வெளிநாட்டு கல்லூரிகள் இந்தியாவுக்கு வருவதை எதிர்ப்பது பகுத்தறிவுக்கு தடைபோடுவது போல ஆகும் என்று தமிழக முன்னாள் கல்வி அமைச்சர் செ.அரங்கநாயகம் கூறினார். உலக வர்த்தக அமைப்பு (WTO) உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர்களின் மாநாடு கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி முடிவடைந்தது. இந்த மாநாட்டில், சேவைத் துறையில் வர்த்தகம் பற்றிய பொது ஒப்பந்தம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன
ஆனால் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எட்டப்பட்ட உடன் பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வ மாக எதுவும் வெளியிடப்பட வில்லை. உயர் கல்வியில் வெளி நாட்டு நிறுவனங்கள் நுழைய வகை செய்யும் பொது ஒப்பந் தத்தில் இந்தியா கையெழுத் திட்டால், உயர்கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிடும். வெளிநாடு களின் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்று தமிழக அரசியல் தலைவர்களும், கல்வியாளர் களும் அச்சத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் கருத்து தெரிவித்த தமிழக முன்னாள் கல்வி அமைச்சர் செ.அரங்கநாயகம், “இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எதிர்ப்பு உள்ளது. எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணம் கல்வி வியாபாரம் ஆகிவிடும் என்பதுதான். இதனால் பாதிக்கப்படுவது கல்வியை வியாபாரமாக நடத்திவரும் சுயநிதி கல்லூரிகள்தான்” என்றார்.
தி இந்து’விடம் அவர் மேலும் கூறியதாவதுஉயர்கல்வியில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிக்க வகை செய்யும் ஒப்பந்தத்துக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள்.தமிழகத்தில் சுயநிதி கல்லூரி களை நடத்திவரும் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு வரும் நஷ்டத்தை மக்களின் பாதிப்பு களாகக் கூறுகிறார்கள். பகுத்தறிவு பேசும் திராவிட இயக்கத் தலைவர் கள் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களை எதிர்ப்பதால் பகுத்தறிவு பாதையிலிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டார்கள் என்பது தெரிகிறது.
வெளிநாட்டு கல்வி நிறுவனங் கள் தமிழகத்துக்கு வவதால் இங்குள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படலாமே ஒழிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாணவர் களுக்கு உலகத் தரத்திலான கல்வி கிடைக்கும். அவர்கள் உயர்தர கல்வி, தொழில்நுட்ப அனுபவம், நல்ல ஆராய்ச்சி அனுபவம், நோபல் பரிசு பெறக்கூடிய விஞ்ஞானிகளை உருவாக்கும் கல்வி போன்றவற்றை பெறலாம்.உயர்கல்வி நிறுவனங்கள் வர தடை போடுவது அறிவு வளர்ச்சிக் கும், பகுத்தறிவு வளரவும் தடை போடுவது போல் ஆகும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை கை நீட்டி வரவேற்க வேண்டியது நமது கடமை. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு வெளிநாட்டு அனுபவம் மிக மிக அவசியம். நான் கல்வி அமைச்சராக இருந்தபோது இங்குள்ள பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு நிபுணர்களை துணை வேந்தராக நியமிக்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால், பல்கலைக்கழக சட்டத்தில் அதற்கு இடமில்லாமல் போனதால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.பள்ளிக் கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விட மாநில பாடத் திட்டத்தின் தரம் குறைவு. இது எல்லாருக்குமே தெரியும். ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டியதில்லை. அதேபோல், டில்லி பல்கலைக்கழக பி.காம். பாடத்திட்டத்தை விட நமது பல் கலைக்கழகங்களின் பி.காம். பாடத் திட்டம் தரத்தில் குறைவுதான். அதேபோல், உலக அளவில் ஒப்பிடும்போது நமது பொறியியல் கல்வியின் தரம் குறைவுதான்.வெளிநாட்டு கல்வி நிறுவனங் கள் இங்கு வரும்போது நமது மாணவர்களுக்கு உலகத் தரத் திலான கல்வி கிடைக்கும். எனவே, இதை எதிர்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். நம் நாட்டிலும் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும். இங்கு வரும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கலாம். இதற்கு சாதி எதுவும் பார்க்கக்கூடாது. சேவைப் பிரிவின் கீழ் கல்வி கொண்டுவரப்பட்டால், அது ஒரு வணிகப் பொருளாக மாறிவிடும் என்று சொல்கிறார்கள். போர்டு நிறுவனம் இங்கு வந்து ஒரு பொருளை (கார்) தயாரிப்பதற்கும், கேம்பிரிட்ஜ் நிறுவனம் இங்கு வந்து ஒரு கல்லூரியை தொடங்கி கல்வி அளிப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. பொருள் வேறு, கல்வி வேறு. அந்த நிறுவனம் அளிக்கும் கல்வி நம் மாணவர்களிடையே, நம் நாட்டிலேயே தங்கும் என்றார்.