மத்திய பட்ஜெட்டில் கல்வி

எழுத்து பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை பழைய தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. பிச்சை எடுத்தாவது படித்துவிடுங்கள் என்று மிகவும் தீவிரமாக அவை பேசுகின்றன. ஆனால், இந்தியாவில் அப்படியான ஒரு தீவிரத்தோடு எல்லோரிடையும் இன்னும் எழுத்தறிவு பரவவில்லை. மெல்லத்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

பட்ஜெட்டில் கல்வி

ஆண்டு தோறும் மத்திய அரசானது போக்குவரத்து துறை முதல் விண்வெளி துறை வரை பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கும். அந்த வகையில் மத்திய அரசின் 2016 -17க்கான பட்ஜெட் வெளியாகியுள்ளது. இப்படி பட்ஜெட்போடும்போது தேசத்தின் ஆண்டு வருமானத்தில் குறைந்தபட்சம் ஆறு சதவீதத்தை கல்விக்காக செலவிடவேண்டும் என்று காலங்காலமாக கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனாலும் இதுவரையிலும் அது நடைபெறவில்லை. இந்த பட்ஜெட்டிலும் அது அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த முறை மத்திய அரசின் பட்ஜெட் வெளிப்படுத்துகிற உணர்ச்சி வழக்கமானதானதை விட வித்தியாசமானது.


வளையும் கொள்கைகள்

மத்திய திட்டக்கமிஷன் 2014-ல் ஒழிக்கப்பட்டதும் அதற்கு பதிலான அமைப்பாக நீதி ஆயோக் அமைக்கப்பட்டதும் இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடலில் ஒரு கொண்டை ஊசி வளைவுப் பாதை. இந்தப் பாதையில் மத்திய அரசு பயணிப்பதால் தேசிய அளவில் திட்டங்களை உருவாக்கும் கட்டமைப்புகள் மாறி வருகின்றன.


இத்தகைய மாற்றங்களின் காரணங்களில் 2011-ல் அமைக்கப்பட்ட பி.கே. சதுர்வேதி கமிட்டியும் ஒன்று. மத்திய அரசு நடத்தும் நல்வாழ்வுத் திட்டங்களை மிகவும் விரிவாக அது ஆய்வு செய்துள்ளது. அவற்றை மாநில அரசுகளின் பொறுப்புகளுக்கு மாற்றவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்துள்ளது.


மத்திய வரிகள் மூலமாக கிடைக்கும் பெருமளவிலான பணத்தை 2015 முதல் 2019 வரையான ஐந்தாண்டில் மாநில அரசுகளோடு மத்திய அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என 2013-ல் டாக்டர் ஒய்.வி. ரெட்டி தலைமையில் உருவான 14 வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.


கல்வி உரிமைக்கான நிதி

இத்தகைய பின்னணியில் கல்விக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகி உள்ளன. மத்திய அரசு தனது திட்டங்களை கைவிடுதல், மாநில அரசுகளிடம் ஒப்படைத்தல் எனும் பாணியை வேகப்படுத்தியுள்ளது. ஒரேயடியாக அதைச் செய்தால் மக்களிடம் கோபம் ஏற்பட்டுவிடுமோ என்ற தயக்கத்தால் மெதுவாக அதை செய்துவருகிறது.


கல்வி உரிமைச் சட்டத்தை அமலாக்குவதற்காக உருவானதுதான் அனைவருக்கும் கல்வி திட்டம். இந்த பட்ஜெட்டில் அந்த திட்டத்துக்கு 22,500 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. போன வருடத்தை விட 2.2 சதவீதம்தான் இது அதிகம்.


செஸ் தரும் கல்வி

வருமான வரி செலுத்துகிற தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களது வருமானத்தில் மூன்று சதவீதத்தை கல்விக்கான செஸ் வரியை செலுத்த வேண்டும் என்பது 2004 முதல் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது.


அந்த செஸ் வரி மூலம் வரும் வருமானம் மத்திய அரசு கல்விக்காக அறிவித்துள்ள தொகையில் 65 சதவீதம் இருக்கும். மத்திய அரசின் உதவித்தொகையாக 29 சதவீதமும் ஆறு சதவீதம் வெளி உதவிகள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்படும்.


பாழடையும் கட்டமைப்பு

கல்வி உரிமைச் சட்டத்தின்படியான உள்கட்டமைப்புத் தேவைகளை இந்தியாவில் 8 சதவீதப் பள்ளிகளே கொண்டுள்ளன. 8.3 சதவீத பள்ளிகளில் 1 ஆசிரியர் தான் இருக்கிறார்கள். ஆறு முதல் 14 வரையிலான வயதில் உள்ள ஏறத்தாழ 4 கோடியே 30 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருக்கின்றனர். இந்த வயதிலான மொத்தக் குழந்தைகளில் இவர்கள் 100க்கு 18 பேர்.

2016-17 க்கான பட்ஜெட் அறிவிப்பு கல்விக்கான ஒதுக்கீட்டை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அடிப்படையான கட்டமைப்புத் தேவைகளுக்கும் ஆசிரியர் பயிற்சிக்கும் ஆசிரியர்களின் தேவைக்கும் 510 கோடி ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பெண் கல்வி

பெண்குழந்தைகளுக்கான கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக நிறைய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வந்தது. அதில் ஒன்றாக, பேட்டி பச்சோவ் பேட்டி பதோவ் ( பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தையை பாதுகாப்போம்) என்னும் திட்டமும் இருக்கிறது. அதற்கு மட்டும் 100 கோடி ஒதுக்குவோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடுகள் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி பட்ஜெட் எதுவும் சொல்லவில்லை. மவுனமாக இருக்கிறது.

கல்வி எனும் மூலதனம்

உயர்கல்விக்காக ஒரு நிதி நிறுவனத்தை மத்திய அரசு ஆரம்பிக்க உள்ளது. அதற்கு ஆரம்ப முதலீடாக 1000 கோடி ரூபாய்களை போடப் போகிறார்கள். அந்த நிதியை மேலும் மேலும் பெருக்க நன்கொடைகளும் சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டுக்காக பெருநிறுவனங்கள் ஒதுக்கும் நிதிகளும் பெற்றுக்கொள்ளப்படும்.


புதியதாக 62 நவோதயா பள்ளிகள் அமையும்.

தொழில் முனைவோருக்கான கல்வியும் பயிற்சியும் 2200 கல்லூரிகளுக்கும் 300 பள்ளிகளுக்கும் 500 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் 50 குறுகிய கால தொழிற்பயிற்சியகங்களுக்கும் ஆன்லைன் பாடங்கள் வழியாக பயிற்சியளிக்கப்படும் என்று பட்ஜெட் அறிவித்துள்ளது.

கல்விக்காக செலவழிப்பது ஒரு மூலதனம்தான் என்பது சாமானியர்களுக்குத் தெரியும். ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியைப் போலவே முக்கியமானது கல்விக்கான ஒதுக்கீடும். அவ்வளவு முக்கியமானதாக அது மாறும்போதுதான் நாடு வலிமை படைத்த பாரதம் ஆகும்!

இந்தியாவில் எழுத்தறிவு

2011 மக்கள் தொகை தகவல்கள் படி இந்தியாவில் தனது பெயரை எழுதத் தெரிந்தவர்கள் 100க்கு 74 பேர். அவர்கள் உயர்சாதிகளில் அதிகமாகவும் பழங்குடிகளில் மிக குறைவாகவும் உள்ளனர்.


இந்தியாவில் எழுத்தறிவில் முன்னேறியுள்ள முதன்மையான மாநிலம் கேரளாதான். அது தனது மாநிலத்தில் 100க்கு 94 பேருக்கு (93.91 சதவீதம்) எழுத்தறிவைத் தந்துவிட்டது. நாம் 100க்கு 80 பேருக்கு (80.33 சதவீதம்) நமது மாநிலத்தில் எழுத்தறிவைத் தந்துள்ளோம். எழுத்தறிவு உள்ள மாநிலங்களின் வரிசையில் இந்தியாவில் 14 வது மாநிலமாக இருக்கிறோம்.


மத்திய அரசின் பிரதேசமாக இருந்து வருகிற புதுச்சேரி பிரதேசம் தனது மக்களில் 100க்கு 87 பேரை (86.55 சதவீதம்) படிக்க வைத்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தைவிடவும் முன்னதாக 7 வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின் தேசிய எழுத்தறிவு சராசரியான 74.04 சதவீதத்தை விட தமிழகமும் புதுச்சேரியும் முன்னேறியே உள்ளன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி