பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள பதன்கோட் விமானப்படை தளத்தில் கடந்த மாத துவக்கத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 6 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 6 பேரையும் கமாண்டோ படையினர் சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு விமானப்படை தளத்துக்கு செல்லும் வழிகள் நன்கு தெரிந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தனது பெண் உளவாளிகள் மூலமாக பெற்றிருக்கலாம் என கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு விமானப்படை அதிகாரி ஒருவரை இந்திய உளவுத்துறையினர் கைது செய்தனர். பேஸ்புக் மூலமாக ஐஎஸ்ஐ பெண் உளவாளி ஒருவர் அவரை தனது வலையில் விழ வைத்து பின்னர் பிளாக்மெயில் மூலம் ரகசியங்களை பெற்றது தெரியவந்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் அஞ்சலக அலுவலகம் வழியாக அனுப்பப்படும் ராணுவம் குறித்து தகவல்கள் திருடு போவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உளவுத்துறையினர், சிஐடி பார்டர் இன்டலிஜென்ஸ் மற்றும் லோக்கல் போலீஸ் ரகசியமாக விசாரணை நடத்தினர். இதில் பொக்ரான் மற்றும் பலோத்ரா அஞ்சலகங்களில ்பணியாற்றி வந்த கிஷன்பால் சிங், நரேந்திர சர்மா உள்பட 4 பேர் ராணுவ தகவல்களை ஐஎஸ்ஐ உளவாளிக்கு விற்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதில் கிஷன்பால் சிங் பொக்ரான் அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டராகவும், நரேந்திர சர்மா கம்ப்யூட்டர் ஆபரேட்டராகவும் பணியாற்றி வந்தனர்.
ராணுவ வீரர்களின் முகவரிகள், ராணுவ ஒத்திகை நடைபெறும் தேதி ஆகிய விவரங்களை இவர்கள் பாகிஸ்தான் உளவாளிக்கு அளித்தது விசாரணையில் ெதரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.