நவீனப்படுத்தப்பட்ட அஞ்சல் தலை சேகரிப்பு மையம்: தமிழகத்திலேயே முதல்முறையாக திருச்சியில் திறப்பு


இளைய தலைமுறையினரிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்ட அஞ்சல் தலை சேகரிப்பு நிலையம் அண்மையில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நவீனமயமாக்கப்பட்ட அஞ்சல் தலை சேகரிப்பு நிலையம் தமிழகத்திலேயே முதல் முறையாக திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது

என்பது குறிப்பிடத்தக்கது.மாணவர்கள் மட்டுமல்லாது, அனைத்து வயதினருக்கும் செல்லப் பிராணிகள் வளர்த்தல், புத்தகம் வாசித்தல், விளையாட்டு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும். அதேபோலத் தான் அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கமும்.அஞ்சல் தலை மற்றும் உறைகள் சேகரிப்பு பழக்கம் இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைமுறையில் இருந்து வருகிறது.அஞ்சல் தலை சேகரிப்பு வெறும் ஒரு பொழுதுபோக்கும் பழக்கம் மட்டுல்ல. அது வரலாற்றை எளிய முறையில் கற்றுக்கொள்ளும் செயல்வழிக் கற்றல் முறை என்கின்றனர் அஞ்சல் தலை சேகரிப்பவர்கள்.திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் தலை சேகரிப்பு நிலையம் மிகச் சிறிய இடத்தில் செயல்பட்டு வந்தது.இந்தநிலையில், இளைய தலைமுறையினரிடையே அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில், பெரிய அளவில் நவீன வசதிகளுடன் கூடிய அஞ்சல் தலை சேகரிப்பு நிலையம் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு, நமது நாட்டின் பிறப்பு என்ற தலைப்பில், அஞ்சல் தலைகள் மூலம் சுதந்திரப் போர், இந்திய தேசியக் காங்கிரஸ் உருவாக்கம், சுதேசி இயக்கம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம் என வரலாற்றைச் சொல்லும் பல்வேறு அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதேபோன்று, கடைசி மைல் கல் வரை கடிதங்களைக் கொண்டு சேர்த்தல், இந்திய கலாச்சாரத்தைக் கொண்டாடுதல் ஆகிய தலைப்புகளிலும் ஏராளமான பழமையான அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இந்த அஞ்சல் தலை சேகரிப்பு நிலையத்தில் புதிய அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள், வெளியீட்டு உறை மற்றும் ஆண்டுதோறும் வெளிவந்த அஞ்சல் தலைகளின் தொகுப்பு ஆகியவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்.

மத்திய அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து வேலைநாட்களிலும் இந்த நிலையத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.இதுகுறித்து முதுநிலை அஞ்சல் அதிகாரி டி.ராஜசேகர் ‘தி இந்து’விடம் கூறியது:

இந்த நிலையத்தைப் பார்வையிட வரும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில் உறைகளைப் பிரிப்பது, சைகை மொழிச் சொல் விளையாட்டு, நேரில் பார்த்த அஞ்சல் தலைகளை நினைவில் வைத்து எழுதுதல், அஞ்சல் தலை வடிவமைத்தல் என 4 விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த வீடியோ காட்சியும் திரையிடப்படுகிறது. மேலும், வினாடி- வினா, கருத்தரங்கம் ஆகியவையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

அஞ்சல் தலை வைப்புக் கணக்கு

இந்த நிலையத்துக்கு கல்வி நிறுவனங்கள் முன் அனுமதி பெற்று மாணவர்களை குழுவாக அழைத்து வந்து பார்வையிடலாம். குறைந்தபட்சமாக ரூ.200 செலுத்தி அஞ்சல் தலை வைப்புக் கணக்கு தொடங்கி, புதிதாக வெளியாகும் அஞ்சல் தலைகளை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலையத்தில் பொதுமக்கள், அஞ்சல் தலை சேகரிப்பவர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உறுப்பினராகச் சேர்ந்து அஞ்சல் தலை வைப்புக் கணக்கு தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மேலும், விவரங்கள் அறிய தொடர்பு அலுவலர் ராஜேஷை 97913 88381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி