பேரார்வத்தால் திணறி முடங்கியது 'ஃபிரீடம்251' முன்பதிவு

ரூ.251 விலையில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்க பொதுமக்கள் பேரார்வம் காட்டியதால் வலைதளம் திணறி 'ஃபிரீடம்251' ஆன்லைன் முன்பதிவு சேவையே முடங்கியது.

இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போன் நேற்று (புதன்கிழமை) அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் ரூ.251-க்கு ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய இந்த நிறுவன திட்டம் ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கேற்ப விற்பனைக்கான இணையதளம் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு துவக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே திணறி முடங்கியது.

இது தொடர்பாக அந்த இணைய பக்கத்திலேயே ஒரு விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.அதில், "வாடிக்கையாளர்களே தங்களது பேராதரவு எங்களுக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் அளித்த மிகுதியான ஆதரவால் ஒரு விநாடிக்கு 6 லட்சம் ஹிட் எங்கள் இணையதளத்துக்கு கிடைத்துள்ளது. இதனால், எங்கள் சர்வர்கள் முடங்கியுள்ளது.

எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் சர்வர் பிரச்சினையை சரிசெய்துவிடுவோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 24 மணி நேரத்துக்குப் பின்னர் தாங்கள் http://freedom251.com/cart இணையம் வாயிலாக மொபைலுக்கான பதிவை தொடங்கலாம் என்பதை கனிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூன் 30-ம் தேதிக்குள் டெலிவரி செய்யப்பட்டுவிடும். இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு வருட வாரண்டியை அந்த நிறுவனம் அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 650 சேவை மையங்கள் உள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃப்ரீடம்-251 சிறப்பம்சங்கள்:

3ஜி சேவைக்கு பயன்படுத்தும் விதமாக உள்ள இந்த ஸ்மார்ட் போனில் 4 அங்குல தொடு திரை, குவால்கம் 1.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராஸசர், 1ஜிபி ராம் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்கு தளத்தைக் கொண்டு இயங்கும். போனில் 8ஜிபி சேமிப்பு வசதியும், 32 ஜிபி மைக்ரோ எஸ்டி மெமரி கார்டு வரை பயன்படுத்த முடியும். 3.2 மெகாபிக்ஸல் கேமராவுடன் இது வந்துள்ளது. 1,450 எம்ஏஹெச் பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போனில் கூடுதல் வசதிகளாக பெண்கள் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, மீனவர்கள், விவசாயிகள், மருத்துவ சேவைக்கான செயலிகளும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளும் உள்ளன.

இந்த நிறுவனம் ஏற்கெனவே ரூ.2,999 விலையில் 4ஜி சேவைக்கு ஏற்ற போனை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் ரூ.1,500 வரையில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட் போன்களை தயாரிக்கிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்திய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு தொழில்துறை ஊக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் பார்க்கப்படுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி