ஆமதாபாத்: உலக கோப்பை கபடி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. நேற்று நடந்த பைனலில், ஈரானை 38-29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இந்திய வீரர் அஜய் தாகூர் 14 புள்ளிகள் எடுத்து அசத்தினார்.
இந்தியாவின் ஆகமதாபாத்தில், உலக கோப்பை கபடி தொடர் நடந்தது. மொத்தம் 12 மணிகள் பங்கேற்றன. கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் அரையிறுதியுடன் திரும்பிவிட்டன.
எதிர்பார்த்தது போல, இந்தியா, ஈரான் அணிகள் பைனலுக்கு முன்னேறியது. நேற்று நடந்த இப்போட்டியில் 'டாஸ்' வென்ற ஈரான் அணி, 'சைடு' தேர்வு செய்தது.
முதலில் தடுமாறிய இந்திய அணி
இந்திய அணிக்கு முதல் புள்ளி பெற்றுத் தந்தார் பர்தீப் நார்வல். அடுத்தடுத்த ரெய்டுகளில் இவர் செய்த தவறு காரணமாக இந்திய அணி 6-7 என, பின் தங்கியது.
ஒருகட்டத்தில் இந்திய அணி 3 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குச் சென்றது. தொடர்ந்து கேப்டன் அனுப் குமாரும், ஈரான் வீரர்கள் 'பிடியில்' சிக்கினார்.
கடைசியில் இந்திய அணி 'ஆல் அவுட்டாக' ஈரான் அணிக்கு போனசாக 2 புள்ளி கூடுதலாக கிடைத்தது. முதல் பாதியில் இந்திய அணி 13-18 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
இரண்டாவது பாதியில் எழுச்சி
இரண்டாவது பாதியில் இந்திய அணி எழுச்சி பெற்றது. இந்திய வீரர் அஜய் தாகூர், அடுத்தடுத்து புள்ளிகள் குவித்தார். இதனால், 17-19 என, ஈரானை நெருங்கியது.
தொடர்ந்து அசத்திய இந்தியா, ஈரானை 'ஆல் அவுட்' செய்ய, 24-21 என, முதன் முறையாக முன்னிலை பெற்றது. போட்டி முடிவதற்கு கடைசி 5 நிமிடம் முன், ஈரானை விட இந்தியா 5 புள்ளிகள் (29-24) முன்னிலை பெற்றது.
8-ஐயும் அள்ளியது இந்தியா
பின், இந்தியா ஈரானை இரண்டாவது முறையாக 'ஆல் அவுட்' செய்ய 34-24 என, புள்ளிகள் குவித்தது. முடிவில் இந்திய அணி 38-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, உலக கோப்பை வென்று அசத்தியது. இதுவரை நடந்த 8 கபடி உலக கோப்பை தொடரிலும் இந்தியா கோப்பை வென்று அசத்தியது.