
முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகளில் "பார் கோடிங்' சிஸ்டம் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரயில்வே கட்டண முறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில் சில தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் டிக்கெட்டுகளில் பார் கோடிங் சிஸ்டம் அமல்படுத்தப்படும் என்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர்
சுரேஷ் பிரபு தெரிவித்தார். அதன்படி புது டெல்லி, பழைய டெல்லி, நிஜாமுதீன் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள 9 டிக்கெட் கவுன்ட்டர்களில் "பார் கோடிங்' உள்ள ரயில் டிக்கெட்டுகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. இந்த புதிய முறையின் மூலம் ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை சமூக விரோதிகள் தாங்களாவே போலியாக தயாரித்து பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. இதனால் டிக்கெட்டுகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் தடுக்கப்பட்டு ரயில்வேயில் அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க இந்த சிஸ்டம் உதவுகிறது. இந்த டிக்கெட்டுகளில் உள்ள "பார் கோடிங்' மூலம் அந்த டிக்கெட் வழங்கப்பட்ட இடம், செல்ல வேண்டிய இடம், கட்டணத் தொகை, வழங்கப்பட்ட தேதி, நேரம், ரயில் வகுப்பு, எந்தனை நபர்கள் பயணிக்க வழங்கப்பட்டது, அதில் மூத்த குடிமக்கள், சிறார்கள் விவரம் என அனைத்தையும் பரிசோதகர் தெரிந்துகொள்ள முடியும். படிப்படியாக நாடு முழுவதிலுமுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் "பார் கோடிங்' டிக்கெட் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.