போலி ஆசிரியர்களை ‘களை’ எடுக்க உத்தரவு!

போலி சான்றிதழ் புகார்களால், 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்ட போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் நடத்தப்பட்டவிசாரணையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன், 37, வேலூர் மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி கிராம அரசு தொடக்கப்பள்ளியில், போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவரையும், போலி சான்றிதழ் சப்ளை செய்த கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.இதேபோல், வேலூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர் புதூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், கிருபா என்ற பெயரில் போலி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியராக சேர்ந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். பின், இருவரும் ’சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.இவர்களை தொடர்ந்து, வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர்ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஆசிரியராக பணியாற்றிய கிருஷ்ணகிரி மாவட்டம், புதுப்பேட்டையை சேர்ந்த அருள் சுந்தரம் என்பவர் கடந்த 2ம் தேதி முதல், பணிக்கு வரவில்லை. அதனால், அவர்மீது சந்தேகம் அடைந்து அவரது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.


இதில் அவர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.தொடக்க கல்வித்துறை விசாரணை நடத்தியதில், போலி சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: 2001ம் ஆண்டு முதல் 2004 வரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோருக்கு உடனடியாக ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில், போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து, போலி படிப்பு சான்றிதழ் கொடுத்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆசிரியராகியுள்ளனர்.அரசுப் பணி மற்றும் போலீஸ் பணியில் சேருவோருக்கு அவர்கள் மீது வழக்கு உள்ளதா? சான்றிதழ்கள் சரியா என விசாரித்து, அறிக்கை பெற்ற பின்பே, பணி வாய்ப்பு தரப்படும். ஆனால், ஆசிரியர் பணிக்கு பயிற்சி காலம் முடிந்த பின்பே, சான்றிதழ் பற்றி விசாரணை நடத்தப்படும்.


அதனால், பல இடங்களில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உதவியுடன் போலி சான்றிதழ்கள் விவகாரம் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 1.5 லட்சம் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மையை சோதிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகளின் இந்த ஆய்வில், பல ஆசிரியர்கள் சிக்குவர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி