சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிரிழப்புசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி, 35 அடி ஆழ பனியில் புதைந்திருந்து 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்தார். அவருக்கு வயது 33.

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட ஹனுமந்தப்பா கடந்த 8-ம் தேதி உயிருடன் மீட்கப்பட்டார். 6 நாட்களுக்குப் பிறகும் 35 அடி ஆழத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை:

ஹனுமந்தப்பா நலமுடன் திரும்ப நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தனர். ஹனுமந்தப்பாவின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிதி பாண்டே என்ற பெண், தானாக முன்வந்து சிறுநீரகம் தானம் அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர் பிரிந்தது..

இந்நிலையில், இன்று காலை அவரது ஆழ்ந்த கோமா நிலைக்குச் சென்றார். இதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது.

சவால்களை விரும்பிய ஹனுமந்தப்பா:

ஹனுமந்தப்பா ராணுவத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அதில், 10 ஆண்டுகளை தன் விருப்பப்படி மிக சவாலான இடங்களிலேயே பணிபுரிந்துள்ளார்.2002 அக்டோபர் 25-ம் தேதி மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் 19-வது பட்டாலியனில் சேர்ந்தார். உடற்தகுதியும், அதிக ஈடுபாடும் கொண்டவர். ஆரம்பத்திலிருந்தே, சவாலான களங்களில் பணிபுரிய விரும்பினார்.

2003-2006 காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் மாஹோர் பகுதியில், ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கையில் பணிபுரிந்தார். தொடர்ந்து, மெட்ராஸ் ராஷ்ட்ரீய ரைபிள் பிரிவில், 2008 முதல் 2010 வரை பணிபுரிந்து, அதிகபட்ச துணிச்சலையும், தீவிரவாத எதிர்ப்பில் வீரத்தையும் காட்டினார்.

வடகிழக்கு மாநிலங்களில், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய அசாம் விடுதலை முன்னணி அமைப்புகளுக்கு எதிராக தானாக முன்வந்து பணிபுரிந்தார்.கடந்த 2015 ஆகஸ்ட் முதல் மிகுந்த உயரமுள்ள சியாச்சின் பனிமுகட்டில் பணிபுரிந்தார். 2015 டிசம்பர் வரை அப்பணியில் தொடர்ந்தார்.சிக்கலான மீட்புப் பணி:உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில், மிகப்பெரும் அச்சுறுத்தல் எதிரியின் துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல. ஊகிக்க முடியாத, மிக அபாயகரமான பருவநிலைதான்பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்க, 150 ராணுவ வீரர்கள் 2 நாய்களுடன் 24 மணி நேரமும் 5 நாட்களுக்கும் அதிகமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.கடந்த 2-ம் தேதி, சியாச்சினின் வடபகுதியில் 800 x 400 அடி என்ற அளவிலான பனிச் சுவர் உடைந்து சரிந்ததில், அதன் இடிபாடுகள் ராணுவ முகாமை மூடின. சுமார் 800 x 1000 மீட்டர் பரப்புக்குள் 10 வீரர்கள் சிக்கிக் கொண்டனர். சிறப்பான துளையிடும் கருவி, தோண்டும் கருவி, மின் ரம்பங்கள், 20 மீட்டர் ஆழம் வரை ஊடுருவி வெப்பம், உலோகத்தை கண்டறியும் ராடார்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் மூலம் மீட்பு பணி நடந்தது.பிரதமர் மோடி இரங்கல்:

ஹனுமந்தப்பா மறைவுகு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அவர் நம்மைவிட்டுப் பிரிந்து மனம் நொறுங்கச் செய்துவிட்டார். ஹனுமந்தப்பாவின் ஆன்மா அமைதி காணட்டும். ஆனால், ஹனுமந்தப்பாவினுள் இருக்கும் வீரருக்கு என்றைக்கும் மறைவு இல்லை. இந்திய தேசத்தின் பாதுகாப்புக்காக உம்மைப் போன்ற வீரர்கள் சேவை செய்தனர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி