மகப்பேறு விடுப்பை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க மறுக்கக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் பிரவீனாமேரி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- 

நான், 23.12.2009 அன்று வருவாய்த்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்தேன். 2015-ம் ஆண்டு துணை தாசில்தார் பதவி உயர்வு பட்டியலில் எனது பெயர்சேர்க்கப்படவில்லை. காரணம் கேட்ட போது, நான் 5 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்று தெரிவித்தனர். நான், 272 நாட்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தேன். இந்த விடுமுறை காலத்தை பணிக்காலமாக சேர்க்கவில்லை.

மகப்பேறு விடுப்பு காலம் என்பது ஊதியத்துடன் அரசு வழங்கும் சலுகையாகும். அதனை, பணிக்காலத்தில் சேர்க்காமல் 5 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்று கூறி பதவி உயர்வு வழங்க மறுப்பது நியாயமற்றது. எனக்கு, துணை தாசில்தார் பதவி உயர்வை பெறுவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது. எனவே, எனக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வருவாய்த் துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விசுவலிங்கம் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:- 

மகப்பேறு விடுப்பை பணிக் காலத்தில் தான் சேர்க்க வேண் டும். மகப்பேறு விடுப்பை காரணம் காட்டி, மனுதாரர் 5 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்று கூறி அவருக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க மறுப்பது சரியல்ல. மகப்பேறு விடுப்பை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க மறுக்கக்கூடாது. மனுதாரரின் பெயரை துணை தாசில்தார் பதவி உயர்வு பட்டியலில் சேர்ப்பது குறித்த முன்மொழிவை வருவாய்த்துறை ஆணையர் 4 வாரத்துக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன்படி, மனுதாரர் பெயரை துணை தாசில்தார் பட்டியலில் அரசு சேர்க்க வேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி