தமிழக ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக ஆசிரியர் நியமன தகுதித் தேர்வு வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25-ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அரசாணை 71-ல் 'வெயிட்டேஜ்' முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசாணை செல்லும் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபால முருகன், தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.பி.ராவ், 'வெயிட்டேஜ்' முறையை அமல்படுத்த மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது. 5 சதவிகிதம் 'வெயிட்டேஜ்' அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, தமிழக அரசு 'வெயிட்டேஜ்' முறையில் இடங்களை நிரப்புவது தவறு கிடையாது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று வாதிட்டார்.மனுதாரர் தரப்பில், 'தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதானே நிரப்ப வேண்டிய இடங்கள் குறித்து அரசுக்கு தெரியும்? அதற்கு முன்பே இது குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது? தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தருணத்தில் இந்த 5 சதவிகித 'வெயிட்டேஜ்' பற்றி அரசாணை வெளியிடுகிறது. இதனால் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி