விதிமீறல் புகார்கள் அளிக்க ‘வாட்ஸ்அப்’ எண், கைபேசி செயலி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை ‘வாட்ஸ் அப்’பில் 94441 23456 என்ற எண்ணிலும் தேர்தல் துறையின் கைபேசி செயலி வழியாகவும் தெரிவிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை ‘வாட்ஸ் அப்’பில் தெரிவிக்க புதிய கைபேசி எண், செயலியை தேர்தல் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

வேட்பு மனு தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணைய சட்டப்பிரிவு அதிகாரி வில்பிரட், பயிற்சி அளித்தார். தகவல் தொழிநுட்பம், மென்பொருள் தொடர்பாகவும் விதிமீறல் புகார்கள் தொடர்பான அறிக்கைகளை எப்படி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 62 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்கள், மாவட்டத்தில் உள்ள இதர தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பர்.‘வாட்ஸ் அப்’ புகார்


தேர்தல் விதிமீறல் தொடர்பாக 94441 23456 என்ற எண்ணுக்கு ‘வாட்ஸ் அப்’பில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த எண்ணில் நேரடியாக தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க இயலாது. இதுதவிர, புகார் தெரிவிக்க ‘tn.elections’ என்ற கைபேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளேஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன்மூலம் புகார் தெரிவிக்கலாம்.இது தவிர ‘ceo@tn.gov.in’ என்ற இணையதளத்தில் இ-மெயில் மூலமாகவும், 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம். தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 310 புகார்கள் வந்துள்ளன.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் புதிய காப்பீட்டு அட்டைகள் வழங்கக் கூடாது. பழைய அட்டைகளை பயன்படுத்துவதில் தடை இல்லை. புதிய அட்டைகள்தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் கோரிக்கை மனு அளித்தால் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி அனுமதி பெற ஏற்பாடு செய்யப்படும்.

கண்காணிப்புமதுபான விற்பனை குறிப்பிட்ட கடைகளில் அதிகரித்தால், அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். வேட்பாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் திருமண விருந்துகளில் பங்கேற்று அதிகளவில் ‘மொய்’ எழுதுவது தொடர்பாக புகார் வந்தாலோ, கண்காணிப்பில் தெரியவந்தாலோ விசாரணை நடத்தப்படும். தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அன்றாட பணப்பரிமாற்றம் தொடர்பான விவரங்கள், தற்போது தேர்தல் துறையில் அளிக்கப்பட்டு வருகின்றன. வங்கி பணப்பரிமாற்றத்தை வருமான வரித்துறையும் கண்காணித்து வருகிறது.நூறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை அடைய வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்கு. இதை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி