சென்னை,
தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், வங்கி ‘ஏடிஎம்’ மூலமும், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், தபால் அலுவலக ‘ஏடிஎம்’ மூலமும் பணம் எடுக்கும் முறை 6 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வர உள்ளது.
தபால் அலுவலகத்தில் ‘ஏடிஎம்’
சென்னை பார்க் டவுன் தபால் நிலையத்தில் ‘ஏடிஎம்’ சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ திறந்துவைத்தார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். பின்னர் நிருபர்களிடம் இவர்கள் கூறியதாவது:–
தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ‘ஏடிஎம்’ மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், வங்கி ‘ஏடிஎம்’ மூலமும், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், தபால் அலுவலக ‘ஏடிஎம்’ மூலமும் பணம் எடுக்கும் முறையை அமல்படுத்துவதற்காக முறையாக ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்த உடன் 6 மாதங்களுக்குள் இந்த சேவை அமலுக்கு வர உள்ளது.
புதிதாக ஆயிரம் ‘ஏடிஎம்’ எந்திரங்கள்
சென்னை நகர மண்டலத்தின் கீழ் திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகிய 4 இடங்களில் அடுத்த வாரம் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஏடிஎம்’ எந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளன.
வரும் மார்ச் 31–ந் தேதிக்குள் நாடு முழுவதும் ஆயிரம் ‘ஏடிஎம்’ எந்திரங்கள் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் மேலும் 94 எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.
இணையதள சேவை
வங்கிகளை போன்று அஞ்சலக சேமிப்பு வாடிக்கையாளர்களும் இணையதளம் வாயிலாக தங்களது கணக்குகளை கையாளும் வகையில் இணையதள வங்கி சேவையை பரிசோதனை முறையில் அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த பரிசோதனை முடிந்த பின்னர் அஞ்சலக சேமிப்பு வாடிக்கையாளர்களும் இணையதளம் மூலம் தங்களது கணக்குகளை கையாள முடியும்.
ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு அனுப்புவது, சேமிப்பு கணக்குகளில் இருந்து பணத்தை மற்றொரு சேமிப்பு கணக்குக்கு மாற்றுவது உள்பட வங்கிகள் போன்று அனைத்து வசதிகளும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
ஆட்டோ டிரைவர்களுக்கு
இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால், விபத்துகளில் இறப்பு ஏற்பட்டால் அவருடைய குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதன் மூலம் சென்னை பார்க் டவுன் தபால் அலுவலகத்தில் மட்டும் ஒரே நாளில் 80 கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த திட்டம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Source : http://www.dailythanthi.com/News/State/2016/02/23020905/Post-office-bank-account-holders-money-in-etiemkal.vpf
Source : http://www.dailythanthi.com/News/State/2016/02/23020905/Post-office-bank-account-holders-money-in-etiemkal.vpf