தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்.சி.ஈ.ஆர்.டி.), 5, 8, 10-ம் வகுப்பு மாணவரது கற்றல் நிலையை ஆய்வுசெய்து ஒப்பீட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு அறிக்கையின்படி, தமிழ்நாட்டு 10-ம் வகுப்பு மாணவரது கற்றல் திறன் தேசிய சராசரியைவிட எல்லாப் பாடங்களிலும் பின்தங்கியுள்ளது தெளிவாகிறது.
அதேநேரத்தில், இன்னும் நான்கு மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வரும். அப்போது ஒட்டுமொத்தத் தேர்ச்சி 85 விழுக்காட்டுக்கு மேல் இருக்கப்போவதையும், மொழிப்பாடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களிலும் தமிழக மாணவர்கள் சதமடிக்க இருப்பதையும் கண்டு வியக்கப்போகிறோம்.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி. நாம் எதைக்கொண்டு தமிழகக் கல்வியை மதிப்பிடுவது - என்.சி.ஈ.ஆர்.டி. அறிக்கைப்படியா, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் அடிப்படையிலா? பூனை கண்ணை மூடிக்கொண்டதுபோல் தமிழகக் கல்வித் துறை இயங்குகின்றது. தொடக்கப் பள்ளி நிலையினின்று கல்வித் தரத்தைப் பேண ஆய்வுக்கோவை வகுத்துள்ள பணிகளைத் துறந்துவிட்டது. 10, 12-ம் வகுப்புகளுக்குக் காட்டும் ஆர்வம் தொடக்கப்பள்ளி நிலையில் இல்லை. அஸ்திவாரம் பலமாக அமைக்கப்பட்டால் மாணவர் தாமாக முன்னேற்றப் பாதையில் செல்வர். அதற்கு முன், குழந்தை வதைப் படலத்துக்கு முடிவுகட்ட வேண்டும்.
- ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.