ஐஞ்சிறுகாப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

· ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
· ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
· ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
· நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
· உதயன குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
· யசோதர காவியம் = வெண்ணாவலூர் உடையார் வேள்
· நீலகேசி = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
· சூளாமணி = தோலாமொழித்தேவர்
நாககுமார காவியம்
நாககுமாரகாவியத்தின் உருவம்:

· ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
· காலம் = கி.பி.16ஆம் நூற்றாண்டு
· பாடல்கள் = 170
· சருக்கம் = 5
· பாவகை = விருத்தப்பா
· சமயம் = சமணம்
பெயர்க்காரணம்:
· கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.
வேறு பெயர்:
· நாகபஞ்சமி கதை
பொதுவான குறிப்புகள்:
· நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்.
· மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
· 519 பெண்களை மணக்கிறான் தலைவன்
· இந்நூலை "சொத்தை நூல்" என்கிறார் மது.ச.விமலானந்தம்
மேற்கோள்:
· அரனின்றிப் பின்னை ஒன்றுமுயிர்க்கு அரணில்லை என்றும்
மறமின்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லைஎன்றும்
திறமிகு உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம் இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத்தாரே
உதயணகுமார காவியம்
உதயனகுமார காவியத்தின் உருவம்:
· ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
· காலம் = கி.பி.15ஆம் நூற்றாண்டு
· பாடல்கள் = 369
· காண்டம் = 6
காண்டங்கள்:
· உஞ்சைக் காண்டம்
· இலாவண காண்டம்
· மகத காண்டம்
· வத்தவ காண்டம்
· நரவாகன காண்டம்
· துறவுக் காண்டம்
வேறு பெயர்:
· உதயணன் கதை
பொதுவான குறிப்பு:
· இந்நூலின் மூலநூல் = பெருங்கதை
· கதைத்தலைவன் = உதயணன்
· உதயணனை "விச்சை வீரன்" என்றும் கூறுவர்.
· உதயணன் யாழின் பெயர் = கோடபதி
· "பெயர் தான் காவியம், ஆனால் காவியம் என்பது இம்மியும் இல்லை" என்பார் மது.ச.விமலானந்தம்
மேற்கோள்:
· வீணை நற்கிழத்தி நீ, வித்தக உருவி நீ
நாணின் பாவை தானும் நீ, நலன்திகழ்மணியும் நீ
காண என்றன் முன்பாய்க் காரிகையே வந்து, நீ
தோணி முகம் கட்டு எனச் சொல்லியே புலம்புவான்
யசோதர காவியம்
யசோதர காவியத்தின் உருவம்:
· ஆசிரியர் = வெண்ணாவலூர் உடையார் வேள்
· காலம் = 13ஆம் நூற்றாண்டு
· பாடல்கள் = 320
· சருக்கங்கள் = 5
· பாவகை = விருத்தம்
· சமயம் = சமணம்
பொதுவான குறிப்புகள்:
· வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்தில் இருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தார் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
· "மாளவ பஞ்சம்" என்னும் கருநாடக இசை பற்றி கூறப்பட்டுள்ளது.
மேற்கோள்:
· யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்
· தம்மைக் கொல்லின் வான்உயிர் இன்பமே
அல்லால் வருநெறி திரியும் அன்றி
ஊன்உயிர் இன்பம் எண்ணி எண்ணாமல்
மற்றொன்றும் இன்றி மானுடர்வாழ்வு மண்ணில்
மரித்திடும் இயல்பித்ரு அன்றோ
நீலகேசி
நீலகேசியின் உருவம்:
· ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
· காலம் = 6ஆம் நூற்றாண்டு
· பாடல்கள் = 894
· சருக்கம் = 10
· பாவகை = விருத்தம்
· சமயம் = சமணம்
வேறு பெயர்:
· நீலகேசி தெருட்டு
· நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)
பெயர் காரணம்:
· நீலம் = கருமை, கேசம் = கூந்தல்
· கேசி = கூந்தலை உடையவள்
· நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்
பொதுவான குறிப்புகள்:
· நீலகேசி என்றால் கருத கூந்தலை உடையவள் என்று பொருள்
· இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது.
· நூலுக்கு உரை எழுதியவர் = திவாகர வாமன முனிவர்.
· இவரின் உரை "சமய திவாகரம்" எனப்படுகிறது.
மேற்கோள்:
· கோறல் பொய்த்தல் கொடுங்களவு
நீங்கிப் பிறர் மனைகண்மேல்
சேரல் இன்றிச் செலும் பொருள்மேல்
சென்ற சிந்தை வேட்கையினை
ஆறு கிற்பின் அமர் உலகம்
நுன்கண் கடியதாம் என்றாள்
சூளாமணி
சூளாமணியின் உருவம்:
· ஆசிரியர் = தோலாமொழித் தேவர்
· காலம் = கி.பி.பத்தாம் நூற்றாண்டு
· பாடல்கள் = 2330
· சருக்கம் = 12
· பாவகை = விருத்தம்
· சமயம் = சமணம்
பெயர்க்காரணம்:
· மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
· நூல் ஆசிரியர் தோலாமொழித் தேவரின் இயற் பெயர் வர்த்தமான தேவர்.
· இந்நூலின் முதல் நூல் = வடமொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
· சூளாமணியின் கதை நாயகன் திவிட்டன்
· நூலை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
· "விருதப்பாவை கையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி ஆசிரியரையும் மிஞ்சிவிட்டார்" என்கிறார் மு.வரதராசனார்
· "சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி" என்று கி.வா.ஜகன்னாதன் கூறுகிறார்.
· "சிந்தாமணியிலும் கூட இத்தகைய ஓடமும் இனிமையும் இல்லை" என்கிறார் தெ.பொ.மீ
மேற்கோள்:
· ஆணை துரப்ப அரவு உரை ஆழ்குழி
நானவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கோல் நீ
காப்பியம்
தனிப்பாடல்களின் தொகுப்பாக அமையாமல், நீண்ட கதையைத் தொடர்நிலைச் செய்யுளில் அமைத்துக் கூறுவது காப்பியம் ஆகும். காப்பியத்தில் கிளைக் கதைகள் பல இடம் பெறுவதுண்டு
ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், பிற காப்பியங்கள் எனத் தமிழ்க் காப்பியங்களை வகைப்படுத்தலாம்.
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்4. வளையாபதி - பெயர் தெரியவில்லை5. குண்டலகேசி - நாதகுத்தனார்
இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன.
ஐஞ்சிறு காப்பியங்கள்
1. சூளாமணி - தோலாமொழித் தேவர்2. யசோதர காவியம் - வெண்ணாவலூருடையார் வேள்3. உதயணகுமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை4. நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை5. நாககுமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
பிற காப்பியங்கள்
1. பெருங்கதை - கொங்குவேளிர்2. கம்பராமாயணம் - கம்பர்3. வில்லிபாரதம் - வில்லிபுத்தூராழ்வார்4. பெரியபுராணம் - சேக்கிழார்5. கந்தபுராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்6. தேம்பாவணி - வீரமாமுனிவர்7. சீறாப்புராணம் - உமறுப்புலவர்8. பிரபுலிங்க லீலை - சிவப்பிரகாசர்
இவையேயன்றித் திருவிளையாடற்புராணம் முதலான தலபுராணங்களும், பிற்காலத்தில் இயற்றப்பட்ட இயேசு காவியம் போன்றனவும் காப்பியம் என்னும் இலக்கியப் பகுப்பில் அடங்குவனவாகும்.
இக்காப்பியங்களின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை ஆகியன குறித்து இனிக் காணலாம்.

உருவம்
சிலப்பதிகாரம் ஆசிரியப்பா, வெண்பா, இடையிடை உரைநடை, விருத்தம் எனக் கலவையான யாப்புடையது.
மணிமேகலை, பெருங்கதை ஆகியன ஆசிரியப்பா யாப்பின. ஏனைய காப்பியங்கள் யாவும் விருத்தப்பாக்களால் ஆனவை.
ஆசிரியப்பா
சிலம்பு 3 காண்டங்களும், 30 காதைகளும் கொண்டது.
புகார்க் காண்டம் - 10 காதை
மதுரைக் காண்டம் - 13 காதை
வஞ்சிக் காண்டம் - 7 காதை
என்னும் அமைப்புடையது. ஆசிரியப்பாக்கள் 'என்' என்னும் ஈற்றசை பெற்று முடிகின்றன.
விருத்தம்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் (6, 7, 8 சீர்கள்) கலிவிருத்தம் ஆகியவற்றால் பெரும்பான்மையான காப்பியங்கள் யாக்கப் பெற்றுள்ளன. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் நான்கு கொண்டது ஆசிரிய விருத்தம் ஆகும்.
ஆசிரிய விருத்தம்- 6 சீர்கள்
தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ
(கம்பராமாயணம்)

கலிவிருத்தம்
நான்கு சீர்களையுடையதாகிய அளவடிகள் நான்கு கொண்டது கலிவிருத்தமாகும்.
ஆனை துரப்ப அரவுஉறை ஆழ்குழி
நால்நவில் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ
(சூளாமணி)
(துரப்ப = துரத்த; நால் = தொங்கும்; நவில் = விழுது; நாலும் = தொங்கும்)
யானை துரத்த அஞ்சி ஓடி வந்தவன் பாம்பு உள்ள ஒரு குழியில் சறுக்கி விழ, தற்செயலாக ஆலம் விழுது ஒன்றைப் பற்றியவனாக உள்ளான்; அதுவும் அறுந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தேனடையிலிருந்து ஒழுகும் தேன்துளியைச் சுவைக்கின்றான் என வாழ்வின் இன்பத்தை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.
உள்ளடக்கம்
'பாவிகம் என்பது காப்பியப் பண்பே' என, காவியம் முழுவதும் பரவிக் கிடப்பதும் மையப்பொருளாவதுமாகிய பொருண்மையைப் பாவிக அணியாக எடுத்துரைக்கும், தண்டியலங்காரம்.காப்பியத்தில் கிளைக்கதைகள் பல வருதல் போன்றவற்றால் ஒன்றற்கு மேற்பட்ட நீதிக் கருத்துகள் பல இடம் பெறுதல் இயல்பேயாகும்.
அறம் பிறழாமை, மண்ணாசையின் தீங்கினையுரைத்தல், சமயம் சார்ந்த கருத்துகள் என மூவகைகளில் காப்பிய உள்ளடக்கத்தினைக் காணலாம்.

அறம் பிறழாமை
சிலம்பில் மூவகைக் கோட்பாடுகள் காணப்படுகின்றன.
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாக
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்
என்பது பாயிரப் பகுதி.
1. அறம் பிறழாமை
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்
எனப் பாண்டியன் உயிர் நீக்கின்றான்.
2. பத்தினியின் பெருமை
இவளோ
கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமா மணி
என்பது கவுந்தியடிகள் கூற்று.
3. ஊழ்வினை
கோவலன் கொலை செய்யப் பெற்றமையைக் கூறும் பகுதி.
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென
மண்ணாசை கூடாது
வில்லிபாரதம் மண்ணாசை கூடாது என்பதை வலியுறுத்தக் காண்கிறோம். பாண்டவர்களிடமிருந்து சூதாடி நாடு கவர்ந்த கௌரவர்கள், பாண்டவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முடித்து மீண்டும் வந்து நாடு கேட்டபோது, சிறிதளவும் நிலமும் தரமறுத்து, அதனால் ஏற்பட்ட போரில் உறவினர் சூழ அழிந்தொழிந்தனர்.
சமயம்
சிலப்பதிகாரம் சமயப் பொதுநோக்குடையதாகத் திகழ்கின்றது. மணிமேகலை, பௌத்த சமய மேம்பாட்டை உணர்த்துவதற்கென்றே எழுதப் பெற்றது. சீவக சிந்தாமணி சமணமே உயர்ந்தது என நிறுவும் நோக்குடையது. வளையாபதி சமண நூல். குண்டலகேசி பௌத்தக் காப்பியம்.
ஐஞ்சிறு காப்பியங்கள் சமணம் சார்ந்தவையே என்பது குறிப்பிடத் தக்கது.
பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் என்பவை சைவ சமயம் சார்ந்தவை. இவை முறையே சிவபெருமானின் வலக்கண், நெற்றிக்கண், இடக்கண் எனப் போற்றப் பெறுகின்றன.
கம்பராமாயணமும் வில்லிபாரதமும் வைணவம் சார்ந்தவை.
தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம் ஆகியன கிறித்துவ சமயத்தன.
சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியமாகும்.
தலபுராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றன் பெருமையுரைப்பன. இவையும் காப்பியம் எனத்தகும் தன்மையன. இவை எண்ணற்றன.
இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டனவாகிய புலவர் குழந்தையின் இராவண காவியம், கவிஞர் முடியரசனின் பூங்கொடி ஆகியன முறையே தமிழினம், தமிழ்மொழி ஆகியவற்றின் சிறப்புரைக்க வந்தனவாகும்.
உத்திமுறை
விரிவாகச் சொல்வதுடன், விளங்குமாறு சொல்வதும் காப்பியத்தின் இன்றியமையா இயல்புகள் ஆதலின் பல்வேறு உத்திமுறைகளைப் பயன்படுத்த வேண்டியது காப்பியங்களின் தேவையாகின்றது.
தன்மையணி
துயரம் ஒன்று நேரும் என உணர்த்தும் பகுதி, உள்ளவாறு வருணிக்கப்படுகிறது.
குடப்பால் உறையா, குவிஇமில் ஏற்றின்மடக்கணீர் சோரும் - வருவதொன்று உண்டு ; உறிநறு வெண்ணெய் உருகா, உருகும்மறிதெறித் தாடா - வருவதொன்று உண்டு ;நான்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும்.மான்மணி வீழும் - வருவதொன்று உண்டு
(சிலப்பதிகாரம்)
உவமையணி
உவவனம் என்னும் மலர்வனம், ஓவியம் தீட்டிய போர்வையைப் போர்த்தியதுபோல் உள்ளது என்கிறது மணிமேகலை.
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கை படாம்போர்த் ததுவே
என்பது அது.
உதயகுமாரன் செலுத்திய தேரின் வேகம்,
ஓடுமழை கிழியும் மதியம் போலமாட வீதியின் மணித்தேர்க் கடைஇ
என உவமை கொண்டு உணர்த்தப்படுகின்றது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி