பு கணக்கில் (கரண்ட் அக்கவுண்ட்) செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூ.12½ லட்சத்துக்கு மேல் இருந்தாலும் தெரிவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 31–ந் தேதிக்குள் இந்த விவரங்களை தெரிவிக்குமாறு வங்கிகளும், தபால் நிலையங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

200 சதவீதம் அபராதம்

அந்த விவரங்களை பெறும் வருமான வரித்துறை, ஜனவரி 31–ந் தேதிக்கு பிறகு, அவற்றை ஆய்வு செய்யும். சம்பந்தப்பட்டவர்கள் முந்தைய ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளுடன் அவற்றை ஒப்பிட்டு பார்க்கும். அதில், விளக்கம் அளிக்க முடியாத அளவுக்கு முரண்பாடுகள் இருந்தால், அத்தகைய நபர்களுக்கு 30 சதவீத வரியும், 12 சதவீத வட்டியும் மட்டுமின்றி 200 சதவீத அபராதமும் விதிக்கப்படும்.

அந்த நபர்கள் இந்த ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு, இந்த வரி, வட்டி மற்றும் அபராதத்தை விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. வருமான வரி கணக்கில், அவர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி விடுவதை தடுப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது.

ரூ.2½ லட்சத்துக்கு கீழும் கண்காணிப்பு

ரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் பற்றித்தான் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும் என்றபோதிலும், அதற்கு கீழ் டெபாசிட் செய்பவர்களையும் வருமான வரித்துறை கண்காணிக்க உள்ளது. ‘பெரிய அளவில் முரண்பாடு தெரிய வந்தால், ரூ.2½ லட்சத்துக்கு கீழ் டெபாசிட் செய்தவர்களின் கணக்கையும் ஆய்வு செய்வோம்’ என்று ஒரு அதிகாரி கூறினார்.

ஜன்தன் யோஜனா

மத்திய அரசின் மானியங்களை எளிய மக்கள் பெறுவதற்காக, ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில், இதுவரை பூஜ்ய நிலுவைத்தொகை இருந்த கணக்குகளில் எல்லாம் பெரிய அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

எனவே, ‘அத்தகைய கணக்குகளின் விவரங்களை வருமான வரித்துறை திரட்டி வருகிறது. விளக்கம் அளிக்க முடியாத அளவுக்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால், அத்தகைய நபர்களுக்கும் வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும்’ என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

விவசாய வருமானம்

விவசாய வருமானத்துக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகை நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இருப்பினும், அதை பயன்படுத்தி, பெருமளவில் கருப்பு பணத்தை போட வாய்ப்பு இருப்பதால், அதையும் கண்காணிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபருக்கு எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது என்பதையும், அவர் வங்கி கணக்கில் செலுத்திய தொகையையும் ஒப்பிட்டு பார்த்து, ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.

Source : http://www.dailythanthi.com/News/India/2016/11/17024543/Whatever-the-problem-is-deposited-over-Rs-50-thousand.vpf

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி