பாயிண்ட் ஆப் சேல்’... ரேஷன் கடை முறைகேடுகளைத் தடுக்க அதி நவீன கருவி... ஜூலை 1 முதல்!

ரேஷன் கடை முறைகேடுகளைத் தடுக்க, ‘பாயிண்ட் ஆப் சேல்' என்ற அதிநவீன கருவி ஜூலை 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது முதல்கட்டமாக நான்கு மாவட்டங்களில் பயன்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வழங்கல் துறை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணேண்ணை, பாமாயில் மற்றும் இதர பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.ஆனால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மாதத்தின் முதல் வாரத்தைத் தவிர, மற்ற தினங்களில் ரேஷன் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், இதனால் அனைவருக்கும் அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாயிண்ட் ஆப் சேல்... எனவே, இத்தகைய குற்றச்சாட்டுக்களைக் கலையும் வகையில், ரேஷன் கடைகளில் முறைகேட்டை தடுக்க, ‘பாயிண்ட் ஆப் சேல்' என்ற கருவியை தமிழக அரசு அறிமுகம் செய்கிறது. ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் சிம்கார்டுகள் மூலம் இந்தக் கருவி செயல்படும். இதன்மூலம் காகித செயல்பாடும் பெரிதும் குறையும். அனைத்து விபரங்களும்... இந்தப் புதிய கருவில், சம்பந்தப்பட்ட கடையில் பொருள் வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள், செல்போன் எண், ஆதார் எண்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும். அதோடு அவர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் விவரமும் இக்கருவியில் பதிவு செய்யப்படும். எஸ்.எம்.எஸ்... இதன்மூலம் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கும்போது இந்த கருவியில் அந்த விவரம் பதிவு செய்யப்படும். அவர்கள் வாங்கிய பொருட்களின் விவரம், அளவு, விலை, மொத்த தொகை, இன்னும் வாங்க வேண்டிய பொருட்களின் விவரங்கள் உடனடியாக அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கப்படும். இதனால் கடையில் பில் வழங்கப்பட மாட்டாது. இதன்மூலம் விற்பனையாளர்களின் வேலை பளுவும் குறையும். பிரச்சினைகள் உடனுக்குடன்... இதேபோல், உணவு பொருள் வழங்கல் துறை குடோனில் இருந்து பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட உடன், அந்த விவரமும் இந்த கருவியில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் பொருட்கள் கடைக்கு வரும் விவரம், வழியில் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற விவரங்களும் இதில் தெரிந்துவிடும். ஆய்வு... இந்தத் திட்டத்தின் மூலம் உயர் அதிகாரிகள் ரேஷன் கடைகளில் நேரடி ஆய்வு செய்யாமலேயே, அங்கு நடைபெறும் தினசரி விற்பனை, கையிருப்பு போன்ற விவரங்களை நேரடியாக தெரிந்துகொள்ள முடியும். முதல்கட்டமாக... சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் புதிய கருவியானது, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்த கருவி முதல்கட்டமாக பயன்பாட்டிற்கு வருகிறது. பயிற்சி... இதனால், இம்மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் பதிவு செய்யும் பணிகளும், விற்பனையாளர்களுக்கு இந்தக் கருவியை இயக்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கூறிய நான்கு மாவட்டங்களில் இந்தக் கருவியின் செயல்பாட்டைப் பொறுத்து அதனை மேற்கொண்டு படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் அமல்படுத்த உணவுபொருள் வழங்கல் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
New instrument in Ration shop

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி