தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, சேலம், நெல்லை பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர் .
பல்வேறு தரப்பினர் கோரிக்கையை கருத்தில் கொண்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு கடந்த வாரத்தில் அனுமதி அளித்தது. இது ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் விலங்குகள் நல (பீட்டா ) அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர் .
நீதிபதி பானுமதி விசாரிக்க மறுப்பு : இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக பானுமதி தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டது. ஆனால் பானுமதி, மீண்டும் இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை, விசாரித்தால் உள்நோக்கம் கற்பிக்க வாய்ப்பு ஏற்படும்; எனவே வேறு அமர்வுக்கு மாற்றுமாறு கேட்டு கொண்டார். இதற்கிணங்க இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோரை கொண்ட பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது .
வழக்கில் மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹ்தி , தமிழக அரசு தரப்பில் ராஜேஸ்வரராவ் சேகர் நாப்டே, விலங்குகள் நல அமைப்பு தரப்பில் அரிமா சுந்தரம், வேணுகோபால் ஆகியோர் ஆஜராகி வாதாடினர் . காளை வதை தொடர்பாக புதிய அறிவிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். புதிய அறிவிக்கையில் ஸ்பெயினில் நடப்பது போல் வதை செய்யும் சண்டை அல்ல, கோர்ட் கருதினால் நிபந்தனைகள் விதிக்கட்டும் ஏற்று கொள்கிறோம் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது .
தடை விதித்த அறிவிக்கையை மீற முடியாது. காளைகள் வதை செய்யப்படுவதை ஏற்க முடியாது என்றும் பீட்டா அமைப்பினர் தரப்பில் வாதிட்டனர் . இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர் . ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை ஆணைக்கும் இடைக்கால தடை விதித்தனர்.
சோகத்தில் மக்கள் :
தடையால் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மதுரையில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுர பகுதி மக்கள் ஜல்லிக்கட்டுக்கான காளைகள் கொண்டு வந்து கொண்டிருந்தனர், பல வீரர்கள் பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் கோர்ட் உத்தரவால் இப்பகுதி மக்கள் சோகத்துடன் உள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்கவிருந்த இடம் களை இழந்தது.