இலவச கட்டாய கல்வி விவகாரம் : பதில் மனுவில் முழு விவரம் இல்லை மத்திய அரசு அதிகாரிக்கு அபராதம்

இலவச கட்டாய கல்வி விவகார வழக்கில் மத்திய அரசு அதிகாரி தாக்கல் செய்த பதில் மனுவில் முழு விவரங்கள் இல்லை. எனவே, பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு அதிகாரிக்கு அபராதம் விதிக்கிறோம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றம் இந்தியா என்ற அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: 


மத்திய அரசு கொண்டு வந்துள்ள குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு, தமிழகத்தில் அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின்படி, தனியார் பள்ளிக்கூடங்களில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களை கொண்டு நிரப்பவேண்டும். அந்த மாணவர்களுக்கு செலவாகும் கல்வி கட்டணத்தை அரசு வழங்கும். ஆனால், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் சங்கம், இந்த கல்வியாண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களை சேர்க்க மாட்டோம். ஏற்கனவே சேர்த்த மாணவர்களுக்கு செலுத்தவேண்டிய கல்வி கட்டணத்தை அரசு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது என்று கூறியுள்ளது. எனவே, இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளரர். இந்த மனு பல மாதங்களாக விசாரணையில் உள்ளது. இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘இந்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஒரு ரூபாய்க்கூட மாநில அரசுக்கு தரவில்லை. இந்த கல்வி செலவினை தமிழக அரசுதான் வழங்கி வருகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து மத்திய அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவை பார்த்தோம். 

மனுவில் சரியான, முழுமையான விவரங்கள் எதுவும் இல்லை. எனவே, பதில் மனுவை தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு விதிக்கிறோம். இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச்18ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று மத்திய அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும், இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி