வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு... நில்...நிதானி...செல்!

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு... நில்... நிதானி... செல்!


இந்தியாவில் மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்) என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டுதானிருக்கிறது. தங்கள் பிள்ளைகளை எப்படியாவது மருத்துவம் படிக்க வைத்து டாக்டராக்கி விட வேண்டும் என்று நினைக்கும் பல பெற்றோர்கள், இந்தியாவில் இடம் கிடைக்காது என்று தெரிந்து கொண்டு, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியாவது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) படிக்க வைக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.

இவர்களின் விருப்பத்திற்கும், பண வசதிக்கும் உகந்ததாக உக்ரைன், பல்கேரியா, ஜியார்ஜியா, ரோமானியா, செக் குடியரசு மற்றும் ரசியா போன்ற நாடுகளில் இருக்கும் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.

இப்படி வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தியாவிற்கு வந்து உடனடியாகத் தங்களது மருத்துவத் தொழிலைச் சுயமாகத் தொடங்கவோ அல்லது மருத்துவமனைகளில் சேர்ந்து பணியாற்றவோ முடிவதில்லை.


இந்தியாவில் மருத்துவத் தொழிலைச் செய்வதற்கு முன்பாக, மருத்துவம் படித்தவர்கள் இந்திய மருத்துவக் குழு Medical Council of India) அல்லது மாநில மருத்துவக் குழு (State Medical Council) என்று ஏதாவதொன்றில் தங்களை மருத்துவராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பே அவர்கள் மருத்துவம் செய்வதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களை மருத்துவராகப் பதிவு செய்து கொள்வதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவக் கல்வி படித்தவர்களுக்கு 15-03-2002க்குப் பின்னர் இந்திய மருத்துவக் குழு (Medical Council of India) சோதனைத் தேர்வு ஒன்றினை நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற அனுமதி அளித்து வருகிறது.

இந்திய மருத்துவக் குழு (Medical Council of India), தேசியத் தேர்வுகள் வாரியம் (National Board of Examinations) மூலம் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் திறத் தணிக்கைச் சோதனைத் தேர்வு Foreign Medical Graduate Screening Test (FMGE) எனும் தேர்வினை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவக் கல்வி படித்து வருபவர்களுக்காக நடத்தி வருகிறது. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்ற முடியும்.


இந்திய மருத்துவக் குழு நடத்தும் இந்த சோதனைத் தேர்வில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேசியத் தேர்வுகள் வாரியத்திடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அந்த வாரியம் பதிலளித்திருக்கிறது. அந்தப் பதிலில் இத்தேர்வு குறித்த கீழ்க்காணும் சில முக்கியத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்திய மருத்துவக் குழுவால் 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனைத் தேர்வில், வெளிநாட்டில் மருத்துவக் கல்வி படித்த இந்தியர்களில் சராசரியாக 23 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்திருக்கின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. ஜூன் மாதத் தேர்வில் 5967 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 603 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இத்தேர்வில் தேர்ச்சி 10.4 சதவிகிதமாக இருந்தது. அதன் பின்பு, டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் 6407 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 731 பேர் மட்டும் தேர்ச்சியடைந்தனர். இத்தேர்வில் தேர்ச்சி 11.4 சதவிகிதம் என்றிருக்கிறது.


இத்தகவல்களைப் படிக்கும்போது வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி படித்தவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இங்கே மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்றதுமே, வெளிநாடுகளில் படிக்க ஆர்வமாகக் கிளம்புபவர்கள் சற்று நிதானித்துச் செயல்பட வேண்டிய நேரம் இது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி