பருவநிலை மாற்றம் கருத்தரங்கு: இத்தாலியில் உரை நிகழ்த்தி அசத்திய திருச்சி மாணவர்


பருவநிலை மாற்றம் தொடர்பாக இத்தாலி நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் உரைநிகழ்த்தியுள்ளார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஏ.சிவச்சந்திரன்.

தட்பவெட்ப நிலையில் ஏற்படும் பல்வேறுமாற்றங்களின் விளைவாக பருவ மழை குறைவு,வெப்பம் அதிகரித்தல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே இன்டர்நேஷனல் சென்டர் பார் தியோரெடிக்கல் பிசிக்ஸ் என்ற நிறுவனம் கடந்த மாதம் இத்தாலியில் ஏற்பாடு செய்திருந்த ‘10ஆண்டுகளில் தட்பவெட்ப நிலை மாற்றம் மற்றும் எதிர்கால கணிப்பு’என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று உரை நிகழ்த்தி திரும்பியுள்ளார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வரும்மாணவர் ஏ.சிவச்சந்திரன்.

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி அழகுதுரையின் மகன் இவர். கடந்த 3 ஆண்டுகளாக பேராசிரியர் யோகானந்தன் வழிகாட்டுதலுடன் கடந்த காலதட்பவெட்ப நிலை (Paleo Climate) குறித்து சிவச்சந்திரன் ஆய்வுமேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து சிவச்சந்திரன் ‘தி இந்து’விடம் கூறியது: பழமையை அறிந்துகொண்டால் எதிர்காலத்தை கணிக்கலாம் என்றகோட்பாட்டின் அடிப்படையில் இந்த ஆய்வை நான் மேற்கொண்டேன்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம்வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை தான் தமிழகம், கேரளா,கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தண்ணீரைதருகிறது. இங்கு பெய்யும் மழையில் பெரும்பகுதி பல்வேறு ஆறுகள்வழியாக அரபிக்கடலில் சென்று கலந்துவிடுகின்றன.

பருவநிலை மாற்றம் காரணமாக குறைந்த காலத்தில் அதிக மழைப்பொழிவு, மழையே இல்லாமை அல்லது வெப்பக் காற்று உள்ளிட்டபல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடல் பரப்பில் நிலவும் வெப்பம்தான் நிலப்பகுதியில் நிலவும் தட்பவெட்ப நிலையை தீர்மானிக்கிறது.

எனவே, கடந்த 10,000 ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை எந்தஅளவுக்கு பெய்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக அரபிக்கடலின் தென் கிழக்குப் பகுதியில் 500 மீட்டர் ஆழத்தில் பிரத்யேக டிரில் மூலம் போர் செய்து 6 அடி அளவுக்கு மணல் படிமங்களைச் சேகரித்தேன். சேகரிக்கப்பட்ட மணல் படிமங்களை ஆய்வகத்துக்கு கொண்டு வந்து அதிலுள்ள நுண்ணுயிர்கள், அதன்வாழ்வாதாரச் சூழல், வெப்ப நிலை, உப்புத் தன்மை ஆகியவற்றைக்கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தட்பவெட்ப நிலைகுறித்த புள்ளி விவரங்களைச் சேகரித்தேன். இந்த ஆய்வின் முடிவுகள்குறித்துதான் இத்தாலியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினேன்.

பல்வேறு நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 157 பேர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். அமெரிக்கா மேரிலாண்ட் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் மைய ஆராய்ச்சியாளர் முனைவர் கெல்லி ஹலிமெடா கில்போர்ன், தங்களது பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பயிலரங்கில் பங்கேற்க தன்னை அழைத்துள்ளார் என்றார் சிவச்சந்திரன் பெருமையுடன்.


இதுகுறித்து பேராசிரியர் யோகானந்தன் கூறியபோது, “இந்த ஆய்வில் மீதமுள்ள பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும், அதன் பிறகு பருவநிலை மாற்றத்தைச் சரி செய்வதற்கான மாதிரிகளைத் திட்டமிடுவதற்கும், ஆராய்ச்சிகளுக்கும், எதிர்காலத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான கணிப்புகளுக்கும் இது பேருதவியாக இருக்கும்”என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி