காவேரி... காவிரி... இந்த இரண்டு சொற்களையும் பலரும் ஒரே பொருளில் பயன்படுத்துகின்றனர். ஆனால் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.

காவேரி... காவிரி... இந்த இரண்டு சொற்களையும் பலரும் ஒரே பொருளில் பயன்படுத்துகின்றனர். ஆனால் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. 
என்ன இது, தொடக்கமே புதிராக இருக்கிறது என்கிறீர்களா? வாழ்க்கையே புரியாத புதிர்தானே. புதிரைப்புரிந்து கொண்டால் எல்லாமே தெளிவாகிவிடும். அதுபோல் தான் இந்தச் சொற்களும்.
இவ்விரண்டு சொற்களுள் ‘காவிரி’ என்ற சொல் முன்பு சோழ நாட்டில் ஓடிய ஆற்றைக்குறிக்கும் சொல்லாகும். ‘கா’ என்றால் ‘சோலை’, ‘விரி’ என்றால் ‘விரிந்திருப்பது’. சோலைகள் விரிந்திருக்கின்ற இடமே காவிரி. இந்தச்சோலைகளில் பூக்கள் நிறைந்து  இருப்பதால் காவிரிப்பூம்பட்டினம் என்றாயிற்று.

புதிர் இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். 
காவிரி என்பது தான் சரியாகும். சோழநாடு, இந்தக்காவிரியின் கடைக்கண்பட்டல்ல, அத்தனையும்பட்டு செழித்திருந்த தமிழர் பூமி. இதன் தலைநகரம் தான் காவிரிப்பூம்பட்டினம். 
இதற்கு ‘பூம்புகார்’ என்ற பெயரும் உண்டு. சமுத்திரத்தோடு காவிரி வந்து புகுந்து சம்பந்தம் பேசுகிற இடம் அதனால் பூம்புகார் என்றாயிற்று. 
‘புகார்’ என்றும் இதனைக் குறிப்பிடுவர். ‘ஆற்று நீர் புகும் இடம்’ என்பதால் இந்தப் பெயர். மற்றொன்று யாராவது வீட்டில் திருடுபோய்விட்டால் ‘காவல்துறையில் புகார் கொடுத்தீர்களா?’ என்று கேட்பதுண்டு. 
அப்படி தீங்கு, பாதிப்பு முதலியவற்றை உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வரும்முறையில் எழுத்து மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ தெரிவிக்கும் முறைக்கு ‘புகார்’ என்று சொல்லுவதும் உண்டு.
மீண்டும் புகார் நகருக்கு வருகின்றேன்.  
இந்தப்புகாரில் தான் பல புகார்கள் எழுந்துள்ளன. என்ன இது இது மீண்டும் புதிர்களா என்கிறீர்களா. ஆம், இந்தப்புதிரில் இலக்கிய இன்பம் நிறைந்திருக்கிறது.  
புகார் நகரத்தில் பிறந்தவன் தான் சிலப்பதிகாரத்துக் காவியத்தலைவன் கோவலன். புகாரில் பிறந்த அவன் ஒரு புகாரில் அழிந்தான். ஆம், பாண்டிய நாட்டுப் பொற்கொல்லனால் ‘கள்வன்’ என்று புகார் கூறப்பட்டு அங்கேயே அழிந்தான்.
மற்றொரு புகார், இந்தப்புகார் நகரில்தான் பாண்டிய நாட்டிலிருந்து வந்த ஓர் இளைஞன் புகார் கொடுத்தான். அந்தப்புகார் அவனுக்கு நல்வாழ்வு கொடுத்தது. அப்படி என்ன புகார் என்கிறீர்களா? இதைத்தான் வளையாபதிக் காப்பியம் கதையாகச் சொல்லுகின்றது.
ஐம்பெருங்காப்பியம் 
வடமொழியில் தோன்றிய ரகுவம்சம், குமார      சம்பவம், சிசுபாலவதம் கிரதார் ஜீனியம், நைடதம் ஆகிய ஐந்து நூல்களைப் ‘பஞ்சகாவியம்’ என்று அழைப்பர். இது போலவே தமிழில் தோன்றிய சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்து நூல்கள் ‘ஐம்பெருங்காப்பியங்கள்’ என்று வழங்கலாயிற்று.  
ஐம்பெருங்காப்பியம் என்ற இப்பாகுபாட்டைத் தொகுத்தது யார் என்று தெரியவில்லை. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் ஐம்பெருங்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்க்கணக்கு என்று இலக்கியங்களைத் தொகைப்படுத்தியுள்ளார். 

அவர் கூட ஐம்பெருங்காப்பியங்கள் எவை எவை என அவற்றின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. பிற்காலத்தில் தோன்றிய பாடல் ஒன்று ஐம்பெருங்காப்பியத்தின் பெயர்களைக் குறிப்            பிடுகின்றது.


சிந்தாமணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்
கந்தா மணிமேகலை புனைந்தான் – நந்தா
வளையாபதி தருவான் வாசவனுக்கு ஈந்தான்
திளையாத குண்டலகேசியாம்


இதுதான் அந்தப்பாடல். 

இவற்றுள் முதல் மூன்று காப்பியங்கள் முழுமையாக நமக்கு கிடைத்துள்ளன. வளையாபதி,           குண்டலகேசி இரண்டும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

வளையாபதி 
வளையாபதி ஒரு காப்பியம் என்பது தெரியும். ஆனால் இதன் கதை பலருக்கும் தெரிவதில்லை. கதைக்குள் தான் எத்தனை கதைகள் இருக்கின்றன.

வளையாபதியின் இயற்பெயர் நாராயணன். இவன் ஒன்பது கோடி பொன்னுக்கு அதிபதியாக இருந்தான். அதனால் ‘நவகோடி நாராயணன்’ என்று அழைக்கப்பட்டான். பின்னர் நேர்மையின் காரணமாக, ‘இனிமேல் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் இருப்பேன்’ என்றதால் ‘வளையாபதி’ என்ற பெயரையும் பெற்றான். இதோ இனி வைர வணிகனின் வாலிபக்கதையும் வாழ்க்கைக் கதையும்.

சோழநாட்டின் வணிகப்பெருநகரம் புகார். இங்குதான் வைசிய மரபில் பிறந்தவன் நாராயணன். பெரும் செல்வத்தை வணிகத்தில் ஈட்டியவன். வணிகத்தில் நியாயமும், நேர்மையும் இருந்ததால் பலராலும் புகழப்பட்டான். அவனது புகழ் பக்கத்து நாடுகளில்            எ ல்லாம் பரவியது. இந்த நிலையில் அவனுக்குத் திருமணம் நடந்தது. இனிய இல்லறம் இனிதே தொடங்கியது. 

இல்லற வாழ்வின் பயன் நன்மக்களைப் பெறுவதாகும். திருமணமாகி ஆண்டுகள் பல கடந்தன. மக்கட்பேறு மட்டும் வாய்க்கவில்லை. இந்த நிலையில் ஒருநாள் ஜோதிடக்கலையில் நல்ல தேர்ச்சி பெற்ற ஒருவர் வந்திருந்தார். அவர் தங்களுக்கு இரண்டாம் மனைவியின் மூலம் குழந்தைப்பேறு கிடைக்கும். அவள் வேறு குலத்தைச் சார்ந்தவளாக இருப்பாள் என்று கூறினார்.  

பக்கத்திலிருந்த மனைவி கேட்டு கலங்கி கண்ணீர் சிந்தினாள். கண்ணீரைத் துடைத்து ஆறுதல்மொழி கூறினான். முதல் மனைவியுடன் இல்லற வாழ்க்கை நகர்ந்தது.

மதுரைப்பயணம் 

ஒரு முறை மதுரையில் ஆண்டு வந்த பாண்டியநாட்டு மன்னனுக்குத் தூய்மையான வைரக்கற்கள் தேவைப்பட்டன. தன் அமைச்சர் மூலம் பூம்புகாரிலிருந்த வைர வணிகனுக்குத்தூது வந்தது. அழைப்பை ஏற்று பாண்டியன் அரண்மனைக்குச் சென்றான்.  வியாபாரம் இனிதாக நடந்தது. மன்னனும் பாராட்டினார். அங்கேயே தங்கியிருந்து விருந்தில் கலந்து கொண்டார். 

மன்னரின் அமைச்சருக்கு ஒரு பெண் இருந்தாள். இங்கு தங்கியிருந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஜோதிடர் சொன்ன வார்த்தைகள் பலித்தன. அமைச்சரிடம் தன் கடந்தகால வாழ்க்கையையும் சொல்கிறான். திருமணம் நடைபெற்றது. மதுரையிலேயே சில மாதங்கள் தங்கியிருந்து வியாபாரம் செய்து கொற்கை முத்துக்களைக் கொள்முதல் செய்து இரண்டாம் மனைவியுடன் பூம்புகாருக்குப் புறப்பட்டான்.

புதிர்கள் நிறைந்த புதுவாழ்வு  

பூம்புகாரில் இரு மனைவிகளுடன் வாழ்க்கைச் சக்கரம் சுழன்றது. இரு பெண்களை மணந்தவனின் வாழ்க்கை எத்தகைய துயரம் நிறைந்தது என்பது தெரிந்ததுதானே. ஊரார் எதிர்ப்பு, சாதிக்கட்டுப்பாடு காரணமாக இரண்டாம் மனைவியைத் தள்ளி வைத்தான். அந்தச் சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள். வீட்டை விட்டு வெளியேறியவள் கால்போன போக்கில் ஒரு காளி கோவிலை அடைந்தாள். தன் கணவன் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாள்தோறும் காளிதேவியை வழிபட்டு வந்தாள். அங்கிருந்த  முதியவள் ஒருத்தி பாதுகாப்பு அளித்தாள். அப்போது கருவுற்றிருந்த அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். வளர்த்துப் பள்ளியில் சேர்த்து படித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு மாணவன் அவனைப் பார்த்து ‘தந்தை பெயர் தெரியாதவன்’ என்று சொல்கிறான்.  

மனம் உடைந்த அவன்  தாயிடம் வந்து புலம்பினான். தாய்           நடந்த சம்பவத்தைக் கூறுகிறாள். அதைக்கேட்ட அவன் ‘அன்னையே கவலைப்படாதீர்கள். உங்கள் குறையைப் போக்குவேன். நாளையே பூம்புகார் சென்று என் தந்தையையும் பெரிய அன்னையையும் கண்டு என் உரிமையை நிலைநாட்டி வருவேன்’ என்றான்.


பூம்புகாரில் ஒரு புகார் புகார் நகருக்குள் புயலாக நுழைகிறான். வைர வணிகரை விசாரித்து நேரில் பார்த்து, ‘ஐயா, நான் உங்கள் இளைய மனைவியின் மகன். என் அன்னைக்கு இழைத்த தீங்குகளை மறந்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறான். 

வணிகன் மனம் குறுகுறுத்துப் போகிறது. குற்றமுள்ள மனசல்லவா. எனினும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், ‘கோபத்தோடு நீ என் மகன் இல்லை, இங்கிருந்து போய்விடு’ என்கிறான். 

தந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்டு மனம் வெம்பி வீதிக்கு வந்தான். அங்கிருந்தவர்களைப் பார்த்து ‘இந்நகரில் நேர்மையானவர்கள் இல்லையா?’ என்று அழுது புலம்பினான். 

அங்கிருந்த ஒருவர், ‘இளைஞனே, கவலைப்படவேண்டாம். நீ பயப்படாமல் உன் வீட்டுக்குச்செல். நியாயம் என்றாவது ஒரு நாள் வெல்லும்’ என்றார். 

அதன்பிறகு அவன் சென்று தாயிடம் நடந்ததைச் சொல்லு கிறான்.

நியாயம் வென்றது 

பும்பூகாரில் தன் மகனுக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கேட்டு மகனை அழைத்துக் கொண்டு காளிதேவியின் கோவிலை அடைந்து  மனதின் குரலை அங்கே வெளிப்படுத்தினாள். 

அப்போது, ‘நாளைக்காலையில் உன் மகனை அழைத்துக்கொண்டு உன் கணவரிடம் செல்வாயாக. யாம் நேரில் வந்து பலரும் காண நீதி கூறுவோம்’ என்று அருள்வாக்கு கூறி மறைந்தாள்.

மறுநாள் காலையில் இருவருமே புகாருக்கு வந்தனர். ஊர்ச்சபை கூடியது. புகாரில் மீண்டும் புகார் கூறப்பட்டது. அப்போது அறங்கூறும் ஊர்ச்சபையினர், ‘பெண்னே நீ சொல்வது உண்மையானால் அந்தக்காளிதேவியே இங்கு வந்து சொல்லட்டும்’ என்றனர். 

நிற்கதியாய் நின்றிருந்தபோது பாதுகாத்த முதியவளும் அங்கு வந்து சேர்ந்தாள். தேவியை வேண்டினாள். வேண்டுதலை ஏற்று ’அறங்கூறும் அவையாரே, இந்தப் பெண் கற்புடையவள். இந்த வைர வணிகரின் மகன் இவனே’ என்று அருள்வாக்கு சொல்லி,  குழந்தைக்காக முதல் மனைவி நடத்திய கபட நாடகத்தையும் கூறி மறைந்தாள்.

காளிதேவியின் குரல் பூம்புகார் நகரத்து மக்கள் அனைவரின் செவிகளிலும் எதிரொலித்தது. ஊர்ச்சபை ஏற்றுக்கொண்டது. இதுவரை முதல் மனைவிக்காக வளைந்து கொடுத்து வந்த வணிகனும் ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்தான். குடும்பத்தினரையும், சுற்றத்தினரையும் பார்த்து, ‘இனிமேல் நான் யாருக்கும் வளைந்து கொடுக்காத வளையாபதியாவேன்’ என்று சூளுரைத்தான். மனைவியரின் கைகளில் வளையல் ஓசை ஒலித்தது. குடும்பத்தில் மகிழ்ச்சி வசீகரித்தது. 

இப்படி ஒரு கதை, ‘வைசிய புராணத்தில் வைர வாணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்ற பகுதியில் கூறப்பட்டுள்ளது. இது தவிர உரையாசிரியர்களின் உரையிலும் இதன் கதைப்   பாடல்கள் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளன. இப்படி ஆங்காங்கே எடுத்தாளப்பட்ட 73 பாடல்களின் தொகுப்புதான் இந்த வளையாபதி காப்பியம். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


கற்பனை  நயம்  கலந்த  காப்பியம்

வளையாபதி கற்பனை நயம் மிகுந்த காப்பியம் என்பதை உரையாசிரியர்கள் பலரும் எடுத்துக்காட்டியிருப்பதிலிருந்து அறியலாம்.

ஒட்டக்கூத்தர் தனக்கு கவிதையழகு வேண்டி வளையாபதியை வணங்கிப்படித்தார் என்று தக்கயாகப்பரணி உரையாசிரியர் கூறுகின்றார். அதிலிருந்தும் இதன் சிறப்பினை உணரலாம்.

காப்பிய இலக்கணத்தில் நாட்டு வருணனை என்பது ஒரு கூறாகும். அப்படி வருணிக்கப்பட்ட ஒரு மருத நிலக்காட்சியினைப்பாருங்கள். வயலும் வயல்சார்ந்த மருதநிலத்தில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நெற்பயிர்கள் கரும்புடன் போட்டியிட்டு  அதனுயரம் வரை வளர்கிறதாம். கரும்பு கமுகு என்னும் பாக்கு  மரத்தைப் பார்த்து அதைவிட மேலேழுந்து வளர்கிறதாம். இதைக்கண்ட கமுகு மரம் அதைப்பார்க்கக் கூசி மேகக்கூட்டங் களிடையே முகம் புதைக்கிறதாம். இதனைத்தான்,

செந்நெல் அங் கரும்பினோடு இகலும் தீஞ்சுவைக்
கன்னலங் கரும்பு தன் கமுகைக் காய்ந்தெழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களால் முகம் புதைக்கும்மே

என்று கற்பனை நயம் கலந்து கவிதையைக் காட்சிப்படுத்துகின்றார்.

வாழ்க்கைக்கான நல்லறங்களையும் இக்காப்பியம் எடுத்துரைக்கின்றது. சமண சமயத்தின் கருத்துக்களான இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிய கருத்துக்கள் வாழ்விற்கு இனிமை சேர்க்கும் இனிய கருத்துக் களாகும். காலம் என்னும் தீயில் இளமை  எப்படி கருகிப்போகிறது என்பதை,

நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து
கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே
கோலம் குயின்ற குழலும் கொழும் சிகையும்
காலக் கனல் எரியின்வேம் வாழிநெஞ்சே
காலக் கனல் எரியில் வேவன கண்டாலும்
சால மயங்குவது என் வாழி நெஞ்சே!

என்று நெஞ்சிற்குச் சொல்லுவதாக அமைந்துள்ளது    இப்பாடல்.

நெஞ்சே பெண்ணின் கூந்தல் நெய்பூசப்பெற்று மலர்ந்த மலர்  களால் அழகாக ஒப்பனை செய்யப்பட்டுள்ளதைக் கண்டு மயங்கு கின்றாய். இந்த அழகுக்கூந்தல் காலத்தின் சுழற்சியில் நெருப்பில் கருகுவதையும் பார்க்கின்றாய். அப்படிப் பார்த்த பின்னரும் மீண்டும் மீண்டும் பெண்ணிடமே மனம் மயங்குகின்றது ஏன்? இதைத்தான் விளக்குகிறது இந்தப்பாடல்.

இப்படி இனிய பாடல்களின் திரட்டுதான் இந்த வளையாபதி. இந்த வளையாபதியை ஒரு மடத்தில் கண்டதாகவும் அடுத்த முறை தேடிச்சென்றபோது அது கிடைக்காமல் போனதாகவும் தமிழ் ஏடுகளைத் தொகுத்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் மனம் நெகிழ்ந்து எழுதுகிறார். எப்படியோ காலச்சக்கரத்தின் சுழற்சியால் வளைந்து கொடுக்காத வளையாபதி நம் கைகளுக்கே கிடைத்திருக்கிறது. போற்றிக்காப்போம். இன்பம் சுவைப்போம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி