வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஓய்வூதியதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் ஓய்வூதியம் வினியோகிக்கும் வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகளில் ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும்.இதையொட்டி ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளைக்கு ஓய்வூதிய வழங்கல் உத்தரவு (பென்ஷன் பேமென்ட் ஆர்டர்), ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவை சுலபமாக முடித்துக் கொள்ளலாம்
வங்கிக் கணக்குடன் ஆதார் எண், ஓய்வூதிய வழங்கல் உத்தரவு ஆகியவற்றை இணைப்பதன் மூலம் ‘ஜீவன் பிரமான்’ வசதியை அனைத்து ஓய்வூதியதாரர்களும் பெறமுடியும். இதன் கீழ் ஓய்வூதியதாரர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.