முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ‘இ–போஸ்ட்’, ‘மை ஸ்டாம்ப்ஸ்’ மூலம் வாழ்த்து செய்தி அனுப்பலாம் தபால்துறை அலுவலகம் தகவல்


முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, ‘இ–போஸ்ட்’ மற்றும் ‘மை ஸ்டாம்ப்ஸ்’ மூலம் வாழ்த்து செய்தி அனுப்பலாம் என்று தபால்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

‘இ–போஸ்ட்’ வாழ்த்து


இதுதொடர்பாக சென்னை மண்டல வட்ட தபால்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் 24–ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அவருடைய பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்கள் அஞ்சல் அலுவலகத்தின் ‘இ–போஸ்ட்’ சேவை மூலம் வாழ்த்து செய்தி அனுப்பலாம்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இருந்து இந்த சேவை மூலம் வாழ்த்து செய்தி அனுப்ப முடியும். இந்த ‘இ–போஸ்ட்’ மூலம் பிறந்தநாள் வாழ்த்து செய்தியை இந்தியாவின் எந்த மூலையில் இருந்து அனுப்பினாலும் ரூ.10 செலவு ஆகும்.

கடந்த ஆண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, 10 ஆயிரம் ‘இ–போஸ்ட்’ வாழ்த்து செய்தி சென்றடைந்தது.

‘மை ஸ்டாம்ப்ஸ்’ வாழ்த்து

இந்த ஆண்டு ‘மை ஸ்டாம்ப்ஸ்’ மூலமும் வாழ்த்து செய்தி அனுப்ப புதிய முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.300 ஆகும். இதில் மொத்தம் 24 அஞ்சல் தலைகள் இடம்பெறுவதற்கான காலியிடங்கள் இருக்கும்.

அவற்றில் 5 ரூபாய் மதிப்புள்ள 12 ‘மை ஸ்டாம்ப்சும்’, மீதமுள்ள 12 அஞ்சல் தலை காலியிடங்களில் முதல்–அமைச்சரின் புகைப்படமோ அல்லது வாழ்த்து செய்தி அனுப்புபவரின் புகைப்படமோ வைத்துக்கொள்ளலாம்.

அந்த புகைப்படங்களின் மேல், பிறந்த நாள் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவு செய்து கொள்ளலாம். புகைப்படத்தை ‘பென்டிரைவ்’ அல்லது டி.வி.டி.களிலோ கொண்டு வர வேண்டும். ஒரே ஒரு புகைப்படம் தான் 12 காலியிடங்களிலும் வைக்கப்படும். அதிகபட்சமாக 30 நிமிடத்துக்குள் எங்களுடைய ஊழியர்கள் அதை தயார் செய்து கொடுத்துவிடுவார்கள்.முகவரி

பின்னர், அவர்கள் அதை பெற்றுக்கொண்டு விரைவு தபால் மூலம் அனுப்பலாம். இதை விரைவு தபால் மூலம் சென்னையில் இருந்து அனுப்ப ரூ.17–ம், தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து அனுப்ப ரூ.30–ம் செலவு ஆகும்.

‘இ–போஸ்ட்’ மற்றும் ‘மை ஸ்டாம்ப்ஸ்’ மூலம் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்புபவர்கள் ‘செல்வி.ஜெ.ஜெயலலிதா, 81/36, வேதா நிலையம், போயஸ்கார்டன், சென்னை–600086’ என்ற முகவரியை தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்படும் பிறந்தநாள் வாழ்த்து செய்தி, அவருக்கு சென்றடையும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி