தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா 22-ம் தேதி உரையாற்றினார். அத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கமாக, ஆளுநர் உரையைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால், பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால் இப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையிலான அரசின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அடுத்து அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
அதன்படி, இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை கூடுகிறது. காலை 11 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் குழு கூடி, பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.
இது 14-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடர் ஆகும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடைசி கூட்டத்தொடர் நடப்பதால், அரசு ஊழியர்கள் போராட்டம், அவிநாசி- அத்திக்கடவு திட்டம், மது விலக்கு, வெள்ள நிவாரணம் போன்றவை தொடர்பான பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.
தேமுதிக உறுப்பினர்கள்
கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேமுதிக உறுப்பினர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர் முழுவதும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவர்களை இடைநீக்கம் செய்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, அந்த 6 உறுப்பினர்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.