இந்திய வனப்பணி இறுதி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், தமிழக அளவில் கோவையைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.பரத் (வயது 25) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப்பணியில் 110 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த நவம்பர் மாதம் முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை அகில இந்திய அளவில் 1,300-க்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 330 பேர் அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு தகுதிபெற்றனர். நேர்முகத்தேர்வு டெல்லியில் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. இந்த நிலையில், ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி இன்று மாலை வெளியிட்டது.அதன்படி, பிரதாப் சிங் என்பவர் முதலிடத்தையும், அபிலாஷா சிங் 2-ம் இடத்தையும் பிடித்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.பரத் (வயது 25) அகில இந்திய அளவில் 45-வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்தார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பரத், பி.டெக். (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினியரிங்) பட்டதாரி ஆவார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நரேந்திரன் 52-வது இடத்தையும், சேலத்தைச் சேர்ந்த திவ்யபாரதி 64-வது இடத்தையும் பிடித்தனர். மேலும், ஜி.இளமாறன் (69-வது இடம்), ஆர்.பிரேம்குமார் (70), கே.எஸ்.சதீஷ் (85), அருண் விக்னேஷ் (86), ஆர்.வினோதன் (100) ஆகியோரும் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.