பொது சேவை மையங்கள் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற கலெக்டர் வேண்டுகோள்
திருச்சி மாவட்டத்தில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் மொத்தம் 197 பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 1.6.2014 முதல் பொது சேவை மையங்களில் ஆன்–லைன் மூலம் வருவாய்த்துறையின் மூலம் ஐந்து வகை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவாய்த்துறை சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி வருமான சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்றிதழ்கள், ஆதரவற்ற பெண் சான்றிதழ்கள் என இதுவரை மொத்தம் 6 லட்சத்து 13 ஆயிரத்து 579 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற ரூ.50 மட்டும் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பட்டா மாறுதல் கணினி மயமாக்கப்பட்டு இதுவரை மொத்தம் 22 ஆயிரத்து 53 கணினி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா மாறுதல் விண்ணப்பத்திற்கு ரூ.50 மற்றும் சிட்டா நகலுக்கு ரூ.20 சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சமூக நலத்துறையின் மூலம் திருமண உதவித்தொகை (5 திட்டங்கள் உட்பட) மற்றும் முதல்–அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 721 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திருமண உதவித்தொகை விண்ணப்பத்திற்கு ரூ.100 மட்டும் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பொது சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் வருவாய்துறை சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களை பெற்று பயன்அடையுமாறு கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.