தகுதியின் அடிப்படையில் மட்டுமே வெற்றி பெறமுடியும்; டி.என்.பி.எஸ்.சி. தலைவர் கே.அருள்மொழி பேட்டி -

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

குரூப்-2 ஏ தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், குரூப்-2 ஏ தேர்வை நேற்று நடத்தியது. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் கே. அருள்மொழி, செயலாளர் விஜயகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டாளர் ஷோபனா, சென்னை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

பிறகு டி.என்.பி.எஸ்.சி.தலைவர் அருள்மொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

1947 பணியிடங்கள்

உதவியாளர் பணியிடங்கள் பல்வேறு துறைகளில் மொத்தம் 1947 காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப குரூப்-2 ஏ தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி உள்ளது.

இந்த தேர்வு எழுத 2 ஆயிரத்து 87 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுத விண்ணப்பித்தனர். அவர்களில் 3 லட்சத்து 90ஆயிரம் பேர் ஆண்கள், 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் பெண்கள். சென்னையில் மட்டும் 209 மையங்களில் 91 ஆயிரத்து 939 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அவர்களில் சிலர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் 42ஆயிரத்து 965 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நடந்து முடிந்த குரூப்-2 தேர்வு, குரூப்-1 தேர்வு முடிவுகள் அனைத்தும் எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிடுவோம்.

தகுதி உள்ளவர்கள்

ஒவ்வொரு ஆண்டுக்கும் நடத்தப்படும் தேர்வுகளின் விவரம், அவை அறிவிக்கப்படும் தேதி, தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர திட்ட அறிக்கையை ஒருவாரத்திற்குள் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எந்த தேர்விலும் தகுதி அடிப்படை மற்றும் இடஒதுக்கீடு முறையில் தான் தேர்ந்துஎடுக்கப்படுவார்கள்.

இப்போது போட்டி பெருகி உள்ளது. எனவே தேர்வு எழுதுபவர்கள் அதிகமாக முயற்சி எடுத்து படித்தால் நன்றாக தேர்வு எழுதமுடியும். அவ்வாறு தேர்வு எழுதினால் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வெற்றி பெறமுடியும்.

இவ்வாறு அருள்மொழி தெரிவித்தார்.

77 சதவீதத்தினர் எழுதினார்கள்

நேற்று நடைபெற்ற குரூப்-2 ஏ தேர்வை 77 சதவீதத்தினர் எழுதினார்கள். 23 சதவீதத்தினர் தேர்வு எழுத வரவில்லை.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி