காந்தியைப் போற்றும் சேலம் அஸ்தம்பட்டி தபால் நிலையம்!

காந்தியைப் போற்றும் சேலம் அஸ்தம்பட்டி தபால் நிலையம்!

சேலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு எதிராக அமைந்துள்ள அஸ்தம்பட்டி தபால் நிலையம் மற்ற தபால் நிலையங்களுக்கு இல்லாத பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு திகழ்கிறது. காரணம் 1934-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி சேலம் வருகை தந்தபோது தங்கி இருந்த இடத்தில் தான் இந்த தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் நினைவைப் போற்றும் விதத்தில் தபால் தலை அருங்காட்சியகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தபால் நிலையம் செயல்பட்டு வரும் இடம் நடேச பண்டாரம் என்பவருக்கு சொந்தமான இடம் ஆகும். காந்தி சேலம் வருகை தந்தபோது நடேச பண்டாரத்தின் சிறப்பு விருந்தினராகத் தங்கி இருந்தார் என்பது கூடுதல் தகவல். காங்கிரஸ் பிரமுகரான நடேச பண்டராம், ராஜாஜி, விஜயராகவாச்சாரியார் போன்ற தலைவர்கள் வகித்த நகரசபை தலைவர் பொறுப்பை இவரும் வகித்து உள்ளார்.

காந்தியின் நினைவை பசுமையோடு சொல்லும் தபால் நிலைய வளாகம்:
தபால் நிலைய வளாகத்தில் உள்ள வானுயர்ந்த மரங்களால் வளாகத்தில் நுழையும்போதே ஜில்லென்று காற்று வீசி நம்மை வரவேற்கிறது. வளாகத்தில் பூங்கா அமைந்துள்ள இடத்துக்குச் சென்றால் நிசப்த அமைதி நிலவுகிறது, மன அமைதிக்காக ஓய்வு எடுப்பவர்கள் அமர்வதற்கும் என பிரத்தியேக இருக்கைகள் உள்ளன. பூங்காவை சுற்றிலும் காந்தியின் பொன்மொழிகள் அடங்கிய வாசகங்கள் உள்ளன, இதை படிப்பவர்களுக்கு புத்துணர்வும் தன்னம்பிக்கையும் தருவதாக அமைகிறது. மேலும் காந்தி சிலை பாரத மாதா சிலை என தேசிய உணர்வைத் தாங்கி நிற்கிறது இந்தத் தபால் நிலைய வளாகம். தபால் நிலையை வளாகம் முழுவதும் பசுமை நிறைந்து காந்தியின் நினைவு கூறிக்கொண்டு இருக்கிறது.
காந்தி பயன்படுத்தியவை பொக்கிஷங்களாக:


சேலம் வந்து இருந்தபோது காந்தி பயன்படுத்திய தேக்கு மரத்தாலான நாற்காலி, மரத்தால் செய்யப்பட்ட தட்டு, மரத்தால் உருவாக்கப்பட்ட காலணிகள் என அவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் இங்கு பாதுகாப்பாக மக்கள் பார்வைக்காக வைத்து உள்ளனர். மேலும் அவர் பயண்படுத்திய புத்தகங்களும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. சுவற்றில் காந்தி பற்றிய பழமையான ஓவியங்களும், அவரின் பொன்மொழிகள் அடங்கிய வாசகங்களும் வைக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய கடிதங்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்று உள்ளன. காந்தி பயன்படுத்திய கைராட்டை ஒன்றும் உள்ளன. 1948-ம் பாரதியாருக்கு மணிமண்டபம் துவக்க விழாவுக்கு காந்தி அனுப்பிய வாழ்த்துச் செய்தி இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்று உள்ளது. மேலும் இந்த வாழ்த்துச் செய்தியை காந்தி தமிழில் கையெழுத்திட்டு உள்ளார். அருங்காட்சியகத்தின் உள்ளே காந்தியின் மார்பளவு வெண்கலச் சிலை ஒன்று உள்ளது.காந்தியின் தபால்தலைகள் மற்றும் தபால் அட்டைகள்:

காந்தியின் பெருமையை போற்றும் வகையில் வெளியிடப்பட்ட தபால்தலைகள் மற்றும் தபால் அட்டைகளை என அனைத்தும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி போலாந்து கென்யா மெக்சிகோ கிரீன்லாந்து ஸ்காட்லாந்து போன்ற மற்ற நாடுகளும் வெளியிட்ட தபால்தலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளன. காந்தியின் தபால்தலைகளை வெளியிட்ட நாடுகளின் பெயர், வருடம் என விபரமாக தனித்தனியாக எழுதி வைத்து உள்ளனர்.அலுவலக வேலை நாட்களில் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். இதற்காக எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இந்த அருங்காட்சியகத்தைப் பற்றிய முழுத் தகவல் அடங்கிய கையேடு ஒன்றை பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. சேலத்தில் பார்வையிட வேண்டிய இடங்களில் இந்த இடமும் ஒன்று. அவசியம் ஒரு முறையாவது குழந்தைகளுடன் வந்து செல்ல வேண்டிய இடம் இந்த அருங்காட்சியகம். இங்கு பார்வையிடும் பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் பார்வையிட்ட பிறகு இனிப்புகள் வழங்கி குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர். சுதந்திரம் பெற்று தந்த காந்தியின் அருங்காட்சியகத்தை சுதந்திரமாக பார்வையிடலாம்.

- லோ.பிரபுகுமார், 
(மாணவப் பத்திரிக்கையாளர்) 

படங்கள்: க.மணிவண்ணன் 

(மாணவப் பத்திரிக்கையாளர்)

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி