சேமிப்பவர்களுக்குத் தண்டனையா?

பாஜக அரசு, கிசான் விகாஸ் பத்திரம் (கே.வி.பி.), தேசியச் சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி.), பொது வைப்பு நிதி (பி.பி.எஃப்.), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம், தபால் அலுவலகக் கால வைப்புநிதித் திட்டம் உள்ளிட்ட சேமிப்புகளுக்கு அளிக்கப்பட்டுவந்த வட்டி வீதத்தைக் குறைத்தது சாமானிய மக்கள் மீதான ஒரு பேரிடி. ஏப்ரல் 1 முதல் இந்த வட்டிக்குறைப்பு அமலுக்கு வரும். அத்துடன் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த வட்டி வீதம் தேவைக்கேற்ப மாற்றப்படும் என்று தெரிகிறது.

சாமானிய மக்கள் தங்கள் வருவாயில் சிறு பகுதியையாவது சேமிப்பது எதிர்காலக் கனவுகளுக்காக மட்டும் அல்ல; இப்போதுள்ள சமூக, பொருளாதாரச் சூழலில் தங்களுக்கென்று சேமிப்பு இல்லாவிட்டால் பெரும் மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட செலவுகளுக்குக்கூட அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் சூழல் உருவாகிவிடும்; அப்படியான நிலையை உருவாக்கிக்கொள்ளக் கூடாது என்பதனாலும்தான். வருவாய் அதிகமாகக் கிடைக்கும் என்றாலும் பங்குச்சந்தை போன்ற தங்களுக்குத் தெரியாத வழிகளில் சொற்பச் சேமிப்பையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவற்றில் சேமிக்கிறார்கள். இதைத் தாண்டி வருமான வரிக் கழிவுக்காகச் சேமிப்பதை வழக்கமாகக் கொண்டவர்களும் இத்திட்டங்களையே அதிகமான அளவில் தேர்ந்தெடுத்துவந்தனர்.

இப்போதைய பணவீக்க வேகத்தில் ரூபாயின் உண்மையான மதிப்பு கணிசமாகத் தேய்கிறது. எனவே இதில் அவர்களுக்குக் கிடைப்பது எதிர்மறையான வருமானம்தான். அப்படியிருந்தும் சேமிப்பவர்களைத் தண்டிப்பதைப்போல அமைந்துள்ளது அரசின் இந்த முடிவு. ஏற்கெனவே, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு, தான் தரும் தொகைக்கான வட்டியைக் கணிசமாகக் குறைத்தும்கூடப் பொதுத்துறை வங்கிகள் உள்படப் பல வங்கிகள் அதன் பலனைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு முழுதாக மாற்றித் தராத நிலையே நீடிக்கிறது. வாராக்கடன் போன்ற இனங்களால் ஏற்பட்டுள்ள இழப்பைக் காரணம் காட்டி வட்டியைக் குறைக்க மறுக்கின்றன. இந்த நிலையில் சிறு சேமிப்புகளுக்கான வட்டி வீதம் அதிகமாக இருப்பதால் வங்கியில் டெபாசிட்டுகள் சேருவதில்லை என்று கூறி, சிறு சேமிப்பு வட்டியையும் குறைக்கச் செய்திருக்கின்றனர். வருமான வரிச் சலுகைக்காகவே ஒருவர் சிறு சேமிப்புகளில் முதலீடு செய்தாலும் அதற்கும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேர்த்தால் மட்டும்தான் வரிச்சலுகை. அதற்கும் மேல் சேர்த்தால் வரி செலுத்த வேண்டும். இவ்விதம் பொதுப் பிராவிடண்ட் பண்ட் நிதி ரூ.1.5 லட்சம், மாதாந்திர வருவாய் திட்டத்தில் ரூ.4.5 லட்சம் என்று வரம்பு நிர்ணயம் உள்ளது.

சில ஆண்டுகளாகவே சிறு சேமிப்புகளுக்கான வட்டி என்பது சந்தை நிலவரத்தைப் பொருத்தே, அதாவது அரசின் கடன் பத்திரங்களுக்குக் கிடைக்கும் வட்டியைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில் அரசின் இப்போதைய முடிவு சாமானிய மக்களின் சேமிப்பை ‘இங்கே சேமிக்காதே, பங்குச்சந்தைக்குப் போ’ என்று தள்ளுவதாகவே அமையும். பாதுகாப்பற்ற மக்களைப் பாதுகாப்பற்ற ஒரு சேமிப்பு முறையை நோக்கித் தள்ளும் அரசு பாதுகாப்பற்ற எதிர்காலத்தை நோக்கி நடைபோட வேண்டியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. முதலீட்டாளர்களைத் தாண்டி அரசையும் இது பாதிக்கும். மோடி அரசு திரும்பப் பெற வேண்டிய முடிவு இது!Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி