ரூ.2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தினால் பிரச்சினை வருமா?


ஐநூறும்.. ஆயிரமும்..

உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது மற்றும் கையில் இருக்கும் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ’தி இந்து’ உங்கள் குரலில் பொதுமக்கள் பதிவு செய்திருந்த சந்தேகங்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை இணை பேராசிரியர் இராம.சீனுவாசன் தரும் பதில்கள் இங்கே..

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தலாமா?
நான் கடந்த 10 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தி வருகிறேன். கடந்த நிதியாண்டில் நகைக்கடன் வாங்கியுள்ளேன். இடம் வாங்க கடன் வாங்கியுள்ளோம். தற்போது அந்தப் பணத்தை திரும்ப செலுத்த விரும்புகிறேன். சேமிப்பு கணக்கில் இருப்பு வைத்துத்தான் கடனுக்கு மாற்ற முடியும் என்கிறார்கள். இதனால் எனக்கு ஏதேனும் சிக்கல் வருமா? ரூ.2.5 லட்சத்திற்கு மேல் செலுத்தினால் ஏதேனும் பிரச்சினை வருமா?

- பாரதிதாசன், ராமநாதபுரம்
புதிய காசோலை வாங்கலாம்
நீங்கள் வருமான வரி கட்டுபவர் என்பது வங்கிக்குத் தெரியும். கடன் வாங்கினால் அது வருமான கணக்கில் வராது. எனவே இதில் மறுதளிக்க எதுவுமில்லை. எந்த வங்கியில் கடன் வாங்கினீர்களோ அதே வங்கியில் கடன் பணத்தை திருப்பிக் கொடுத்து புதிதாக காசோலை கேட்டு வாங்கலாம்.

விவசாய வருமானத்தை செலுத்தினால் சிக்கல் வருமா?
நான் விவசாயி. எனது தோப்பில் மா, தென்னை மரங்கள் உள்ளன. இதன் மூலம் இத்தனை ஆண்டுகளாக நான் சேமித்த தொகை ரூ.4 லட்சம் கையிருப்பு உள்ளது. எனக்கு வங்கி கணக்கும் இல்லை. இப்போது இந்தப் பணத்தை வங்கியில் செலுத்தும் போது விவசாய வரவு - செலவு கணக்கை கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்களா? வருமான வரி விதிக்கப்படுமா?

- முகமது ரஃபீக், மதுரை
ஆவணத்தை காட்டினால் ஆபத்தில்லை
விவசாயத்திலிருந்து எத்தனை கோடிக்கு வருமானம் வந்தாலும் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. அதேசமயம், விவசாய வருமானத்தை வங்கியில் டெபாசிட் செய்து அந்தத் தொகைக்கு வட்டி பெறப்பட்டால் அதற்கு மட்டும் வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும். நீங்கள் விவசாயம் செய்திருந்தால் அதற்கான ஆவணங்கள், நில வரி ரசீதுகள் உள்ளிட்டவைகளை வைத்திருப்பீர்கள். அவைகளைக் கொண்டுபோய் வங்கியில் காட்டினால் போதும். நீங்கள் செலுத்தும் தொகை தொடர்பாக எவ்வித கேள்வியும் எழுப்பப்பட மாட்டாது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கலாமா?
ங்களது ஆட்டோமொபைல் கடையில் தினமும் 50 ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறது. நாங்கள் அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். பொதுமக்களின் நலன் கருதி எங்களைப் போன்ற வியாபாரிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை இன்னமும் வாங்கி வருகிறார்கள். ஆனால், அவற்றை வாங்கக்கூடாது என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். இது சரியா?

- பூச்சிராஜன், தூத்துக்குடி
செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வாங்குவது சட்டப்படி குற்றம்.
குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசாங்கம் அறிவித்த பிறகு, அரசாங்க நிறுவனங்களோ, அரசால் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களோ தவிர வேறு யாரும் அவற்றை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் அது சட்டப்படி குற்றம். அரசாங்கமோ, அரசு அறிவிக்கும் நிறுவனங்களோ பழைய நோட்டுகளை வாங்கினால் அது மறு சுழற்சிக்கு வராது; நேரடியாக ரிசர்வ் வங்கிக்குச் சென்றுவிடும். அதில்லாமல் தனியாரோ பிற வர்த்தக நிறுவனங்களோ பெற்றுக்கொள்ளும் ரூபாய் நோட்டுகள் மீண்டும் மீண்டும் மறுசுழற்சிக்கு வரும். அதனால்தான் இத்தகைய நடவடிக்கை கையாளப்படுகிறது.

எனது கணக்கில் மற்றவரின் பிரீமியம் பணத்தை வரவு வைக்கலாமா?
நான் எல்.ஐ.சி. ஏஜென்டாக இருக்கிறேன். ஆகையால் வாடிக்கையாளர்கள் பல இடங்களிலிருந்து பிரீமியம் செலுத்த எனது (சேமிப்பு) வங்கிக் கணக்கில் பணம் செலுத்துகின்றனர். அப்படி ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை பணபரிமாற்றம் நடந்துள்ளது. நான் வரி செலுத்த வேண்டுமா?

- பரமேஸ்வரன், கரம்பக்குடி
சேமிப்புக் கணக்கில் வரவுவைக்க முடியாது
வங்கியில் செலுத்தப்படும் பணம் அனைத்துமே வருமானமாகவோ ஊதியமாகவோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பரமேஸ்வரன் நடப்புக் கணக்கு வைத்திருந்து அதில் அவரது வாடிக்கையாளர்கள் பிரீமியம் தொகையை செலுத்தி இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதில்லாமல், அவரது சேமிப்புக் கணக்கில் பிரீமியம் தொகைகளை செலுத்தி இருப்பதால் இதற்கு வருமானவரி துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரலாம்.

பிரச்சினை தீர என்னதான் வழி
த்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்பும்கூட சில வியாபாரிகள் இன்னமும் அந்த நோட்டுகளை வாங்கிக் கொண்டு வியாபாரம் செய்வதால் பழைய நோட்டுகளை வாங்க மறுக்கும் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது. சில இடங்களில் பழைய நோட்டுகளை வாங்குவதும் பல இடங்களில் வாங்க மறுப்பதும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சில்லறை பொருட்களை வாங்கமுடியாமல் மக்களும் தவிக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை தீர்க்க வழியே இல்லையா?

- மகேந்திரன், போரூர் வியாபாரிகள் சங்க தலைவர், சண்முகநாதன், காரைக்குடி
விரைவில் சகஜ நிலை திரும்பும்
பூச்சிராஜனுக்கு சொன்ன பதில்தான் இவர்களுக்கும். செல்லாது என அரசாங்கம் அறிவித்த பின்பும் அந்த நோட்டுகளை தனியார் வாங்குவது சட்டப்படி குற்றம். எனவே, நீங்களும் வாங்க வேண்டாம். அடுத்த சில நாட்களுக்குள் எல்லாம் சகஜநிலைக்கு வந்துவிடும்.

வங்கியில் செலுத்திய பணத்தை திருப்பி எடுத்தால்?
ற்போது வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சத்தை செலுத்திவிட்டு பிறகு அதை திருப்பி எடுத்துவிட்டால் அந்தக் தொகைக்கு வருமான கணக்கு காட்டவேண்டி இருக்குமா?

- மணிமாறன், திருவாடானை
சந்தேகம் இருந்தால் மட்டுமே கேள்வி வரும்
வங்கியில் பணம் போடும் அனைவரையும் வருமான வரித்துறையினர் கேள்வி கேட்பதில்லை. யார் மீது சந்தேகம் வருகிறதோ அவர்களை மட்டும்தான் கண்காணிக்கிறார்கள். உதாரணத்திற்கு, தியாகராய நகரில் ஜவுளிக்கடை நடத்தும் முதலாளி தனது கணக்கில் பத்து லட்ச ரூபாய் போட்டால் சந்தேகம் வராது; கேள்வி எழுப்ப மாட்டார்கள். அதேசமயம், அவரது கடையில் வேலை செய்யும் நூறு பேர் தங்களது வங்கிக் கணக்கில் ஒரே சமயத்தில் தலா ரூ. 2.5 லட்சம் செலுத்தினால் சந்தேகம் வரும்; கேள்வி கேட்பார்கள். அப்போது, வருமானத்திற்கான ஆதாரத்தை காட்டாவிட்டால் சிக்கலை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்

Source : http://tamil.thehindu.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி