புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்புதமிழக புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

ஓ.பன்னீர்செல்வம்நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு வயது 65. பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார். பெரியகுளம் நகர சபை தலைவராகவும், நகர அ.தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2001, 2011-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வருவாய்த்துறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வத்துக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும், கவிதாபானு என்ற மகளும் உள்ளனர்.

இடைப்பாடி கே.பழனிச்சாமி

பொதுப்பணித்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டு உள்ள இடைப்பாடி கே.பழனிச்சாமியின் (வயது 62) சொந்த ஊர் சேலம் மாவட்டம் இடைப்பாடிஅருகே உள்ள சிலுவம்பாளையம். கடந்த 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவி வகித்து உள்ளார்.தந்தை பெயர் கருப்ப கவுண்டர். தாயார் தவுசாயம்மாள். மனைவி பெயர் ராதா. மகன் நிதின் குமார் பி.இ. படித்து உள்ளார். 

செல்லூர் கே.ராஜூ

கூட்டுறவுத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டு உள்ள செல்லூர் கே.ராஜூ (வயது 62). மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2011-ம் ஆண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார். காமாட்சி தேவரின் மகனான இவர், பி.எஸ்.சி. பட்டதாரி. இவரது மனைவி பெயர் ஜெயந்தி. 2 மகள்கள் உள்ளனர்.

பி.தங்கமணி

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள பி.தங்கமணி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். இவரது தந்தை பெருமாள் கவுண்டர், தாயார் செல்லம்மாள். 56 வயதான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 27 வயதில் பரணிதரன் என்ற மகனும், 25 வயதில் லதாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.இவர் ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.வேலுமணி

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்.ஏ., எம்.பில் படித்துள்ள இவர் கோவையை அடுத்துள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர். கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தஇவர் குனியமுத்தூர் நகராட்சி தலைவராக இருந்தவர். எஸ்.பி.வேலுமணியின் மனைவி பெயர் வித்யா தேவி. இவர்களுக்கு விஷால் என்ற மகனும், வந்தனா என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் தேர்ந்து எடுக்கப்பட்டு சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஜெயகுமார்

மீன்வளத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஜெயகுமார்(வயது 55) பி.எஸ்.சி., பி.எல். படித்து வக்கீலாக இருக்கிறார்.கட்சி போராட்டங்களில் கலந்துகொண்டு 8 முறை சிறைக்கு சென்றுள்ளார். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றபோது அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றார். 2001-ம் ஆண்டிலும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். கடந்த முறை தமிழக சட்டசபை சபாநாயகராக பணியாற்றினார்.ஜெயகுமாருக்கு ஜெ.ஜெயகுமாரி என்ற மனைவியும், ஜெயசிம்மன், டாக்டர் ஜெயவர்தன் ஆகிய 2 மகன்களும், ஜெயபிரியா என்ற மகளும் உள்ளனர். இதில் டாக்டர் ஜெயவர்தன் தென்தென்னை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஜெயகுமாரின் தந்தை துரைராஜ் 1968-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.வி.சண்முகம்

சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு வயது 51. சி.வி.சண்முகம் பி.ஏ. பி.எல். படித்துள்ளார். இவருடைய தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பி. யாகவும், ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அமைப்பாளராகவும் இருந்துள்ளார். சி.வி.சண்முகம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.சி.வி.சண்முகத்திற்கு கவுரி என்ற மனைவியும், ஜெயசிம்மன் என்ற ஒரு மகனும், வள்ளி என்ற மகளும் உள்ளனர். எம்.சி.சம்பத்தொழில் துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.சி.சம்பத் கடலூர் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். இவரது சொந்த ஊர் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமார மங்கலம் கிராமம் ஆகும். எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர். இவர்கடந்த 2011-ம் ஆண்டும் இதே தொகுதியில் வெற்றி பெற்று ஊரக தொழில்துறை அமைச்சராக பணியாற்றினார். 2001-ம் ஆண்டு நெல்லிக்குப்பம் தொகுதியில் வெற்றி பெற்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

எஸ்.பி.சண்முகநாதன்

பால்வளத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டு உள்ள எஸ்.பி.சண்முகநாதன் (வயது 61), ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பண்டாராவிளையைச் சேர்ந்தவர்.1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்து இருக்கிறார். இவருடைய மனைவி ஆஷா. ராஜா என்ற மகனும், புவனேசுவரி, கலையரசி, பொன்னரசி, தமிழரசி, பொன் ரேகா ஆகிய 5 மகள்களும் உள்ளனர். 

ஆர்.பி.உதயக்குமார்

வருவாய்த்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயக்குமார்திருமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இவர் பி.காம்., பி.எல்., எம்.எஸ்.டபிள்யூ படித்துள்ளார். இவரது மனைவி தாமரைச் செல்வி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு தான் முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.சி.வீரமணி

வணிக வரித்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள கே.சி.வீரமணி (வயது54) பி.ஏ.பட்டதாரி ஆவார். சொந்த ஊர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள காந்தி நகர் ஆகும்.2006-ம் ஆண்டு முதல் வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். கடந்த முறை சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.கே.சி.வீரமணிக்கு மேகலை என்ற மனைவியும், அகல்யா (19), யாழினி(14) என்ற 2 மகள்களும், இனியவன்(14) என்ற மகனும் உள்ளனர்.

பி.பெஞ்சமின்

பள்ளி கல்வித்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள பெஞ்சமின்(வயது46) சென்னை அருகே உள்ள அயனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். இவரதுதந்தை பெயர் பாண்டியன். தாயார் பெயர் சுந்தரியம்மாள். இவர் ஆரம்ப கல்வியை அயனம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் பயின்று, தபால் மூலம் பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.கடந்த 1988-ல் அ.தி.மு.க. வில் சேர்ந்து தீவிரமாக கட்சி பணியாற்றினார். 15 ஆண்டுகள் வில்லிவாக்கம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக தொடர்ந்து பணியாற்றி உள்ளார். 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு, முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் மாநகராட்சி துணை மேயராக பதவியேற்றார். இவருக்கு ஷீலா என்ற மனைவியும், விஜய் பெர்லின், சாம்சங் பால் என்ற 2 மகன்களும் உள்ளனர். இவர் 2 முறை கட்சிக்காக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.டி.ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் பூர்வீகம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் கிராமம். 50 வயது. பத்தாம் வகுப்பு வரை படித்தவர். திருமணமாகாதவர். அ.தி.மு.க. பிளவுபட்டபோது இவர் ஜெயலலிதா அணியில் திருத்தங்கல் நகர செயலாளராக பொறுப்பில் இருந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் மாவட்ட செயலாளர் ஆனார். செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். 

செ.மு.மணிகண்டன்

அமைச்சர் செ.மு.மணிகண்டன் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படித்தவர். 40 வயதானவர். மதுரையில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது தந்தை செ.முருகேசன். ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், அவைத்தலைவராகவும் இருந்தவர். தாயார் பெயர் அன்னக்கிளி.மணிகண்டனின் மனைவி வசந்தி. மகப்பேறு மருத்துவர். லீலா(வயது8), லெனிசா(4) ஆகிய 2 மகள்களும், கிளிண்டன் செல்லத்துரை(4) என்ற மகனும் உள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வயது 51. இவர் கரூர் வடிவேல் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருடைய மனைவி பெயர் விஜயலட்சுமி. மகள்கள் அட்சயநிவேதா(12), அஸ்வர்தவர்ணிகா(5).2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவராக பணியாற்றினார்.

வெல்லமண்டி நடராஜன்

சுற்றுலாதுறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள வெல்லமண்டி நடராஜன்,திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் கட்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவராக பதவி வகித்து வருகிறார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். இவர் கடந்த 1972-ம் ஆண்டு முதல் கட்சியில் பணியாற்றி வருகிறார். வெல்லமண்டி நடராஜனின் மனைவி பெயர் சரோஜதேவி. கிருபாகரன், ஜவஹர்லால் நேரு ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.வளர்மதிஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வளர்மதிக்கு வயது 51 ஆகும். இவர் அ.தி.மு.க.வில் மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். ஆசிரியை பயிற்சியில் முதுகலை படிப்பும் படித்துள்ள இவர் வழக்கறிஞரும் ஆவார்.கடந்த 2015-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இவரது கணவர்சீதாராமன். திருச்சி பாய்லர் ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஸ்ரீராம், அரிராம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

விஜயபாஸ்கர்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். கட்சியில் மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2001-2006-ம் ஆண்டு வரையும், கடந்த 2011-ம் ஆண்டு விராலிமலை சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2013-ம் ஆண்டு முதல் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார். இவரது மனைவி பெயர் ரம்யா. ரித்தன்யாபிரியதர்ஷினி, விஜயலெட்சுமி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.வி.எம்.ராஜலட்சுமிநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் கீழ மூன்றாம் தெரு பகுதியை சேர்ந்தவர் வி.எம்.ராஜலட்சுமி(வயது 30). இவரது கணவர் பெயர் முருகன். இவர்களுக்கு ஹரிணி(வயது 9) என்ற மகளும், பிரதீப்(7) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சங்கரன்கோவில் நகரசபை தலைவியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சங்கரன்கோவில் நகரசபை தலைவியாக இருந்த அவர், தனது நகரசபை தலைவி பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அன்புமணி கணேசனை 14 ஆயிரத்து 489 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கே.சி.கருப்பண்ணன்

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.சி.கருப்பண்ணன் (வயது 59). 20-8-1957-ம் ஆண்டு பிறந்த இவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். 2001-ம் ஆண்டு பவானி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இவரது மனைவி தேவி. ஒரே மகன் டாக்டர் கே.யுவராஜா. விவசாய தொழில் செய்து வரும் இவர் கல்வி நிறுவனங்களும் நடத்தி வருகிறார்.

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தில் 20-8-1959-ம் ஆண்டு கடம்பூர் ராஜூ பிறந்தார். பி.யூ.சி. படிப்பை முடித்த கடம்பூர் ராஜூ, அதன் பின்னர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து அவரது சொந்த ஊரிலேயே உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் அ.தி.மு.க. மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேர்ந்தார்.2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இவர் தற்போது அ.தி.மு.க. ஜெ.பேரவை மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவருடைய மனைவி இந்திரா காந்தி. இவருக்கு அருண்குமார் என்ற மகனும்,காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.

திண்டுக்கல் சி.சீனிவாசன்

திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.சீனிவாசன், திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியில் வசித்து வருகிறார். தொழில் அதிபரான இவருக்கு, 68 வயது ஆகிறது. எம்.ஏ. படித்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ளனர்.1989-ல் முதன்முறையாக எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். அதன்பிறகு 3 முறை மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

உடுமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு (வயது 51) இவர் 23-10-1965 அன்று பிறந்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் பி.காம் படித்துள்ளார். இவரது மனைவி பெயர் ஆர்.கிருஷ்ணபிருந்தா. இவர்களுக்கு ஆர்.ஜெயபிரனிதா என்ற மகளும், ஆர்.நிவாஸ்ரீ என்ற மகனும் உள்ளனர். உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திருப்பூர் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளராக 2-வது முறையாக இருந்து வருகிறார். அத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராகவும் இருந்து வந்தார்.

அமைச்சர் கே.பி.அன்பழகன்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.பி.அன்பழகன். இவருக்குவயது 58. விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், வித்யா என்கிற மகளும், சந்திரமோகன், சசிமோகன் என்ற 2 மகன்களும் உள்ளனர். 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை செய்தி விளம்பரம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இந்த தொகுதியில் ஏற்கனவே தொடர்ந்து 3 முறை அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தற்போது 4-வது முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் டாக்டர் சரோஜா

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் சரோஜா. (வயது 68). அரசு மருத்துவராகவும், சவுதி அரேபியாவில் அரசு மகப்பேறு சிறப்பு மருத்துவராகவும் பணியாற்றியவர். ராசிபுரம் புதுப்பாளையம் ரோடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் 1991-1996 சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர், 1998-1999 பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் (ராசிபுரம்), 1999-2004 பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் (ராசிபுரம்), அ.தி.மு.க. மக்களவை தலைவர், அ.தி.மு.க. கூட்டுக்குழு துணைத்தலைவர், 2004-2006 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய தலைவர், 2012-2013 தமிழ்நாடு தகவல் ஆணையர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இவரது கணவர் லோகரஞ்சன். 

ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.எஸ்.மணியனுக்கு வயது 62. வேதாரண்யம் தாலுகா ஓரடியம்புலத்தை சேர்ந்தவர். 1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந் தேதி பிறந்தார். இவர் 1995-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மேல்-சபை உறுப்பினராகவும் இருந்தார். 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினராகவும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

ஆர்.காமராஜ்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.காமராஜுக்கு வயது 55. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் எளவனூர் சோத்திரியம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் எம்.ஏ. படித்துள்ளார். 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை டெல்லி மேல்-சபை உறுப்பினர் மற்றும் கொறடாவாக பதவி வகித்தார். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அப்போது உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பணியாற்றினார். தற்போது நன்னிலம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு கே.லதாமகேஷ்வரி என்ற மனைவியும், எம்.கே.இனியன், கே.இன்பன்ஆகிய 2 மகன்களும், 3 சகோதரர்கள், 4 சகோதரிகளும் உள்ளனர். மகன்கள் 2 பேரும் டாக்டர்கள் ஆவர். 

துரைக்கண்ணு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரைக்கண்ணுக்கு வயது 68. கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருமணமான இவருக்கு பானுமதி என்கிற மனைவியும், சிவ.வீரபாண்டியன், சண்முகபிரபு ஆகிய 2 மகன்களும், தமிழ்செல்வி, வெண்ணிலா, சத்தியா, நீலாவதி ஆகிய 4 மகள்களும் உள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி